செயல் தலைவர் பதவி அடுத்து யாருக்கு.. டாக்டர் ராமதாஸின் சாய்ஸ் இவரா?.. பரபரக்கும் பாமக!

Su.tha Arivalagan
Sep 11, 2025,06:37 PM IST

விழுப்புரம்: பாமக.,வின் செயல் தலைவர், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் அன்புமணி உடனடியாக நீக்கப்படுவதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ள அதேசமயம், அந்தப் பதவி நீடிக்கும் என்றும் கூறி புள்ளி வைத்துள்ளார்.


டாக்டர் ராமதாஸுக்கும், அவரது மகன் டாக்டர் அன்புமணிக்கும் இடையிலான மோதல் மிகப் பெரிய அளவிலான விஸ்வரூபத்தை இன்று எட்டியுள்ளது. கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அன்புமணியை நீக்கியுள்ளார் டாக்டர் ராமதாஸ்.


இதில்தான் இந்த விவகாரம் போய் முடியும் என்று பலரும் எதிர்பார்த்தாலும் கூட இந்த முடிவு வந்து விட்டதே என்ற அதிர்ச்சியும் பாமகவினர் மத்தியில் நிலவுகிறது. காரணம், இது நடக்கக் கூடாது என்றுதான் பலரும் நினைத்து வந்தனர். இருவரும் இணைந்தால்தான் பாமகவுக்குப் பலம் என்பது அவர்களது கருத்து. ஆனால் தந்தை மகன் ஆகிய இருவருமே யாருமே ஒருவருக்கு ஒருவர் இறங்கிப் போக முன்வரவில்லை என்பதால் தற்போது அன்புமணி நீக்கத்தில் வந்து இது முடிந்துள்ளது.




தற்போது  செயல் தலைவர் பதவியிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் அன்புமணியை நீக்கியுள்ளார் டாக்டர் ராமதாஸ். அதேசமயம், செயல் தலைவர் பதவி நீடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், 

செயல் தலைவர் பதவி இருக்கும். அது யாருக்கு கொடுப்பது என்பதை உரிய நேரத்தில் முடிவு செய்வேன் என செய்தியாளர்கள் கேள்விக்கு ராமதாஸ் பதிலளித்துள்ளார்.


இதன் மூலம் அந்த பதவிக்கு யாரை அவர் முடிவு செய்து வைத்துள்ளார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நிச்சயம் அந்தப் பதவிக்குரியவரை இன்னேரம் முடிவு செய்திருப்பார் ராமதாஸ் என்பதில் சந்தேகமில்லை. பெரும்பாலும் தனது மகள் காந்திக்கே அந்தப் பதவியை ராமதாஸ் கொடுக்கலாம் என்று கருதப்படுகிறது. அன்புமணியின் மூத்த சகோதரியும், சம்பந்தியுமான காந்தி சமீப காலமாக கட்சி நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் கூட ராமதாஸுக்கு அடுத்த இருக்கையில் அமர வைக்கப்பட்டார். எனவே காந்தியே அடுத்து செயல் தலைவராகலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.


இவரது மகனைத்தான் தனது மகளுக்கு கட்டி வைத்துள்ளார் அன்புமணி. அதேபோல காந்தியின் மூத்த மகனான முகுந்தனைத்தான் கட்சியின் இளைஞர் சங்க பதவிக்கு ராமதாஸ் நியமித்தபோது கடுமையாக எதிர்த்து வெளிப்படையாக போர்க்கொடி உயர்த்தினார் அன்புமணி என்பதும் நினைவிருக்கலாம்.


பாமகவின் கிளை அமைப்புகளில் ஒன்றான, பசுமை தாயகம் அமைப்பிற்கு அன்புமணியின் மனைவி செளமியா அன்புமணி தலைவராக உள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என செய்தியாளர்கள் கேட்டதற்கு சிரித்தபடி பதிலளித்த ராமதாஸ், அது தேவையில்லாதது என்றார்.