TVK Govt: ஆட்சி அமைக்க விஜய்க்கு ஆதரவு தரப் போவது யார்.. யாரெல்லாம் ரெடியா இருக்கா?
சென்னை : தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக விஜய்யின் தவெக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை. தவெக ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் மற்ற கட்சிகளின் ஆதரவை பெற வேண்டும்.
தற்போதைய நிலவரப்படி தவெக 108 இடங்களில் வென்றுள்ளது. பெரும்பான்மைக்கு இன்னும் 10 இடங்கள் தேவை. பெரும்பான்மைக்குத் தேவையான எண்ணிக்கை இல்லாததால் பிற கட்சிகளின் ஆதரவை தவெக நாடியுள்ளதாக தெரிகிறது.
தவெக.,விற்கு ஆதரவு தருவதா என்பது பற்றி காங்கிரஸ் ஆலோசித்து வருவதாக அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் தெரிவித்துள்ளார். ஒருவேளை திமுக கூட்டணியை உடைத்துக் கொண்டு, தவெக.,விற்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தாலும், காங்கிரசிடம் 5 எம்எல்ஏ.,க்கள் தான் உள்ளன. பெரும்பான்மை நிரூபிக்க தவெக.,விற்கு அது போதாது.
காங்கிரஸ் தவிர்த்து, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 இடங்கள், அதாவது 3 பேரிடமும் மொத்தமாக 6 இடங்கள் உள்ள. எனவே இந்த நான்கு கட்சிகளையும் சேர்த்தால் மொத்தமாக 11 எம்எல்ஏக்கள் கிடைப்பார்கள்.
இதில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும், விஜய் ஆதரவு கேட்டால் பரிசீலிப்போம் என்று கூறியுள்ளனர். திருமாவளவனும் மறைமுகமாக தவெகவை ஆதரிப்பது போல பேசியுள்ளார். காங்கிரஸ் கட்சி கண்டிப்பாக ஆதரவு தர முன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு வேளை இதில் எண்ணிக்கை கிடைப்பதில் குழப்பம் ஏற்பட்டால் செங்கோட்டையன் மூலமாக, அதிமுகவில் உள்ள அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களின் ஆதரவைப் பெற தவெக முயற்சிக்கலாம் அல்லது பாமகவை அணுக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
அதிமுக நேரடியாக விஜய்க்கு ஆதரவு தருமா என்று தெரியவில்லை. காரணம், பாஜகவை அது பகைத்துக் கொள்வதாக மாறி விடும். அதற்குப் பதில் பாஜகவின் அனுமதியோடு, விஜய்யை ஆதரிக்க அதிமுக முன்வரலாம். அப்படி நடந்தால் அது விஜய்க்கும் கூட பாதுகாப்பாகவே இருக்கும்.
என்ன நடக்கப் போகிறது, யார் தவெகவை ஆதரிக்கப் போகிறார்கள் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.