கூவத்தூர் ஃபார்முலாவை கையில் எடுக்கிறதா தவெக? அவரச எம்எல்ஏ.,க்கள் கூட்டத்திற்கு இது தான் காரணமா?
சென்னை : தவெக எம்எல்ஏ.,க்கள் கூட்டம் சென்னை மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் முதல்வர் விஜய் தலைமையில் இன்று பிற்பகல் நடைபெற்றது. தவெக எம்எல்ஏ.,க்கள் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்குவதால் தான் அவர்களை அழைத்து விஜய் ஆலோசனை நடத்த உள்ளதாக சொல்லப்பட்டாலும் உண்மை காரணம் வேறு என்று அரசியல் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.
முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சி பொறுப்பேற்று நவம்பர் 10ம் தேதியான நேற்றுடன் ஆறு மாதங்கள் நிறைவடைந்து விட்டது. ஏற்கனவே தவெக அரசுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து எதிர்ப்புக் குரல் எழுப்பி வருகின்றனர். இதனால் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தவெக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் எப்போது வேண்டுமானாலும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர காத்திருக்கின்றனர்.
ஆறு மாதத்திற்கு முன் தவெக அரசு பொறுப்பேற்ற போது இருந்த அரசியல் களம் வேறு, இன்று இருக்கும் நிலைமை வேறு. அன்று அதிமுக, திமுக கட்சிகள் தான் தவெக அரசுக்கு எதிராக இருந்தன. பல கட்சிகள் தவெக அரசுக்கு ஆதரவு அளித்து, நம்பிக்கை ஓட்டெடுப்பில் தவெக அரசு வெற்றி பெற காரணமாக இருந்தன.
ஆனால் இன்று தவெக அரசுக்கு ஆதரவு அளித்து வரும் இடதுசாரிக் கட்சிகளே, அரசை கடுமையாக கண்டித்தும் விமர்சித்தும் வருகின்றன. ஏற்கனவே தவெக அரசுக்கு பெரும்பான்மை இல்லாத நிலை உள்ளது. தவெக.,விடம் உள்ள 107 எம்எல்ஏ.,க்களில் கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருவதால் அவரால் நம்பிக்கை ஓட்டெடுப்பில் பங்கேற்க முடியாது.
இந்நிலையில் தவெக எம்எல்ஏ.,க்கள் 15 முதல் 20 பேரிடம் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் ஏற்கனவே பேரம் பேசி முடித்து விட்டதாகவும், தவெக அரசை கவிழ்க்கும் வேலையில் ஈடுபட்டு வருவதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன.எந்த நேரத்திலும் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரலாம் என்பதால் தான் இன்று அவசரமாக எம்எல்ஏ.,க்கள் உடனான கூட்டத்தை விஜய் கூட்டி உள்ளாராம்.
முதலில் எம்எல்ஏ.,க்கள் கூட்டத்தை கட்சி தலைமை அலுவலகமான பனையூரில் தான் நடத்துவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நிமிடத்தில் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதிக்கு மாற்றி விட்டார்களாம். இன்று ஒரு நாள் மட்டுமல்ல, அடுத்த 3 நாட்களுக்கும் எம்எல்ஏ.,க்கள் தங்குவதற்காக இந்த நட்சத்திர விடுதியில் ரூம்கள் புக் செய்யப்பட்டுள்ளதாம்.
இதே போல் அதிமுக ஆட்சி காலத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் வந்த போது எம்எல்ஏ.,க்கள் அனைவரையும் கூவத்தூர் ரிசார்ட்டிற்கு அழைத்துச் சென்று தங்க வைத்தனர். தற்போது இதே ஃபார்முலாவை தவெக.,வும் கையில் எடுத்துள்ளது. தங்கள் கட்சி எம்எல்ஏ.,க்களை மற்ற கட்சிகள் விலைக்கு வாங்கி விடக்கூடாது என்பதற்காக தான் இந்த அவசர எம்எல்ஏ.,க்கள் கூட்டம் நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.