காலத்தால் கரைந்த காங்கிரஸ்.. பாஜகவை வெல்ல முடியாமல் தவிப்பது ஏன்?

Su.tha Arivalagan
Jan 30, 2026,05:04 PM IST

- பாவை.பு


இந்தியா என்றால் காங்கிரஸ், இந்தியாவின் ஆகப்பெரிய கட்சி, ஒரு வெளிநாட்டவரால் தொடங்கப்பட்ட கட்சி, இந்தியாவில் தோன்றிய முதல் தேசிய கட்சி, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமரும் கட்சி...என பல வரலாற்று சிறப்புவாய்ந்த கட்சி காற்றில் கரைந்தது எப்படி ? இன்று பாஜகவிடம் ஆட்சியைப் பறி கொடுத்து மீண்டும் அதைப் பெற முடியாமல் திணற என்ன காரணம்.. வாங்க பார்க்கலாம்.


ஆலன் ஆக்டவியன் ஹியூம் ஒரு ஆங்கிலேயர், இவர் இந்தியாவில் நிர்வாக பணி அதிகாரியாக ஆங்கிலய அதிகாரத்தின் கீழ் பணியாற்றி வந்தவர். அப்போது நடைபெற்று வந்த இந்தியர்களுக்கு எதிராக பல்வேறு தவறுகளையும், நிர்வாக முறைகேடுகளையும் கண்டு மனம் போதாமல் தன் பணியில் இருந்து வெளியேறி இந்திய மக்களின் உரிமைக்கும் நலனுக்கும், ஆங்கிலேயர்களுக்கு எதிராகவே குரல் கொடுத்தவர். 

 

அப்போது தான் இந்தியாவை அடக்கி ஆண்டு வந்த ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராட்டங்கள் இந்தியா முழுவதும் சிறு சிறு குழுக்களாக இயங்கி வந்தது. இதனை இயக்கமாக கொண்டு செல்ல நினைத்த அவர் பல்வேறு சவால்களுக்கு பின் 1885 டிசம்பர் 28 அன்று மும்பை நகரில் ஒரு மாநாட்டை துவங்கியது அதற்கு இந்திய தேசிய சங்கம் என பெயரிட்டு, இதற்கு தலைவராக உமேஷ் சந்திர பானர்ஜி நியமிக்கப்பட்டார். இந்த மாநாட்டில் மும்பை வங்காளம், கொல்கத்தா , மதராஸ் மாகாணம் போன்ற இடங்களில் இருந்து 72 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். 


அடுத்த இந்திய தேசிய சங்கத்தின் மாநாடு கொல்கத்தாவில் நடைபெற்றது.அதுவரை  இந்திய தேசிய சங்கமாக இருந்ததை இந்திய தேசிய காங்கிரஸாக மாறியது கொல்கத்தா மாநாட்டிற்கு பிறகு தான். இதனை சரியாக ஒன்று சேர்த்து அதை காங்கிரஸ் பேரியக்கமாக மாற்றி வழிநடத்தியவர் ஆலன் ஆக்டேவியன் ஹியூம் தான். ஆலன் 1885 முதல் 1906 வரை தொடர்ந்து காங்கிரஸ் அமைபின் பொதுச்செயலாளராக இருந்தாரே ஒழிய ஒரு போதும் தலைவராவதற்கு உடன்படவில்லை. 


இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் பல முக்கிய ஆளுமைகள் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக இருந்துள்ளார்கள். அதில் அன்னிபெசன்ட், மோதிலால் நேரு, மகாத்மா காந்தி, சரோஜினி நாயுடு, வல்லபாய் படேல், ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திரபோஸ், போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து தொடர்ந்து 30 வருடங்கள் ஆட்சி கட்டில் அமர்ந்தது இந்திய தேசிய காங்கிரஸ். 

 

சுதந்திர இந்தியா சந்தித்த முதல் (1951) பொதுத்தேர்தலில் , 44.99 சதவீத வாக்குகளை பெற்றதோடு 364 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஜனநாயக முறையில் ஆட்சியை பிடித்தது ஜவஹர்லால் நேரு தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ். இதற்கு முன் ஜவஹர்லால் நேரு, 1947 முதல் 1951 வரை இந்திய டொமினியனின் பிரதமராக இருந்தார். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரும் ஆவார். 


ஜவஹர்லால் நேரு (1964) இறக்கும் வரை பதவியில் இருந்தார். நேரு மறைவுக்குப் பிறகு லால்பகதூர் சாஸ்திரி 1964 இல் பதவியேற்று 1966 ல் இவரின் திடீர் மறைவால், நேருவின் மகளான இந்திரா காந்தி 1966 இல் பதவியேற்று 1977 வரை பதவியில் இருந்தார். இந்தியாவின் முதல் பெண் பிரதமர் . இவர் ஆட்சி காலத்தில் 1975 ல் அவசர நிலையை அரிவித்ததின் பெயரில் பல எதிர்கட்சி தலைவர்கள் கைதானார்கள், பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்பட்டது,அடிப்படை உரிமை பறிப்பு, சஞ்சய் காந்தியின் கட்டாய கருத்தடை போன்ற காரணங்களால் கட்சிக்கும் அவருக்கும் அவப்பெயரை தந்தது. 




இந்நிலையில் 1977 ஆம் ஆண்டு நடந்த இந்திய பொதுத்தேர்தலில் இந்திராவின் அவசரகால பிரகடனம் காரணமாக இந்திய தேசிய காங்கிரஸ் ஆட்சியை இழந்து, ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது. அதில் அவர்கள் 298 இடங்களில் வெற்றி பெற்று இருந்தனர். ஆனால் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் 154 இடங்களை மட்டுமே பிடித்தது. இந்திரா காந்தி தனது சொந்த தொகுதியான ரேபரேலியில் தோல்வியைச் சந்தித்தார். அவரது அரசியல் வாரிசாக கருதப்பட்ட அவருடைய மகன் சஞ்சய் காந்தியும்  அந்த தேர்தலில் அமேதி தொகுதியில் தோற்று போனார். 


மொரார்ஜி தேசாய் இந்தியாவின் காங்கிரஸ் அல்லாத முதல் பிரதமரானார். ஆனால் முழு பதவிக் காலத்தையும் முடிக்க முடியாமல்,மூன்றே ஆண்டுகளில் உட்கட்சி பூசலால் பதவியை ராஜினாமா செய்தார். 1980 இல் நடந்த பொதுத்தேர்தலில்  மீண்டும் பிரதமர் ஆனார் இந்திரா, 1984 இல் அவர் இறக்கும் வரை பதவியில் இருந்தார். இதற்கிடையில் அவர் இளைய மகன் சஞ்சய் காந்தி 1980 இல் விமான விபத்தில் இறந்து விடவே, தம்பியின் தொகுதியான அமேதி தொகுதியின் இடைத்தேர்தலில் நின்று வெற்றிபெற்றதால் ராஜிவ் காந்தியின் அரசியல் பிரவேசம் ஆரம்பம் ஆனது.


கிட்டத்தட்ட ஆட்சி முடியும் தறுவாயில் 1984 இல் சீக்கிய மெய்காப்பாளர்களால் சுடப்பட்டு கொல்லப்பட்டார் இந்திரா காந்தி. இதனால் கட்சிக்கு ராஜிவ் காந்தி தலைவரானார். 1984 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் இந்திரா காந்தி படுகொலையால் ஓட்டுக்கள் அனைத்தும் அனுதாப ஒட்டுகளாக மாறியது. இதில் 404 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்தார் ராஜிவ் காந்தி. ஜவஹர்லால் நேரு இந்திராகாந்தியும் விடவும் அதிக தொகுதிகளைக் கைப்பற்றினார் ராஜீவ் காந்தி என்பது குறிப்பிடத்தக்கது. 


அதன் பிறகு இந்திய அரசியல் பல வரலாற்றுச் சம்பவங்களைக் காண ஆரம்பித்தது. போபர்ஸ் ஊழல் பெரும் தலைவலியாக மாறிய நிலையில், அதைக் காரணம் காட்டி, ராஜீவ் காந்தி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த வி. பி சிங், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி ஜனதா தளம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். 

முறையே 1989 இல் நடந்த பொதுத்தேர்தலில் முக்கிய கட்சிகளை இணைத்து ஜனதா தளம் ஆட்சியை பிடித்து வி. பி சிங் பிரதமரானார்.


வி.பி. சிங் அரசுக்கு பாஜக ஆதரவு அளித்தது. பின்னர் தனது ஆதரவை திரும்பப்பெற்றதன் மூலம் ஓராண்டுக்குள் அவரது பிரதமர் பதவி முடிவுக்கு வந்தது.  அதைத் தொடர்ந்து கூட்டணியில் இருந்து பிரிந்த சமாஜ்வாடி ஜனதா கட்சியின் தலைவரான சந்திரசேகர், காங்கிரஸ், பாஜக ஆதரவுடன் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். ஓராண்டுக்கு பிறகு இந்த முறை  காங்கிரஸ் ஆதரவை விலக்கிக் கொண்டதால் ஆட்சி கவிழ்ந்தது. 


ஆட்சி கவிழ்ப்பால் 1991 இல் நாடாளுமன்ற பொது தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தல் பிரச்சாரத்தின்போது தமிழ்நாட்டிற்கு வந்த போதுதான் தற்கொலை படை தாக்குதல் காரணமாக படுகொலை செய்யப்பட்டார் ராஜீவ் காந்தி. இக்கொலை உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


ராஜீவ் படுகொலை அனுதாப ஓட்டுக்களாக மாறியதன் விளைவாக இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியை பிடித்தது. பிரதமராக அக்கட்சியின் மூத்த தலைவரான பி. வி நரசிம்ம ராவ் 1991 இல் பதவி ஏற்றார். இவர் தனது ஐந்தாண்டு காலம் முழுவதையும் நிறைவு செய்தார்.  முழுப் பதவிக்காலத்தையும் நிறைவு செய்த முதல், காந்தி குடும்பத்தைச் சேராத பிரதமர் இவர்தான். 


தொடர்ந்து 1996 நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் இணைந்து ஆட்சியமைத்தன. அடல் பிகாரி  வாஜ்பாய் பிரதமராக பதவியேற்றார். ஆனால் மக்களவையில் பெரும்பான்மை கிடைக்காததால் 13 நாட்களில் பதவியில் இருந்து விலகினார். 


இதையடுத்து மீண்டும் காங்கிரஸ் இடம் பெற்ற கூட்டணி ஆட்சி மத்தியில் ஆட்சியில் அமைந்தது. ஜனதாதளம் தலமையில் தேவகவுடாவை பிரதமர் ஆக்கினார்கள். இவர் தனது ஆட்சி காலத்தில் ராஜீவ் காந்தியின் போபர்ஸ் ஊழல் மற்றும் வி. பி சிங் கின் மண்டல் கமிஷனை கையில் எடுத்ததால் இவருக்கான ஆதரவு காங்கிரஸ் கட்சியில் நீங்கியது. இதையடுத்து இவருக்கு பதில் ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரான ஐ. கே குஜ்ரால் பிரதமராக பதவியேற்றார். 


இவர் ஆட்சிக்காலத்தில், ராஜீவ் காந்தி கொலை சம்பந்தமாக ஜெயின் கமிஷன் சில தகவல்களை வெளியிட்டது. இதில் திமுக தலைவர் கருணாநிதி பெயரும் இருந்தது. இது மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. மத்திய அமைச்சரவையிலிருந்து திமுகவை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால் குஜ்ரால் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே, காங்கிரஸ் ஆதரவை திரும்பப்பெற்றது. குஜ்ரால் பதவியை ராஜினாமா செய்தார். 




அதன் பின்னர் 1998ல் நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. பாஜக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைத்தது. இப்போது அதிமுக பாஜகவுக்கு ஆதரவு கொடுத்தது. ஆனால் தமிழ்நாட்டில் அப்போது நடந்து வந்த திமுக அரசைக் கலைக்கக் கோரி ஜெயலலிதா பாஜகவை வலியுறுத்தினார். அதை வாஜ்பாய் ஏற்கவில்லை. இதனால் ஜெயலலிதா ஆதரவை வாபஸ் பெற்றார். பாஜக அரசு கவிழ்ந்தது. நம்பிக்கை வாக்கெடுப்பில் ஒரு வாக்கில் ஆட்சியை இழந்த வாஜ்பாய், 13 மாதங்களே ஆட்சியில் இருந்தார்.


1999 இல் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் வாஜ்பாய் தலைமையிலான பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இப்போது திமுக ஆதரவு வாஜ்பாய்க்கு இருந்தது. மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார் வாஜ்பாய். ஜந்தாண்டுளை கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் சிறப்பாக முறையில் ஆட்சியை முடித்தார் வாஜ்பாய்.


 


2004 ல் நடந்த பொதுத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. பிரதமராக மன்மோகன் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார், கட்சி தலைவராக சோனியா காந்தி இருந்தார். 2004ஐதொடர்ந்து 2009 பொதுத் தேர்தலிலும் வெற்றி பெற்ற காங்கிரஸ் தொடர்ந்து 10 ஆண்டுகள் மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சி மத்தியில் நடந்தது. என்னதான் பிரதமராக மன்மோகன் சிங் இருந்தாலும் கூட, சோனியா காந்தியின் செல்வாக்கு அங்கு சற்று தூக்கலாகவே இருந்தது. 2014ல் புதிய வரலாறு படைக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி தனது ஆட்சி அதிகாரத்தை, செல்வாக்கை பாஜகவிடம் பறி கொடுத்த வருடம் அது.


2014 இல் பாரதிய ஜனதா கட்சி  தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று நரேந்திர மோடி முதல் முறையாக பிரதமரானார். அப்போது ஆட்சிக்கு வந்த பாஜகவை இப்போது வரை அசைக்க முடியாமல் தடுமாறி நிற்கிறது காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும். 3வது முறையாக பிரதமராக இருந்து வருகிறார் நரேந்திர மோடி. 


சரிந்து கரைந்து போன காங்கிரஸ்!




காங்கிரஸ் கட்சியின் சரிவு என்பது பல காலத்திற்கு முன்பாகவே ஆரம்பித்து விட்டது. குறிப்பாக இந்திரா காந்தி காலத்தில் - அவசரநிலை பிரகடனம், கச்சத்தீவை தாரைவார்த்து, சஞ்சய் காந்தி யின் கட்டாய கருத்தடை போன்ற  சறுக்கல்கள் மக்களிடையே காங்கிரஸ் செல்வாக்கை கரைத்த முதல் புள்ளிகள்.


இந்திரா காந்தி மறைவுக்குப் பின்னர் ராஜீவ் காந்தி காலத்தில் கூட்டணி ஆட்சி முறை வந்து விட்டது. எப்போது கூட்டணி ஆட்சிக்கு காங்கிரஸும் நாடும் மாறியதோ அப்போதே காங்கிரஸ் கட்சியின் சரிவு மேலும் வேகமாகி விட்டது.  தேசிய அளிவிலும், மாநில அளவிலும் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் ஊழல் புகார்களில் சிக்கினர். இவை தேசிய அளவிலும், மாநிலங்கள் அளவிலும் காங்கிரஸுக்கு எதிரான போக்காக மாறத் தொடங்கியது. இதை காங்கிரஸ் உணர்ந்து கொண்டு சரி செய்யத் தவறியது.


ராஜீவ் காந்தி ஆட்சியில் இலங்கைக்கு அமைதி படை என்ற பெயரில் இந்திய ராணுவத்தை அனுப்பி வைத்தார். அந்த சமயத்தில் அமைதி காக்கும் படையால், ஈழ மக்கள் பெரும் துயரத்திற்கும் கொடுமைகளுக்கும் உள்ளாக்கப்பட்டனர். 

2009 இல் நடந்த ஈழ இறுதி போரில் அப்போதைய மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு, பெரும் ஆயுத உதவிகளை சிங்கள ராணுவத்திற்கு வழங்கி ஈழத்து மக்களை கொன்று குவிக்க உதவியதால் தமிழ்நாட்டு மக்களின் ஆதரவை இழந்தது. 


2g அலைக்கற்றை விவகாரம் காங்கிரஸுக்கு தேசிய அளவில் கெட்ட பெயரை ஏற்படுத்த உதவியது. இந்த வழக்கில் திமுகவைச் சேர்ந்த அ. ராசா (முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர்), திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதில் கனிமொழியும் ராசாவும்  கைதாகி திகார் சிறை சென்று பின்னர் விடுதலையானார்கள். இந்த வழக்கிலிருந்து பின்னர் அனைவருமே விடுதலை செய்யப்பட்டு விட்டனர். இந்த ஊழல் விவகார வழக்கும் காங்கிரஸுக்குப் பெரும் பின்னடைவாக அப்போது மாறியிருந்தது. இப்படி அடுத்தடுத்து பல்வேறு ஊழல் விவகாரங்கள், கூட்டணிக் கட்சிகளால் ஏற்பட்ட நெருக்கடிகள், உட்கட்சிப் பூசல் என காங்கிரஸ் கலகலக்க ஆரம்பித்தது.

       

இந்த நிலைியல்தான் அன்னா ஹசாரே மூலம் ஒரு பெரும் புயல் காங்கிரஸை மையம் கொண்டது. டெல்லி ஜந்தர் மந்தரில் 2011ஆம் ஆண்டு ஆளும் காங்கிரஸின் ஊழலை எதிர்த்து உண்ணாவிரத்தை தொடங்கினார் காந்தியவாதியான அன்னா ஹசாரே. இந்த போராட்டத்திற்கு ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற பெயரும் சூட்டினார்கள். இது நாடு முழுவதும் பெரும் தாக்கத்தையும் 2014 இல் ஆட்சி மாற்றத்திற்கும் வித்திட்டது. 


இந்த போராட்டத்திற்கு முன்னாள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், யோகேந்திரா யாதவ், சமுக ஆர்வலர் பானு கோம்ஸ், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண்பேடி, யோகா மாஸ்டர் பாபா ராம்தேவ் போன்ற பிரபலமானவர்கள் ஆதரவு கொடுத்து, போராட்டத்தில் பங்கு கொண்டார்கள். இவர்களது போராட்டத்திற்கு அப்போது மீடியாவின் வெளிச்சமும் பெருமளவில் விழுந்தது. தேசிய அளவில் மிகப் பெரிய இயக்கமாக இது அப்போது பார்க்கப்பட்டது.


அன்னா ஹசாரே வின் இந்த போராட்டத்தை முழுமையாக பயன்படுத்தி கொண்டது பாஜக. உண்மையில் இதன் பின்னால் இருந்தது ஆர்எஸ்எஸ் அமைப்பு. காங்கிரஸுக்கு எதிரான இந்த அலையை மிக துரிதமாக பயன்படுத்திக் கொண்டு மக்களிடையே பாஜக தனது செல்வாக்கை பரப்ப ஆரம்பித்தது. கூடவே மத அரசியலையும் பாஜக அதில் சேர்த்ததால், அடுத்து வந்த 2014 லோக்சபா தேர்தலில் பாஜக பெரும் வெற்றியைப் பதிவு செய்தது.


மேலும் 2014 தேர்தலில் குஜராத்தில் வெற்றி பெற்றவராக அப்போது அறியப்பட்ட நரேந்திர மோடி மாடல் அரசியலை மக்கள் முன் வைத்து களத்தில் பாஜக இறங்கியதாலும், பிரஷாந்த் கிஷோர் வகுத்துக் கொடுத்த ஊடக வியூகங்களும் இணைந்து தேர்தல் முடிவுகளை பாஜகவுக்கு சாதகமாக அது மாற்றியது. சமூக வலைதளப் பயன்பாட்டின் வீரியத்தையும் அப்போதுதான் நாடு முதல் முறையாக கண்டது.




60 ஆண்டுகளாக இந்தியாவை குடும்ப சொத்தை போன்று தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த காங்கிரஸ் தேசத்திற்கு செய்தது என்ன என்று களத்தில் இறங்கிய பாஜக ஒரு புறம், அன்னா ஹசாரே ஒருபுறம், குஜராத் மோடி மாடல் ஒரு புறம் என்று நாலாபுறமும் காங்கிரஸுக்கு சிக்கல் ஏற்பட்டதாலும், மோடி அலை காரணமாகவும் ஆட்சியைப் பறி கொடுத்தது. 


இந்தியாவின் முதல் நாடாளுமன்ற தேர்தலில் ஜவஹர்லால் நேரு தலைமையில் 44.99 சதவீத வாக்குகளுடன் 364 உறுப்பினர்களை பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த கட்சி, இந்திரா காந்தி காலத்தில் 30 சதவீதமாக அது குறைந்து, அதன் பின்னர் அது கூடவே இல்லை. 1984 இல் நடந்த இந்திரா காந்தி படுகொலையும், 1991 இல் ராஜீவ் காந்தி படுகொலையும் தேர்தல் சமயத்தில் நடந்தது என்பது கவனிக்கத்தக்கது. இரு மரணங்களின் தாக்கத்தால், இரண்டு முறையும் காங்கிரஸ் வெற்றி பெற்றது, இந்த வெற்றி அனுதாபங்களால் மட்டுமே கிடைத்த வெற்றி என்றே கருத முடியும்.


2004 இல் மன்மோகன் சிங் ஆட்சியில் 26.50சதவீத வாக்குகளுடன் 145 தொகுதிகளையும் கைப்பற்றிய காங்கிரஸ், 2009 தேர்தலில் 20.60 சதவீத வாக்குகளுடன் 206 தொகுதிகளையும் கைப்பற்றியது. 2014 தேர்தலில் காங்கிரஸ் 19.4 சதவீத வாக்குகளையும் 44 தொகுதிகளையும் பெற்றுது. 2019 தேர்தலில் 19.49 சதவீதம் வாக்குகளையும் 52 தொகுதிகளையும் பெற்றது. 2024 தேர்தலில் 21 சதவீதம் வாக்குகளை பெற்றது காங்கிரஸ்.


நல்ல ஆளுமையான வலுவான தலைவர் இல்லாதது, குடும்ப கட்சியாகவே இன்னும் பலரும் காங்கிரஸைப் பார்ப்பது, மக்களை கவரக்கூடிய ஆளுமை மிக்க தலைவர்கள் அக்கட்சியில் இல்லாதது. மக்களுக்கான கவர்ச்சியான திட்டங்களை சரியாக வகுக்காதது, கட்டமைப்புகளை வலுவாக்குவதில தடுமாற்றம், ஒரு கொள்கை பிடிப்பு இல்லாதது, கடந்த கால ஊழல்கள், கூட்டணிகளை சரியாக அமைக்காதது, குறிப்பாக வட மாநிலங்களில் சரியான கூட்டணிகளை அமைக்கத் தவறுவது போன்றவை காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம். 




மறுபக்கம் பாஜக தனது செயல்பாடுகளை தொடர்ந்து கட்டுக்கோப்புடன் வைத்திருக்கிறது. மதத்தையும், அரசியலையும் அது சரிவர கலந்து அரசியல் செய்கிறது. மேலும் மக்களை தன் பக்கம் ஈர்க்க என்ன செய்ய வேண்டும் என்று அதற்குத் தெரிந்திருக்கிறது. பிற கட்சிகளில் வலுவாக உள்ளவர்கலை கவர்ந்து தன் பக்கம் இழுக்கிறது. சரியான கட்டமைப்பு, திட்டமிடல், நேர்த்தி,  கூடவே ஆர்எஸ்எஸ் அமைப்பின் வழி காட்டல் என பாஜகவின் பாதை தெளிவாக உள்ளது.


காங்கிரஸ் தேசிய அளவில் மிகப் பெரிய மாற்றங்களைச் செய்தாக வேண்டிய  கட்டாயத்தில் உள்ளது. மாநிலக் கட்சிகளின் தோளில் அமர்ந்தபடி நீண்ட காலம் அது காலத்தைத் தள்ள முடியாது. ஆளுமையான தலைவர்களுடன், பாஜகவுக்கு ஈடு கொடுத்து அதிரடியான, மாற்றத்துடன் கூடிய அரசியலை அது கையில் எடுத்தால் மட்டுமே அது மீண்டும் எழுச்சி பெற முடியும். தென் மாநிலங்களில் காங்கிரஸ் உயிர்ப்புடன் உள்ளது. ஆனால் வடக்கில் எழ முடியாத நிலையிலேயே இருக்கிறது. அதற்கான காரணத்தைக் கண்டறிந்து தன்னை சரிப்படுத்திக் கொண்டால் மட்டுமே காங்கிரஸ் மீண்டும் வலுப் பெற முடியும்.