அது என்ன 39% ஓட்டுக் கணக்கு.. அமைச்சர் அமித்ஷா சொன்னது இதைத் தானா?

Su.tha Arivalagan
Aug 26, 2025,01:01 PM IST
சென்னை : 2026 தமிழக சட்டசபை தேர்தலில் என்டிஏ கூட்டணி 39 சதவீதம் ஓட்டுக்களை பெற்று பெரும்பான்மையுடன், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சிஅமைக்கும் என சமீபத்தில் நெல்லையில் நடைபெற்ற பாஜக பூத் கமிட்டி குழு கூட்டத்தில் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த நிர்வாகியுமான அமித்ஷா பேசினார். இது கவனம் ஈர்த்துள்ளது.

அமித்ஷா மட்டுமின்றி பாஜக தலைவர்கள் பலரும் இந்த கூட்டத்தில் பேசிய பேச்சு மிகவும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த கூட்டத்தில் அமித்ஷா பேசுகையில் 39 சதவீதம் ஓட்டுக்கள் பெறுவோம் என்றார். அது என்ன 39 சதவீதம்? இவர் எதை குறிப்பிட்டு இப்படி சொன்னார் என்ற குழப்பம் பலருக்கும் எழுந்துள்ளது. ஆனால் இதற்கு பின்னால் பாஜக.,வின் மிகப் பெரிய அரசியல் நகர்வுகள் உள்ளன.

சத்தம் போடாமல் சர்வே



அதாவது, தமிழக சட்டசபை தேர்தலுக்காக ஊர் ஊராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்து வருவது தான் தினமும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் அவர் மட்டுமல்ல சத்தமே இல்லாமல் தேர்தல் வேலைகளை பாஜக எப்போதோ துவக்கி விட்டது. தமிழகத்தில் ஒவ்வொரு ஏரியாவிலும் பல்வேறு தனியார் ஏஜன்சிகளை வைத்து சர்வே எடுக்கும் வேலையை தான் பாஜக செய்து வருகிறதாம். அதுவும் குறிப்பாக தமிழகத்தில் ஒவ்வொரு பிரச்சனை, போராட்டம் போன்றவை நடக்கும் போதும், அதை மக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்ற கருத்து கணிப்பை நடத்தி வருகிறதாம். 

அதே போல் எடப்பாடி பழனிச்சாமி சென்று பிரச்சாரம் செய்யும் பகுதிகளில் அவர் பிரச்சாரத்திற்கு செல்வதற்கு முன், பிரச்சாரம் செய்த பிறகு என இரண்டு வகையாக சர்வே நடத்தி, ஒவ்வொரு இடத்திலும் அதிமுக.,விற்கு மக்களிடம் செல்வாக்கு எப்படி உள்ளது. பாஜக.,விற்கு செல்வாக்கு எப்படி உள்ளது என கணக்கு போட்டு கவனித்து வருகிறார்களாம். இதுவரை எடுக்கப்பட்ட சர்வேக்களின் படி, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இருந்ததை விடவும் தற்போது பல பகுதிகளில் மக்களிடம் அதிமுக.,விற்கு ஆதரவு கூடி உள்ளதாம். குறிப்பாக, எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்து விட்டு சென்ற பிறகு, அவர் சென்ற இடங்களில் எல்லாம் அதிமுக.,விற்கு ஆதரவு பெருகி வருகிறதாம்.

அதிகரிக்கிறதா அதிமுக ஆதரவு?



3 மாதங்களுக்கு முன் 18-19 சதவீதம் என்ற நிலையில் இருந்த அதிமுக.,வின் ஓட்டு வங்கி, தற்போது மெல்ல மெல்ல உயர்ந்து 25 சதவீதம் ஆக உயர்ந்துள்ளதாம். இதே நிலை தொடர்ந்தால் தேர்தல் நெருங்குவதற்குள் அதிமுக.,வின் செல்வாக்கு 35 சதவீதம் என்ற நிலையை எட்டி விடுமாம். இதையும் பாஜக.,வின் செல்வாக்கு ஆகியவற்றை கணக்கு போட்டு தான் அமித்ஷா 39 சதவீதம் ஓட்டுக்களுடன் வெற்றி பெறுவோம் என அடித்துச் சொல்லி உள்ளாராம்.

அதிமுக.,வின் இந்த வளர்ச்சி பாஜக.,வே எதிர்பார்க்காததாம். அதனால், "தாங்கள் சொல்பவர் தான் முதல்வர் வேட்பாளர்" என ரீதியில் பேசி வந்த பாஜக.,வினர் சமீபத்தில் சர்வே முடிவுகளை பார்த்து தங்களின் நிலைப்பாட்டை மொத்தமாக மாற்றிக் கொண்டுள்ளார்களாம். "அண்ணன் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்குவது பாஜக.,வின் கடமை" என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசியதற்கும், தற்போதைய தலைவர் நயினார் நாகேந்திரன், "எடப்பாடி பழனிச்சாமி தான் எங்கள் கூட்டணி கட்சியின் தலைவர்" என்றும் பேசியதற்கும் கூட இது தான் காரணமாம்.