டிங்டாங் டாங் டிங்டாங்.. இரண்டும் ஒன்றோடு ஒன்று.. அது ஏன் நிமிஷத்துக்கு 60 விநாடி?
- கவிநிலவு சுமதி சிவக்குமார்
சின்னசேலம்: சில விஷயங்கள் நம்முடைய வாழ்க்கையில் அன்றாடம் நம்முடனேயே இருக்கும். அவை இல்லாமல் நம்முடைய அன்றாட வாழ்க்கை நிச்சயம் இயல்பாக இருக்காது. ஆனால், அதைப் பற்றி நாம் பெரிதாக ஆராய்ந்திருக்க மாட்டோம்.. அப்படிப்பட்ட ஒன்றுதான் இந்த கடிகாரம்.
ஒரு ரூபாய்க்கு 100 பைசா,
ஒரு மீட்டருக்கு 1000 சென்டிமீட்டர்,
ஒரு லிட்டருக்கு 1000 மில்லி லிட்டர், இப்படி இருக்கும் போது ஒரு மணிக்கு 60 நிமிடங்கள், நிமிடத்துக்கு ஏன் 60 வினாடிகள் உள்ளன...?? . இதை என்றாவது யோசித்துப் பார்த்திருப்பீர்களா.. வாங்க பார்க்கலாம்.
நாம் இப்போது கணிதத்தில் பயன்படுத்தி வருவது " தசம முறை " ( Decimal System -- Base 10 ). அதாவது 10 என்ற எண்ணை அடிப்படையாகக் கொண்ட ஒரு கணித எண் முறை தான் தசம முறை எனப்படும். தற்கால அளவியல் பயன்பாடுகளில் பரவலான பயன்பாட்டில் உள்ளது இந்த தசம எண் முறை தான்.
ஆனால் 5000 வருடத்திற்கு முன் வாழ்ந்த சுமேரியர்கள் மற்றும் பாபிலோனியர்கள் " அறுபான்மானம் அல்லது அறுபான முறை " ( Sexagesimal System base -- 60 ) அதாவது 60 ஐ அடிப்படையாகக் கொண்ட எண் முறை கணக்கிட்டார்கள். இவர்கள் காலத்தை கணக்கிட்ட அதே " அறுபானமானம் " முறையில் தான் இன்று வரை நாம் காலத்தை கணக்கிடப் பயன்படுத்தி வருகிறோம்.
ஏன் அவர்கள் இந்த அறுப்பான் மானம் முறையை காலம் பயன்படுத்துவதற்கு தேர்ந்தெடுத்தார்கள் என்பதை பார்க்கலாம். இது ஒரு மேஜிக் நம்பர். எப்படி..!!
அதாவது 10 என்ற எண்ணை வகுத்திட 1,2,5,10 ஆகிய 4 எண்களால் மட்டுமே மீதி இல்லாமல் 10 ஐ வகுக்க முடியும். ஆனால் 60 என்ற எண்ணை வகுத்திட 1,2,3,4,5,6,10,12,15,20,30,60 என்ற 12 எண்களால் மீதியில்லாமல் வகுக்க இயலும்.
அடுத்து ஒரு மணி நேரத்தை சரிபாதியாக பிரித்தால் மீதம் இல்லாமல் " அரைமணி நேரம் " என்றாகிறது. அரைமணியை சரிபாதியாக பிரித்தால் " கால் மணிநேரம்" மற்றும் அரையும் காலும் சேர்ந்து " முக்கால் மணிநேரம் " என மீதம் இல்லாமல் பிரிக்கப்படுகிறது.
லத்தின் மொழியில் ஒரு மணி நேரத்தின் சிறிய பகுதியாக பிரிக்க வேண்டும் என்றால் அதற்கு பெயர் "முதல் சிறிய பகுதி" ( Pars Minuta Prima) இதுவே மரூவி " Minute -- நிமிடம் " என்றானது.
அதன்பின் அதே நிமிடத்தை அதன் சிறிய பகுதியாக பிரிக்க அது " இரண்டாம் சிறிய பகுதி" ( Pars Minuta Secunda ) இதுவே மரூவி " Second -- வினாடி " என்றானது.
காலம் மட்டுமல்ல வட்ட வடிவத்தின் கோணம் 360 ( 6*60 ) டிகிரியாக அமையவும் கால் கோணம், அரை கோணம், முக்கால் கோணம், செங்கோணம் எனவும் பிரித்திட இவர்கள் தான் காரணம் என்று அறியப்படுகிறது.
இனி மணி பார்க்கும்போது இதெல்லாம் உங்களுக்கு மணி மணியா ஞாபகத்திற்கு வரும் இல்லையா?
(சுமதி சிவக்குமார்.. B. A., M. com., (co-op mgt)., M. A ., (yoga) ., DOM., (computer)., . கள்ளக்குறிச்சி மாவட்டம் மூஙகில்துறைப்பட்டு என்ற ஊரைச் சேர்ந்தவர். தனது ஊரில் ஏரிக்கு நீர் கொண்டு வர இணையும் கைகள் என்றொரு அமைப்பை ஏற்படுத்தினார் உயர்திரு அப்துல் ரஹீம் அவர்கள். நீர் நிரம்பி இருமுறை கோடி போனது. அதனால் கோமுகி நதியை வாழ்த்தி நடந்தால் வாழீ கோமுகி என்ற கவிதையை பதிவிட்டார் சுமதி சிவக்குமார். முகநூலில் நிறைய கவிதை தளங்களில் கவிதைப் போட்டி நடுவராகவும் கவியரங்கம் தலைவராகவும் திகழ்கிறார். கிட்டத்தட்ட 3000 சான்றிதழ்கள் 50 ஷீல்டுகள் பரிசு பெற்றுள்ளார். நாட்டுப்புற பாடல் எழுதி பாடவும் செய்வார். மதியின் மதி என்ற கவிதை புத்தகம் , தெம்மாங்கு பாடலா என்ற நாட்டுப்புற பாடல்கள் புத்தகம் வெளியிட்டுள்ளார். சின்னசேலம் கண்ணதாசன் கலை இலக்கிய பேரவையின் செயலாளராக செயல்படுகிறார்)