அறிவுப்பூர்வமான செய்தியாளர்கள் அருகிப் போனது ஏன்?

Su.tha Arivalagan
Nov 07, 2025,10:25 AM IST

சென்னை: ஒரு காலத்தில் பத்திரிகை நிருபர்களைக் கண்டாலே தலைவர்கள் உள்பட அனைவருமே நடுங்குவார்கள். அவர்களது கேள்விக்கனைகளைச் சந்திக்கப் பயப்படுவார்கள். ஆனால் இன்று நிருபர்களை கேலியாக பார்க்கும் சூழல்தான் உள்ளது. இதற்கு யார் காரணம்..?


திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் பிரஸ் மீட் என்றாலே செய்தியாளர்கள் மத்தியில் ஒரு பரபரப்பும் படபடப்பும் தொற்றிக் கொள்ளும். கலைஞரிடம் ஈஸியாக கேள்வி கேட்க முடியாது. காரணம், எளிதாக மடக்கி விடுவார். இதனால் அவரிடம் என்ன மாதிரியான கேள்விகள் கேட்டால் அவர் திணறுவார் என்று யோசித்து யோசித்து கேள்விகளுடன் செல்வார்கள். மிக மிக முக்கியமான கேள்விகளை, சரியான கேள்விகளை, அறிவுப்பூர்வமான கேள்விகளுடன்தான் பெரும்பாலான செய்தியாளர்கள் இருப்பார்கள்.. ஆனால் கலைஞர் ஒருபோதும் திணறியதில்லை.


அதேபோலத்தான் ஜெயலலிதா அம்மையாரிடமும் நடக்கும். அவரிடமும் லூசுத்தனமாக அதாவது லூஸ் டாக் விட்டு எந்தக் கேள்வியையும் யாரும் கேட்க முடியாது. புத்திசாலித்தனமான தலைவர் அவர். அதேமாதிரி தா.பாண்டியன்.. அவரிடமும் சிறந்த பதில்கள் வரும்.. அந்தப் பதில்களைக் கேட்கும்போது நாமும் சிறப்பான கேள்வி கேட்க வேண்டும் என்ற உந்துதல் வரும். அதேபோல திரையுலகம் என்றால் கமல்ஹாசனிடம் கேள்வி கேட்டு ஜெயித்து விட முடியாது. மிக மிக புத்திசாலித்தனமாக அவர் பதிலளிப்பார். கேள்விகளும் அதேபோல இருந்தாக வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. இப்படி, ஒரு காலத்தில் செய்தியாளர்களும் அவர்களது கேள்விகளும் அறிவுப்பூர்வமானதாக, அர்த்தப்பூர்வமானதாக இருந்து வந்தது.




ஆனால் இன்று இந்த நிலை தலைகீழாக மாறி விட்டது. அரசியலிலும் சரி, திரையுலகிலும் சரி, உருப்படியான கேள்விகள் கேட்கும் செய்தியாளர்கள் குறைந்து விட்டனர். எல்லோரும் அல்ல.. நல்ல கேள்விகளைக் கேட்கும் நிருபர்களும் இருக்கிறார்கள்.. ஆனால் குறைவாக இருக்கிறார்கள். இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. அறிவு மழுங்கி விட்டதா அல்லது இப்படிக் கேட்டாலே போதும்.. இதற்கு அவர்கள் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும் என்ற அலட்சியம் வந்து விட்டதா என்று புரியவில்லை.


அரசியல் தலைவர்களும் கூட நிறைய மாறிப் போய் விட்டார்கள். முன்பு இருந்தது போன்ற தலைவர்கள் இப்போது இல்லை. எனவே செய்தியாளர்களும், இவர்களுக்கு இந்தக் கேள்விகளே அதிகம் என்று நினைத்து விட்டார்களா என்றும் புரியவில்லை.


சமீப காலமாக யூடியூபர்கள் பெருகி விட்டனர். இவர்களில் பலரும் செய்தியாளர்களாகவும் மாறி நிற்கிறார்கள். பிரஸ் மீட்களில் வழக்கமான செய்தித் தாள்கள், பத்திரிகைகளின் செய்தியாளர்களுடன் இவர்களும் அதிகம் கலந்து கொள்கிறார்கள் (இவர்களில் பலர் முன்பு பத்திரிகைகளில் வேலை பார்த்த செய்தியாளர்கள்தான்). இவர்கள் கேட்கும் கேள்விகள்தான் பெருமளவில் சர்ச்சையாவதாக சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் மட்டும் இல்லை. வழக்கமான பத்திரிகை செய்தியாளர்களின் சில கேள்விகளும் கூட சலசலப்பை ஏற்படுத்தி விடுகின்றன.


இப்படித்தான் நேற்று நடிகை கெளரி கிஷனிடம் ஒரு யூடியூப் ஆண் செய்தியாளர் கேட்ட கேள்வி பெரும் சர்ச்சையாகி விட்டது. ஹீரோ உங்களைத் தூக்குவது போல காட்சி படத்தில் உள்ளதே.. உங்களது எடை என்ன என்ற கேள்வியை நடிகையிடம் அவர் கேட்க அவர் கொதித்து விட்டார். தான் கேட்ட "வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த" கேள்வியை நடிகை ஆட்சேபிக்கவே, செய்தியாளருக்கு கோபமாகி விட்டது. இருவருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டு விட்டது. இப்போது அந்த யூடியூபருக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.


இந்தக் கேள்வி தவறா சரியா என்ற விஷயம் அடுத்தது.. முதலில் இந்தக் கேள்வியே தேவையற்றது. அந்தப் பெண்ணின் எடையைக் கேட்டு இவர் என்ன செய்யப் போகிறார்.. அதை வைத்து கால் கிலோ கத்திரிக்காய் வாங்க முடியுமா?.. அந்தப் படத்தில் அவர் எப்படி நடித்துள்ளார்.. அவரது வேடம் என்ன.. அதை அவர் சரியாக செய்திருக்கிறாரா என்றுதானே கேட்க வேண்டும், பார்க்க வேண்டும். மாறாக, அவரது எடையைத் தெரிந்து கொண்டு இவர் என்ன செய்யப் போகிறார்.. என்ன செய்ய முடியும் என்பது சத்தியமாக புரியவில்லை. இது எந்த வகையில் அறிவுப்பூர்வமான கேள்வி என்றும் தெரியவில்லை.


இதில் என்ன கொடுமை என்றால் அந்தப் பெண் மட்டும் தனியாக அந்த நிருபரிடம் வாதாடிக் கொண்டிருந்தார். தவித்துக் கொண்டிருந்தார். அருகில் அமர்ந்திருந்த படக் குழுவினரோ அல்லது மற்ற செய்தியாளர்களோ அந்தப் பெண்ணுக்கு ஆதரவாக ஒருவர் கூட வாய் திறக்கவில்லை. அந்த செய்தியாளரைக் கண்டிக்கவில்லை. வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தனர். என்ன கொடுமை பாருங்க!


நீ ஒரு நடிகை.. பிரஸ் மீட் என்று வந்து விட்டாய்.. நான் ஒரு நிருபர்... நான் கேட்கும் கேள்விக்கு நீ பதில் அளித்தாக வேண்டும் என்று நினைப்பதே .. தவறல்லவா? இதேபோலத்தான் சமீபத்தில் தெலுங்குப் பெண் செய்தியாளர் ஒருவர் ட்யூட் பட நாயகன் பிரதீப் ரங்கநாதனின் உருவத் தோற்றம் குறித்து பாடிஷேமிங் கேள்வியை எழுப்பியிருந்தார். அவருக்கு அதே இடத்தில் நடிகர் சரத்குமார் பதிலடி கொடுத்திருந்தார். 


செய்தியாளர்கள் நிறைய மாற வேண்டும், புரிதலுடன் எதையும் பேச வேண்டும், அறிவார்ந்த சமூகமாக அவர்களை மக்கள் பார்க்கிறார்கள்.. அதை அவர்கள் தங்களது செயல்களில் நிரூபிக்க வேண்டும்.. புத்திசாலித்தனமான கேள்விகளைக் கேட்டு பேட்டி கொடுப்பவர்களைத் திணறடிக்கலாம்.. அவர்களிடம் டெக்னிக்கலாக பேச வேண்டும்.. அப்போதுதான் அந்த பிரஸ் மீட் மூலம் கிடைக்கும் தகவல்கள் மக்களுக்கும் சுவாரஸ்யம் தரும், கவனிப்பைப் பெறும்.. அதை விட்டு விட்டு வெயிட் என்ன, வெங்காயம் விலை என்ன என்று கேட்டுக் கொண்டிருந்தால் மக்களால் நீங்கள் வெறுக்கப்படுவீர்கள் நண்பர்களே!.