பிரச்சார பீரங்கியாக மாறுகிறாரா சரத்குமார்.. யாருக்கு குறி.. தேர்தலில் போட்டியிட விரும்பாதது ஏன்?

Su.tha Arivalagan
Dec 22, 2025,05:25 PM IST

சென்னை: சட்டசபைத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும் ஆட்சி மாற்றத்திற்கு உதவப் போவதாகவும் கூறியுள்ளார் பாஜக மூத்த தலைவரான சரத்குமார்.


சரத்குமாரின் அரசியல் பாதை திமுகவிலிருந்து தொடங்கும். ஆரம்பத்தில் திமுகவில் இருந்தார். அதில் இணைந்து எம்.பியாகவும் திகழ்ந்தார். பின்னர் வெளியே வந்து அதிமுக பக்கம் சாய்ந்தார். அதுவும் சரிவராததால், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியைத் தொடங்கி நடத்தி வந்தார். அதிலும் வெற்றி பெற முடியவில்லை. இந்த நிலையில் யாரும் எதிர்பாராத நிலையில் கட்சியை அப்படியே கொண்டு போய் பாஜகவில் இணைத்து விட்டார்.


பாஜகவில் இணைந்த சரத்குமாருக்கு கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முக்கியமானதாக அமைந்தது. காரணம், அவரது மனைவியும் நடிகையுமான  ராதிகா சரத்குமார், விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து விஜயகாந்த் மகன் போட்டியிட்டார். இந்த கடும் போட்டியில் கடைசியில் காங்கிரஸ் வேட்பாளரும் நடப்பு எம்.பியுமான மா்ணிக்கம் தாகூரே வெற்றி பெற்றார்.




இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும் தனக்கு சீட் கொடுத்தாலும் போட்டியிட மாட்டேன் என்றும் சரத்குமார் கூறியுள்ளார். நெல்லை வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நான் போட்டியிடவில்லை. மாறாக என்னுடன் இருப்பவர்களைப் போட்டியிட வைத்து அவர்கள் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்பட பாடுபடப் போகிறேன் என்றார் சரத்குமார்.


நடிகர் சரத்குமார் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று எடுத்த முடிவு, ஒரு தனிமனிதரின் முடிவு என்பதைத் தாண்டி, தமிழக அரசியலில் மாறிவரும் ஒரு போக்கைக் காட்டுகிறது. பாஜகவைப் பொறுத்தவரை சரத்குமார் போன்ற ஒரு பிம்பம் தேர்தல் பிரச்சாரத்திற்குப் பெரிதும் உதவும். அவர் போட்டியிடுவதை விட, மாநிலம் முழுவதும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்காகப் பிரச்சாரம் செய்வது கட்சிக்கு அதிக லாபத்தைத் தரும் என பாஜக தலைமை கருதியிருக்கலாம். இதனால்தான் சரத்குமார் போட்டியிடப் போவதில்லை என்று கூறியிருப்பதாக கருதப்படுகிறது.


2025-ம் ஆண்டு தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்களின் வாக்குகள் பெருமளவில் விஜய் பக்கம் திரும்புவதை பாஜக உணர்ந்துள்ளது. இந்த நிலையில் சரத்குமாரை, விஜய்க்கு எதிராக பிரச்சாரம் செய்ய வைக்க பாஜக பயன்படுத்தலாம் என்ற எண்ணமும் நிலவுகிறது.


2026 ஏப்ரலில் அதிமுக மற்றும் பாஜக மீண்டும் கூட்டணி அமைத்தது தமிழக அரசியலின் முக்கிய நிகழ்வு. கூட்டணியில் தொகுதிகளைப் பங்கிடும்போது, பலமான வேட்பாளர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் போட்டியும் கடுமையாக உள்ளது. எனவே சரத்குமாருக்கு இந்தத் தேர்தலில் வாய்ப்பு தராமல் எதிர்காலத்தில் ராஜயசபா சீட் தரவும் பாஜக திட்டமிட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.


சரத்குமார் ஒரு பக்குவப்பட்ட அரசியல்வாதியாக, கள எதார்த்தத்தைப் புரிந்து கொண்ட ஒருவராக உள்ளார். நல்ல பேச்சாளர். புள்ளிவிவரத்துடன் பேசக் கூடியவர்.ஒரு வேட்பாளராக ஒரு தொகுதியில் முடங்கிப் போவதை விட, நட்சத்திரப் பேச்சாளராகத் தமிழகம் முழுவதும் வலம் வருவது பாஜகவுக்குப் பலம் தரக் கூடும். கூட்டிக் கழித்துப் பார்த்தால் பாஜகவின் பிரச்சாரப் பீரங்கியாக, சரத்குமார் உருவெடுக்கவுள்ளது தெளிவாகியுள்ளது.