தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
சென்னை: தமிழ்நாட்டில் நடந்து வரும் சட்டசபைத் தேர்தலில் கடந்த தேர்தலை விட கிட்டத்தட்ட 17 சதவீதம் அளவுக்குி வாக்குப் பதிவு விகிதம் அதிகரித்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக சென்னையில் வாக்குப் பதிவு விகிதம் சந்தோஷம் தரக் கூடிய வகையில் அதிகரித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் சார் நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களிடையே எழுந்துள்ள அதீதமான எதிர்பார்ப்பு, ஆர்வம் ஆகியவைதான் தற்போதைய வாக்குப்பதிவு விகிதம் அதிகரிப்புக்கு முக்கியக் காரணமாக கருதப்படுகிறது.
சார் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் ஒரு முக்கியக் காரணமாக கருதப்படுகிறது. தேர்தல் ஆணையம் நடத்திய சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் மூலம், நீண்டகாலமாகப் பட்டியலில் இருந்த 'இன்ஆக்டிவ்' வாக்காளர்கள், உயிரிழந்தவர்கள் மற்றும் வெளியூர்களில் வசிப்பவர்களின் பெயர்கள் சுமார் 74 லட்சம் நீக்கப்பட்டுள்ளன. இதனால், மொத்த வாக்காளர் எண்ணிக்கை குறைந்து, உண்மையாக வாக்களிப்பவர்களின் விகிதம் அதிகரித்ததாகக் கருதப்படுகிறது.
தவெகவின் வருகை வாக்காளர்களிடையே புதிய ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது இன்னொரு காரணமாக கூறப்படுகிறது. இது பல தரப்பட்ட வாக்காளர்களையும் வாக்களிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை உந்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
2024 மக்களவைத் தேர்தலில் கள்ளக்குறிச்சி (75.67%), தருமபுரி (75.44%) போன்ற மாவட்டங்களில் அதிக வாக்குகள் பதிவானது, ஒட்டுமொத்த வாக்குப்பதிவு சதவீதத்தை உயர்த்தியது. இது இந்த முறை மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது. மேலும் இதுவரை குறைந்த அளவில் வாக்குகள் பதிவான மாவட்டங்களில் கூட இந்த முறை அதிக அளவிலான வாக்குகள் பதிவாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
அரசியல் கட்சிகளுக்கு இடையிலான கடும் போட்டி காரணமாக, வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு வரவழைப்பதில் கட்சிகள் காட்டும் ஆர்வமும் வாக்குப்பதிவை அதிகரிக்க ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.
சென்னையில் வழக்கமாக குறைந்த அளவில் வாக்குகள் பதிவாகும். இந்த முறை இப்போதை கிட்டத்தட்ட 70 சதவீத அளவுக்கு வாக்குகள் பதிவாகியுள்ளன. இது மகிழ்ச்சி தருவதாக உள்ளது. 100 சதவீத வாக்குப் பதிவு என்பதுதான் தேர்தல் ஆணையத்தின் இலக்கு. ஆனால் இதுவரை அது சாத்தியப்படவே இல்லை. இந்த முறையும் சாத்தியமில்லை. காரணம் சென்னையிலிருந்து பல நூறு பேர் சொந்த ஊர்களுக்குப் போக முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும் கடந்த 2021 சட்டசபைத் தேர்தலை விட இந்த முறை 20 சதவீதம் அளவுக்கு கூடுதலாக வாக்குகள் பதிவாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.