கோவில் மணி.. Temple bell.. அடிப்பதால் என்னெல்லாம் சிறப்பு இருக்கு தெரியுமா?

Su.tha Arivalagan
Apr 06, 2026,05:19 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


(Temple bell) அடிப்பதால் ஏற்படும் சிறப்புகளை பற்றி அறிந்து கொள்வோம்.


நாம் கோவிலுக்கு சென்றாலே சிறு குழந்தைகள் மணியை கண்டால் தங்களுடைய பெற்றோரை தூக்கச் சொல்லி மணி அடிப்பதை நாம் பார்த்திருக்கிறோம். மேலும் பெரியவர்கள் மூன்று முறை மணி அடித்து ஆலயத்திற்குள் செல்வதை பார்க்கிறோம். அவ்வாறு அடிப்பதற்கு பின்னால் பல காரணங்கள் உள்ளன. அக்காரணங்களை இப்பதிவில் நாம் காண்போம்.


நாம் கோவிலுக்கு செல்லும் பொழுது கோவிலில் இருக்கும் மணியை அடிக்கும்பொழுது அதிலிருந்து வரும் கூர்மையான மற்றும் நீடித்த ஓசையானது ஏழு வினாடிகள் வரை நீடித்து எழுப்புகின்றது. அவ்வாறு மணியிலிருந்து வரக்கூடிய ஒலி  நமது உடலில் காணப்படும் ஏழு முக்கிய மையங்களில் தாக்கம் செலுத்துகின்றன. இதனால் நமது மூளையானது ஒருநிலைப்படுத்தப்பட்டு இறைவனை மனதார எண்ணச் சிதறல்கள் இல்லாமல் மனம் ஒன்றி  பிரார்த்தனை செய்ய ஏதுவாக உள்ளது. 


மணியில் இருந்து வரும் ஓசையானது மனதில் இருக்கும் எதிர்மறையான(negative) எண்ணங்களை நீக்கி நேர்மறை ஆன (positive vibes )எண்ண அலைகள் உருவாகின்றது. இப்படி மனம் ஒன்றி இறைவனிடம் வைக்கப்படும் வேண்டுதல்கள் இறைவனால் அருளப்படுகின்றன.


கோவில் மணி அடிப்பது இறைவனிடம் நம் வருகையை அறிவிக்கவும், மன அமைதி ஏற்படுத்தவும் செய்யப்படும் ஒரு ஆன்மீகம் மற்றும் அறிவியல் வழிப்பாட்டு முறையாகும். மணி ஓசை மனித உடலில் உள்ள ஏழு முக்கிய சக்கரங்களை தூண்டி மூளையை ஒருநிலைப்படுத்துவதாக நம்பப்படுகிறது.


அபிராமி பட்டர் எழுதியஅபிராமி அந்தாதியின் 24 ஆவது பாடல் "மணியே மணியின் ஒலியே" என்று அவர் அம்பிகையை அழைக்கிறார். பூஜையில் இறைவனுக்கு படையல் படைப்பதை நிவேதனம்,நைவேத்தியம் என்று கூறுவர். நிவேதனம் என்ற சொல்லுக்கு அறிவித்தல் என்பது பொருள். அந்த அறிவிப்பை நமக்கு வெளிப்படுத்துவதே கோயில் மணி.


கடவுளுக்கு பதினாறு வகை தீபா ராதனைகளை செய்யும் சோட ஷ உபசாரத்தின் போது கண்ட நாதம் என்னும் பெரிய காண்டாமணி  ஒலிப்பது  வழக்கம்.

 

மணி- வகைகள்:


 


சிவனுக்குரிய பூஜை மணியில் நந்தியும், பெருமாளுக்கு உரிய பூஜை மணியில் சங்கு சக்கரம், கருடன் ஆகியவையும் இடம் பெற்றிருக்கும்.


கதவு மணி:


கோவில் நுழைவாயிலில் தொங்கவிடப்படும் பெரிய மணி. இதில் சிறிய மணி, பெரிய மணி என பல வடிவங்களில் இருக்கும்.


கருடமணி :


இது கையில் வைத்து பூஜை செய்யும் பொழுது பயன்படுத்தப்படும் சிறிய மணி. இவற்றை ஒரு கையால் இசைக்க முடியும்.


கை மணி:


இது மரக்கருவிகளை  கொண்டே இயக்க முடியும்.


கண்ட்: 


இது பெரிய அளவிலான மணி.சுமார் 5 அடி வரை நீளமும்,அகலமும் கொண்ட இந்த மணி இசைத்தால் அதன் ஒலி பல கிலோமீட்டர் தூரம் வரை ஒலிக்கும்.


முக்கியத்துவம்:


உள்ளத்தில் தூய்மையான உணர்வு எழுவதற்கும், தீய உணர்வுகள் வெளியேறவும் மணி ஒலிக்கப்படுகிறது. தொடர்ந்து மணிஒலிக்கும் இடத்தில் தீய சக்திகள் நீங்கி அந்த இடம் முழுவதும் நல்ல சக்தி அதிகரிக்கும் என்பது ஐதீகம்.


ஆலயங்களில் பூஜை நடைபெறும் நேரம் கோவில் மணியுடன் பல்வேறு மங்கள வாத்தியங்களும் இசைக்கப்படுகின்றன. இவற்றால் ஆன்மீக உணர்வு அடுத்த நிலைக்கு மேம்படுத்தப்படுகிறது. உடலையும், மனதையும் அமைதி நிலைக்கு ஈர்க்கும்  சக்தி மணி ஓசைக்கு உண்டு.


அறிவியல் காரணம்:


மணி அடிப்பது காட்மியம், ஈயம்,தாமிரம்,துத்தநாகம், நிக்கல்,குரோமியம், மாங்கனீசு போன்ற உலோகங்களின் கலவையால் செய்யப்படுகிறது. இது அடிக்கும் போது நீண்ட நேரம்  நீடிக்கும் ஒலியை எழுப்பி, மூளையின் இடது மற்றும் வலது பக்கங்களை ஒருநிலைப் படுத்துகிறது. மணியானது செம்பு, பித்தளை உள்ளிட்ட பல உலோக கலவைகளால் ஆனது. இவற்றில் இருந்து எழுப்பப்படும் ஒலி வலது மற்றும் இடப்புற மூளையில்  உள்ள நரம்புகளை தூண்டி, மூளையை தெளிவடைய செய்து சுறுசுறுப்பாக்குகிறது. 


ஆன்மீக காரணம்:


கோயில் மணி கர்ப்ப கிரகத்தின் மீது அல்லது வாசல் பகுதியில் பக்தர்கள் உள்ளே செல்லும் பொழுது ஒலி எழுப்பும் வகையில் பொருத்தப்படுகிறது. மணி ஓசை நாம் கோவிலுக்குள் நுழையும் பொழுது இறைவனை வணங்க தயாராவதையும், மனதில் ஏற்படும் சஞ்சலங்களை அகற்றி, தூய்மையான பக்தியுடன் தரிசனம் செய்வதையும் குறிக்கிறது. பூஜையின் போது இறைவனுக்கு படையல் சமர்ப்பிக்கும் நேரத்தை மணி ஓசை மூலம் மக்களுக்கு அறிவிப்பதாக கருதப்படுகிறது .


"ஓம்"- பிரணவ மந்திரத்தின் ஒலி:

 

கோவில் மணி ஒரு குறிப்பிட்ட அளவிலான உலோகங்களின் கூட்டாக செய்யப்படுகிறது. மணி ஓசை எழுப்பும்போது "ஓம்" எனும் பிரணவ மந்திரம் ஒலிக்கும் வகையிலேயே அவை வடிவமைக்கப்படுகின்றன. இந்த தெய்வீக அதிர்வலைகள் கோவில் முழுவதும் நிறைந்திருக்கின்றது. மணி ஓசையால் கர்ப்ப கிரகத்தில் உள்ள சுவாமி சிலைகளில் உள்ள அதிர்வலைகள் தூண்டப்படுவதாகவும், இதனால் பக்தர்கள் இறைவனிடம் முன்வைக்கும் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பதும் ஐதீகம் .


கோவில் மணியை கோவிலுக்குள் சென்ற உடனேயே அடித்துவிட்டு கர்ப்ப கிரகத்திற்குள் செல்வது சிறப்பு. ஆனால் சிலர் சுவாமி தரிசனம் பெற்று வந்தவுடன் மணி அடிப்பார்கள். அதை தவிர்த்து  கோவிலுக்குள் செல்வதற்கு முன் மணி அடித்து விட்டு செல்வது சாலச் சிறந்தது.


இதுபோன்ற சுவாரசியமான ஆன்மீகத் தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்  தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.