Cinema Nostalgia.. இன்று ஏன் இத்தகைய கருத்துப்படங்கள் அரிதாகின்றன?
- வே.ஜெயந்தி
அரையாண்டு விடுமுறை தொடங்கியுள்ள இந்நேரத்தில், நேரத்தை பயனுள்ளதாகவும் சிந்தனைக்குரிய வகையிலும் செலவிட நினைப்பவர்களுக்கு நினைவுக்கு வரும் படம் 1986-ஆம் ஆண்டு விசு இயக்கிய “சம்சாரம் அது மின்சாரம்”. குடும்ப வாழ்க்கையின் நிஜங்களை நகைச்சுவையுடன் எடுத்துரைக்கும் இந்த படம், காலம் கடந்தும் பொருத்தம் இழக்காத சமூகப் படைப்பாக இன்றும் திகழ்கிறது.
கணவன் மனைவி உறவு, உறவினர்களின் தலையீடு, புரிதல் இல்லாமையால் உருவாகும் குடும்பக் குழப்பங்கள் போன்றவை இயல்பாகவும் நுணுக்கமாகவும் படத்தில் சித்தரிக்கப்படுகின்றன. சிரிப்பூட்டும் காட்சிகளுக்கிடையே, குடும்பம் எவ்வாறு சிதறுகிறது, அதை எவ்வாறு புரிதலாலும் பொறுமையாலும் மீண்டும் இணைக்க முடியும் என்பதையும் படம் அழகாக எடுத்துக்காட்டுகிறது.
லக்ஷ்மி, சந்திரசேகர், கிஷ்மு, ரகுவரன், டெல்லி கணேஷ், இளவரசி உள்ளிட்ட நடிகர்கள் அனைவரும் தங்களின் இயல்பான நடிப்பால் கதைக்கு உயிரூட்டுகின்றனர். குறிப்பாக லக்ஷ்மி நடித்த பாத்திரம், குடும்பத்தை ஒன்றிணைக்கும் பொறுப்புள்ள பெண்ணின் உருவமாக மனதில் பதிகிறது.
பணம் மட்டுமே வாழ்க்கையின் இலக்கு என நினைத்து வாழும் கணவரை, அன்பும் புரிதலும் கொண்டு மனிதநேயப் பாதைக்கு மாற்றுகிறார் லக்ஷ்மி. படிப்பின் முக்கியத்துவத்தைச் சின்ன மச்சினருக்கு உணர்த்தி, அறிவே முன்னேற்றத்தின் அடித்தளம் என்பதை எடுத்துரைக்கிறார். மேலும், இரண்டாவது மச்சினனுக்கு மனைவியின் மனநிலையை புரிந்து நடக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தி, குடும்ப உறவுகளில் சமநிலையை ஏற்படுத்துகிறார்.
தவறான புரிதலால் பிரிந்திருந்த நாத்தனாரை அவரது கணவருடன் மீண்டும் இணைத்து வைத்து, உறவுகளின் பிணைப்பை வலுப்படுத்தும் பணியையும் அவர் செய்கிறார். இறுதியாக, தன் மாமாவையும் மனமாற்றம் அடையச் செய்து, “எல்லோரும் ஒன்றாக, ஒற்றுமையுடன் வாழலாம்” என்ற மனிதநேயச் செய்தியை வலியுறுத்துகிறார்.
இந்தக் கதை சொல்லும் அடிப்படை உண்மை மிகவும் எளிமையானதாயினும் ஆழமானது:
“உறவுகள் கண்ணாடிபோன்றவை;
ஒருமுறை உடைந்தால் முன்னைப்போல் ஒட்டாது.
அதனால் உடைவதற்கு முன்,
புரிதலால் பாதுகாப்போம்.
புன்னகையுடன் இன்முகம் காட்டி,
உறவுகளை மேம்படுத்துவோம்.”
இறுதிக் காட்சியில் வரும்
“நீங்க நல்லா இருக்கீங்களா?”
“நான் நல்லா இருக்கேன்”
என்ற எளிய உரையாடல், உறவுகளின் வெப்பத்தையும் மனிதநேயத்தின் ஆழத்தையும் மனதிற்கு நெருக்கமாக உணர்த்துகிறது.
இன்றைய காலகட்டத்தில், இத்தகைய கருத்துச் செறிந்த திரைப்படங்கள் ஏன் அரிதாகி விட்டன? வேகமான நுகர்வு கலாச்சாரத்தில், உணர்வுகளை விட வெளிப்பாடுகள் மேலோங்கும் இந்த காலத்தில், சமூகத்தை மீள சிந்திக்க வைக்கும் படைப்புகள் குறைந்து வருவது கவலைக்குரியதல்லவா? சமூகம் மீள வேண்டும் என்றால், உறவுகளுக்கு உயிரூட்டும் இப்படிப்பட்ட படங்கள் மீண்டும் ஒளிபரப்ப வேண்டாமா?
பொழுதுபோக்கைத் தாண்டி, வாழ்க்கையைப் புரிய வைக்கும் ஒரு சமூகப் பாடமாக “சம்சாரம் அது மின்சாரம்” இன்றும் காலத்தை வென்ற படமாகத் திகழ்கிறது.
(வே. ஜெயந்தி, பட்டதாரி ஆசிரியர், செங்கல்பட்டு)