கொந்தளித்த திருமா.. கோபம் திமுக மீதா.. முதல்வர் விஜய் மீதா?.. இது தான் காரணமா?
தர்மபுரி: தர்மபுரியில் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், திமுக.,வை மிக கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். இது பேசு பொருளாகியுள்ளது.
திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன் வைத்த திருமாவளவன், முதல்வர் விஜய்க்கு எதிராகவும் சில கருத்துக்களை தெரிவித்தார். இதனால், "இவர் யாருக்கு ஆதரவாக பேசுகிறார்? இந்த கோபத்திற்கும், திடீர் ஆவேசத்திற்கும் என்ன காரணம்" என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
திருமா ஆவேச பேச்சு:
இன்று (செப்.,11) தர்மபுரியில் கட்சி பிரமுகரின் இல்ல திருமண விழாவில் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், விசிக.,வின் கூடாரம் காலியாகி விட்டதால் தான் விஜய் பின்னால் திருமாவளவன் சென்று விட்டார் என பொய் தகவல்களை பரப்புகிறார்கள். உளுந்தூர்பேட்டை கூட்டத்திற்கு வந்திருந்தால் தெரிந்திருக்கும்.
திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறியதை விமர்சித்து, கேள்வி எழுப்புபவர்கள் முதல் ஆளாக காங்கிரஸ் வெளியேறியதே அதை பற்றி ஏன் கேட்கவில்லை? பல ஆண்டுகளாக திமுக கூட்டணியில் இருந்த ஐயுஎம்எல், இடதுசாரிகளும் வெளியேறியது பற்றி ஏன் கேள்வி கேட்கவில்லை. தேர்தல் சமயத்தில் திமுக.,விற்கும் காங்கிரசிற்கும் எப்படிப்பட்ட உறவு இருந்தது?
திமுக.,வின் தவறு தான் காரணம்:
கூட்டணியில் இருந்து அனைத்து கட்சிகளும் வெளியேறியதற்கு திமுக.,வின் தவறான அணுகுமுறை தான் காரணம். தவெக.,வை சரியாக கணிக்க தவறியது திமுக.,வின் தவறு. கரூர் சம்பவம் நடந்த போது விஜய் மீது வழக்குப்பதிவு செய்யும் படி நான் சொன்னேன். அப்படி செய்யாமல் விட்டது திமுக செய்த தவறு.
ஆரம்பத்தில் விஜய் மீது எனக்கும் நம்பிக்கை இல்லை. அவர்களுக்கு தேவை என்கிற போது அதிமுக, பாமக, பாஜக.,விடம் அவர்கள் ஆதரவு கேட்கவில்லை. விசிக, இடதுசாரிகளிடம் தான் ஆதரவு கேட்டார். எங்களுக்கு அவர்கள் தேவையில்லை. ஆனால் அவர்களுக்கு நாங்கள் தேவை.
எனக்கு பதவி ஆசை கிடையாது. நான் எம்எல்ஏ., ஆகி இருந்தால் அமைச்சர் பதவி வேண்டாம் என்று சொல்லி இருப்பேன். ஆனால் வன்னி அரசு 10 நாட்களாவது அமைச்சராக இருக்கட்டும் என்பதற்காக தான் அமைச்சரவையில் இடம்பெற ஒப்புக் கொண்டேன்.
கூட்டணி பெயரை நான் தான் இறுதி செய்தேன்:
திமுக எங்களை கை விட்டு விட்டது. திமுக, கூட்டணி கட்சிகளை கையாண்ட விதம் தவறு. அது பற்றி எந்த நியாயஸ்தனும் பேசவில்லை. இப்போது கூட்டணிக்கு பெயர் வைக்க வேண்டும் என விஜய் சொல்லிய போது, மத சார்பற்ற என்று இருக்க வேண்டும் என்று சொன்னவன் திருமாவளவன்.
பாஜக., கூட தான் சமூக நீதி அரசியல் பேசுகிறது. அதனால் சமூக நீதி என்பதை விட மதசார்பற்ற என்று இருந்தால் தான் அது பாஜக இல்லாத கூட்டணியாக இருக்க முடியும். தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வந்து விடக் கூடாது என்பதற்காக தான் தவெக அரசுக்கு ஆதரவு அளித்தோம். விசிக, ஜென்சிக்கான கட்சி என்று பேசினார்.
யார் மீது கோபம்?
திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறியது முதல் அக்கட்சியை சேர்ந்த பலரும் தொடர்ந்து விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். இதற்கு திருமாவளவன் பலமுறை பதிலளித்தும் திமுக.,வின் விமர்சனங்கள் தொடர்வதால் இந்த கோபம் ஏற்பட்டிருக்கலாம்.
மற்றொரு புறம் விஜய் மீதும் சற்று காட்டமான விமர்சனங்களை முன் வைத்துள்ளதால், அவர் மீதும் கோபம் இருக்கலாம் என்றே உணர முடிகிறது. காரணம், தேர்தல் முடிவுகள் வெளியானதும் அதிமுக-திமுக கூட்டணி அமைத்து திருமாவளவனை முதல்வராக்க முயற்சி செய்ததாக ஒரு பேச்சு உலா வந்தது. ஆனால் அது கடைசி நிமிடத்தில் முடியாமல் போய், விஜய் முதல்வரானார். அதனால், "நான் முதல்வராக இருக்க வேண்டிய இடத்தில், இவர் இருக்கிறாரே...அரசியலுக்கு புதியவரான விஜய்யை கூட்டணி கட்சி தலைவராக ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதே" என்ற ஆதங்கமும் காரணமாக இருக்கலாம்.
திமுக மீது கடுமையான கோபத்தை காட்டினால் அடுத்த தேர்தலில் விசிக.,விற்கு தவெக சீட் ஒதுக்கும் என்பதற்கான முன்னோட்டமாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம்.