எம்.பியாக இருக்கும் திருமாவளவன்.. எம்.எல்.ஏவாக முடிவெடுத்தது ஏன்.. உற்று நோக்கும் திமுக!
சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சட்டசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளார். இது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. எம்.பியாக இருந்து வரும் திருமாவளவன், சட்டசபைக்குத் திரும்ப விரும்புவது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அதேசமயம், தற்போது சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தும், 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட திருமாவளவன் விரும்புவதற்குப் பின்னால் மிக முக்கியமான அரசியல் காரணங்கள் மற்றும் தொலைநோக்குத் திட்டங்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது.
சமீபத்திய சமூக ஊடக நேரலையில் அவர் குறிப்பிட்டது போல, 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியல் களம் மிகப்பெரிய மாற்றத்தைச் சந்திக்கும் என திருமாவளவன் கருதுகிறார். அந்த மாற்றத்தின் போது ஒரு கட்சியின் தலைவராக சட்டமன்றத்திற்குள் இருந்து குரல் கொடுப்பது, கட்சியின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உதவும் என அவர் நம்புவதாக நம்பப்படுகிறது.
தமிழக அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள புதிய வரவுகள் மற்றும் மாற்றங்களை திருமாவளவன் தொடர்ந்து கவனித்து வருகிறார், கணித்தும் வருகிறார். குறிப்பாக நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ள சூழலில், இளைஞர்கள் மற்றும் ஒரு குறிப்பிட்ட வாக்கு வங்கி சிதற வாய்ப்புள்ளது. திருமாவளவன் விஜய்யுடன் அணி சேரவில்லை என்றாலும் கூட அந்த ஆப்ஷன் முழுமையாக இல்லை என்று சொல்லி விட முடியாது. நடப்புத் தேர்தலில் விஜய் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினால், எதிர்காலத்தில் விசிக - விஜய் கூட்டணி அமையவும் வாய்ப்புள்ளதை யாரும் மறுக்க முடியாது. காரணம் அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.
எதிர்கால அரசியல் இப்படித்தான் அமையலாம் என்ற கணிப்பு திருமாவளவனுக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது. அதையும் மனதில் கொண்டே அவர் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. விசிக நீண்ட காலமாக "ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு" என்ற முழக்கத்தை முன்வைத்து வருகிறது. வெறும் கூட்டணி கட்சியாக மட்டும் இல்லாமல், ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறுவதற்கான அழுத்தத்தை திமுக-விடம் கொடுக்கவும் அவர் திட்டமிட்டிருக்கலாம். அதாவது அதற்கான சூழல் வரும்போது அதைச் செய்யும் திட்டத்தில் திருமாவளவன் இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. அப்படிப்பட்ட சூழல் வரும்போது, அவர் சட்டமன்ற உறுப்பினராக இருப்பது கூடுதல் பலம் சேர்க்கும்.
அது மட்டுமல்லாமல், சட்டமன்றத்தில் திருமாவளவன் போன்ற அனுபவம் வாய்ந்த ஆளுமை சட்டமன்றத்தில் இருப்பது அவசியம் என விசிக நிர்வாகிகள் கருதுகின்றனர்.
கடந்த 2016-ல் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் வெறும் 87 வாக்குகளில் அவர் வெற்றியைத் தவறவிட்டது ஒரு வரலாற்றுச் சறுக்கலாகப் பார்க்கப்படுகிறது. அந்தத் தொகுதியில் மீண்டும் நின்று வெற்றி பெறுவது, அவரது அரசியல் செல்வாக்கை நிரூபிப்பதற்கான ஒரு கௌரவப் போராட்டமாகவும் பார்க்கப்படுகிறது. மேலும் தோல்வி என்ற வரலாற்றைத் துடைத்து வெற்றி வரலாறாக அதை மாற்றும் முயற்சியாகவும் இதைப் பார்க்கலாம்.
நாடாளுமன்ற அரசியலை விட சட்டமன்ற அரசியல் என்பது மக்களுடன் நேரடித் தொடர்புடையது. குறிப்பாகத் தலித் இளைஞர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகச் சட்டமன்றத்தில் விவாதங்களை முன்னெடுப்பது கட்சியின் அடிமட்டத் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தும். தமிழ்நாட்டு அரசியலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை மேலும் பலமாக்கவும் இது உதவும். எதிர்காலத்தில் விசிக அசைக்க முடியாத சக்தியாக மாற வேண்டும் என்பது திருமாவளவனின் நீண்ட கால நோக்கமாகும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக விசிக உருவெடுத்தது நினைவிருக்கலாம். இதை மேலும் வலுப்படுத்த திருமாவளவன் திட்டமிடுகிறார்.
டெல்லி அரசியலை விட, தமிழகத்தின் எதிர்கால அரசியல் மாற்றங்களைத் தீர்மானிக்கும் சக்தியாகச் சட்டமன்றத்தில் இருக்க வேண்டும் என்ற வியூகத்தோடு இம்முறை களம் இறங்குகிறார் திருமாவளவந்
காட்டுமன்னார்கோவில் - ஒரு ஆய்வு
கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள காட்டுமன்னார்கோவில் (தனி) தொகுதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கோட்டையாகக் கருதப்படுகிறது. காட்டுமன்னார்கோவில் தொகுதியில் தலித் மற்றும் வன்னியர் சமூக மக்கள் கணிசமாக உள்ளனர்.
இந்தத் தொகுதியில், 2006ல் ரவிக்குமார், 2021ல் சிந்தனைச் செல்வன் என விசிக சார்பில் வென்றுள்ளனர். இடையில் 2011ல் ரவிக்குமார் தோல்வியடைந்துள்ளார். மக்கள் நலக் கூட்டணி சார்பில் 2016 தேர்தலில் திருமாவே இங்கு போட்டியிட்டார். அதில் வெறும் 87 வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவன் தோல்வி அடைந்தார்.
2016 சட்டமன்றத் தேர்தலில் திருமாவளவன் இத்தொகுதியில் போட்டியிட்டபோது, தமிழகமே அத்தேர்தல் முடிவை உற்றுநோக்கியது. காரணம் அப்போது உருவாகியிருந்த மக்கள் நலக் கூட்டணி. அத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முருகுமாறன் 48,450 வாக்குகளைப் பெற்றார், திருமாவளவன் 48,363 வாக்குகளைப் பெற்றார்.
வெறும் 87 வாக்குகள் இடைவெளியில் திருமா தோல்வியைத் தழுவினார். அன்று அவர் ஒரு வலுவான கூட்டணியில் (திமுக/அதிமுக) இருந்திருந்தால், அவரது வெற்றி மிக எளிதாக இருந்திருக்கும்.
சமீபத்தில் முடிந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில், சிதம்பரம் தொகுதியின் கீழ் வரும் காட்டுமன்னார்கோவில் சட்டமன்றப் பகுதியில் திருமாவளவன் பெற்ற வாக்குகள் அவருக்குப் பெரும் நம்பிக்கையைத் தருகின்றன. அந்த நம்பிக்கையில்தான் தற்போது அவர் களம் இறங்கியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில், காட்டுமன்னார் கோவில் தொகுதியில் விசிகவுக்கு 54.78% வாக்குகள் கிடைத்தன. 2021 சட்டமன்றத் தேர்தலை விட (49%), 2024-ல் விசிக-வின் வாக்கு சதவீதம் இந்தத் தொகுதியில் அதிகரித்துள்ளது கவனிக்கத்தக்கது.
2016-ல் எந்த பெரிய திராவிடக் கட்சிகளின் துணையும் இன்றி (மக்கள் நலக் கூட்டணியில்) திருமாவளவன் 29% வாக்குகளைப் பெற்றிருந்தார். இத்தொகுதியில் தலித் மக்கள் தொகை 36% க்கும் மேல் உள்ளது. இவர்களுடன் திமுக-வின் வாக்கு வங்கியும் இணையும்போது விசிக-வின் வெற்றி வாய்ப்பு 50%-ஐ நெருங்குகிறது.
2011-ல் 57% வாக்குகளைப் பெற்ற அதிமுக, 2021-ல் 43% ஆகவும், 2024 மக்களவைத் தேர்தலில் 25% ஆகவும் குறைந்துள்ளது திருமாவளவனுக்குச் சாதகமான அம்சமாகும்.
புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால், 2016-ல் இழந்த வெற்றியை 2026-ல் மீட்டெடுக்க திருமாவளவன் களம் இறங்குகிறார். வலுவான கூட்டணியுடன் இப்போது களம் புகுவதால், கடந்த முறை நழுவிய வெற்றி இந்த முறை நிச்சயம் கை கூடி வரும் என்பதில் சந்தேகம் இல்லை. வெற்றிக்குப் பின்னர் அவரது சட்டசபை செயல்பாடு எப்படி இருக்கப் போகிறது என்பதுதான் சுவாரஸ்யமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.