ஈழத்தமிழர்கள் நலம்.. தொண்டர்கள் கொடுத்த வேல்.. சீமானி்ன் ஆயுதங்களை கையில் தூக்கிய விஜய்!

Su.tha Arivalagan
Sep 20, 2025,07:00 PM IST

சென்னை : சமீப காலமாகவே செய்தியாளர்கள் சந்திப்பாக இருந்தாலும் பொதுக் கூட்டமாக இருந்தாலும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜய்யை விமர்சிப்பதை மட்டும் தவறுவதே இல்லை. விஜய் பற்றிய கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பாத போதும் கூட விஜய் பற்றி தொடர்ந்த மிக கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகிறார் சீமான். கிட்டதட்ட விஜய்யையும், அவரது செல்வாக்கையும் டேமேஜ் செய்யும் விதமாக தனிமனித தாக்குதலையே சீமான் முன்வைத்து வருகிறார். 


விஜய் பற்றியும், தவெக பற்றியும் சீமான் தொடர்ந்து விமர்சனங்களை முன் வைத்த போதிலும் இதுவரை ஒருமுறை கூட விஜய் சீமானின் பெயரை குறிப்பிடவோ, அவரது விமர்சனங்களுக்கு பதிலளிக்கவோ இல்லை. ஆனால் இன்று நாகையில் முதல் முறையாக விஜய் கையில் எடுத்து பேசிய ஒரு விஷயம் சீமானின் இத்தனை ஆண்டு கால அரசியலையே ஆட்டம் காண வைத்துள்ளது. தமிழக அரசியல் களத்தையும் சூடுபிடிக்க வைத்துள்ளது. 


இதுவரை மீனவர்கள் பிரச்சனை குறித்து விஜய் பலமுறை பேசி உள்ளார். மதுரை மாநாட்டிலும் கூட இதை குறிப்பிட்டார். இன்று அவரே கூறியதை போல் 14 ஆண்டுகளுக்கு முன் இதை நாகை மாவட்டத்தில் மீனவர்கள் பிரச்சனைகளாக குரல் கொடுத்து, ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளார் விஜய். மதுரை மாநாட்டில் கச்சத் தீவை மீட்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு விஜய் கோரிக்கையும் விடுத்தார். 




விஜய்யின் இந்த பேச்சுக்கு இலங்கையில் கடும் எதிர்ப்பு எழுந்தது. கச்சத்தீவை திருப்பித் தர முடியாது என இலங்கை அதிபரும் கூட விஜய்க்கு பதிலளித்து இருந்தார். கச்சத்தீவை மீட்பது என்பது பல காலமாகவே தமிழக அரசியல் பிரச்சாரத்தின் முக்கிய பகுதியாக இருந்து வருகிறது.  ஆனால் இன்று முதல் முறையாக ஈழத்தமிழர்கள் பிரச்சனை பற்றியும் விஜய் பேசி உள்ளார். 


இது தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழர்களின் ஆதரவை பெறுவதற்காக விஜய் பேசினாரா அல்லது இலங்கையில் ஜனநாயகன் படம் எந்த பிரச்சனையும் இல்லாமல் ரிலீசாகி, நல்ல வசூலை பெற வேண்டும் என்பதற்காக பேசினாரா என்பது தெரியவில்லை. ஆனால் இதுவரை ஈழத்தமிழர்கள், இனப்படுகொலை ஆகியவற்றை வைத்து அரசியல் செய்து வரும் சீமனின், அரசியல் அஸ்திவாரத்தையே இது ஆட்டம் காண வைக்கும் என்றும் சொல்லலாம்.


தமிழகத்தில் 8 சதவீதம் ஓட்டு வங்கி வைத்துள்ள சீமானின் சமீபத்திய பேச்சுக்கள், செயல்பாடுகள் அவரது செல்வாக்கை மக்களிடம் சரிய வைத்துள்ளது. மக்களின் பிரச்சனை பற்றி பேசி வருவதால்தான் சீமானுக்கு செல்வாக்கு அதிகரித்து வந்தது. ஆனால் தேர்தல் சமயத்தில் அதுதொடர்பாக கவனம் ஈர்ப்பதை விட்டு விட்டு இயற்கை சார்ந்த மாநாடுகளை நடத்தி, நகைச்சுவை செய்து வருகிறார் என அவரது சொந்த கட்சியினரே சீமான் மீது அதிருப்தியில் இருந்து வருகிறார்கள். 


இந்த சமயத்தில் சீமானின் அடி நாதமான, ஈழதமிழர் விவகாரத்தை கையில் எடுத்து விஜய் பேச துவங்கி உள்ளது, சீமானுக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது. இதனால் இன்னும் கோபமடைந்து விஜய்யை மேலும் கடுமையாக அவர் விமர்சிப்பதற்கும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.


அதேபோல சீமானின் இன்னொரு அடையாளம் அந்த வேல். அந்த வேலையும் இன்று விஜய்யிடம் கொடுத்து தவெக தொண்டர்கள் நாம் தமிழர் கட்சியை மேலும் சீண்டியுள்ளனர். இப்படி அடுத்தடுத்து சீமானின் ஆயுதங்களை விஜய் கையில் ஏந்தியதால் சீமான் தரப்பு எப்படி இதற்கு ரியாக்ட் செய்யும் என்பது சுவாரஸ்யமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.