கோவில் மணி ஓசை தன்னை.. சாமி கும்பிடும்போது மணி அடிப்பது ஏன் தெரியுமா?

Su.tha Arivalagan
Feb 01, 2026,12:58 PM IST

- ஆ.வ. உமாதேவி


கோயில்களில் மணி அடிப்பது ஆன்மீக மற்றும் அறிவியல் காரணங்களுக்காக செய்யப்படுகிறது. இது எதிர்மறையான ஆற்றலை நீக்கி, நேர்மறை ஆற்றலை அதிகரிப்பதாகவும் மனதை ஒருநிலைப்படுத்தி தெய்வ வழிபாட்டிற்கு நம்மை தயார்படுத்துவதாகவும் நம்பப்படுகிறது. மேலும் மணியின் ஓசை உடலின் ஏழு சக்கரங்களை விழிப்படையச் செய்து, மூளையின் செயல் திறனை மேம்படுத்துவதாக கருதப்படுகிறது. 


மணி ஓசை ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உணர்த்துவதாகவும் தீய சக்திகளை விரட்டி, தெய்வீக ஆற்றலை வரவேற்பதாகவும் கருதப்படுகிறது. 


வெங்கலம், காட்மியம், ஈயம், தாமிரம், துத்தநாகம், நிக்கல், குரோமியம் மற்றும் மாங்கனிஸ் போன்ற உலோகங்களால் செய்யப்படும் மணிகள் 7 வினாடிகளுக்கு மேல் நீடிக்கும், அதிர்வை ஏற்படுத்துகின்றன. இந்த அதிர்வு மூளையின் இரு பக்கங்களையும் ஒருநிலைப்படுத்தி கவனத்தை அதிகரிக்க உதவும். 




மணி ஓசை நம் மனதில் உள்ள தேவையற்ற எண்ணங்களை நீக்கி, அமைதியையும் கவனச் சிதறல் இல்லாமையையும் தருகிறது. கோயிலுக்குள் நுழையும்போது மணி அடிப்பது தெய்வத்திடம் அனுமதி கேட்பதாகவும், தூய்மையான மனதுடன் இறைவனை தரிசிக்க தன்னை தயார்படுத்துவதாகவும் கருதப்படுகிறது. 


மணியை அடித்து விட்டு நம் வேண்டுதல்களை வைக்கும்போது அது இறைவனின் காதுகளில் விழுந்து விட்டதாக நமக்குள் ஒரு நேர்மறை சிந்தனையை மணியோசை ஏற்படுத்துகிறது. மனித மனம் எப்போதும் இசையுடன் தொடர்புடையது. அதனால்தான் கோயில்களில் மணி ஓசை நம் ஐம்புலன்களையும் ஆன்மீகத்தில் ஈடுபடுத்தும் ஒரு வடிகாலாக உள்ளது. 


பூசை காலங்களில் அடிக்க நிறுவப்பட்டிருக்கும் பெரிய அளவிலான மணிக்கு உள்ளே இருக்கும் நாக்கோடு ஒரு கயிறுடன் இணைக்கப்பட்டு, மங்களகரமாக ஒலி எழுப்பப்படும். மற்ற நேரங்களில் மணியின் நாவை இழுத்து கட்டிவைப்பர். இந்த செயலிலிருந்து தேவையில்லாத நேரத்தில், நாம்  நம் நாவை அடக்கி கட்டி வைக்க வேண்டும் என்னும் குறிப்பை உணர்ந்து கொண்டால், பல பிரச்சனைகளை தவிர்க்கலாம். இந்த மணி சொல்லும் பாடம் மனிதனுக்கு மிகவும் தேவையான பாடம். 


திரைப்படப் பாடல்களில் கோவில் மணி! 


1. கோவில் மணி ஓசை தன்னை செய்ததாரோ 

2. டிங் டாங் கோவில் மணி 

3. மாதா உன் கோவிலில் மணி தீபம் 

4. தேவன் கோயில் மணியோசை 

5. தேவனின் கோயில் 

6. கிண்கிணி கிண் கிணி என வரும் மாதா கோயில் மணியோசை 

7. ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்.

    

மேலும் இதுபோல பல திரைப்பட பாடல்களில், கோவில் மணி என்ற சொல் கையாளப்பட்டுள்ளது. 


(ஆ.வ. உமாதேவி, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம், முருக்கம்பட்டு காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக இருக்கிறார்)