கோவை வடக்கு அண்ணாமலையா.. கோவை தெற்கிலிருந்து திருப்பூருக்கு மாறுகிறாரா வானதி?

Su.tha Arivalagan
Mar 25, 2026,07:01 PM IST

சென்னை: பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை முழுமையாக அறிவித்து விட்டது அதிமுக. இனி இங்கெல்லாம் யார் போட்டியிடப் போகிறார்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


குறிப்பாக பாஜக, அமமுக கட்சிகளின் வேட்பாளர்கள் குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதிலும் பாஜக வின் பக்கம் மிகப் பெரிய அளவில் கவனம் திரும்பியுள்ளது. காரணம், பல ஹெவி வெயிட் தலைவர்கள் இந்த முறை களம் இறக்கப்படவுள்ளனர் என்ற எதிர்பார்ப்புதான்.


பாஜக இந்த முறை 27 தொகுதிகளில் போட்டியிடவுள்ளது. பாமக 18, அமமுக 11 தொகுதிகளில் போட்டியிடவுள்ளன. ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 சீட் தரப்பட்டுள்ளது. 


தமிழகத்தின் முக்கியத் தலைவர்களைத் தங்களுக்குச் செல்வாக்குள்ள இடங்களில் களமிறக்கி, வாக்குகளை ஒட்டுமொத்தமாகத் திரட்ட பாஜக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. பாஜகவுக்குக் கிடைத்துள்ள தொகுதிகளைப் பார்த்தாலே இதை யூகித்து விடலாம். பாஜக சார்பில் யாரெல்லாம் களம் இறக்கப்படவுள்ளனர் என்பது குறித்த ஒரு உத்தேச ஆய்வு இது.




அண்ணாமலை கோவை வடக்கு தொகுதியிலும் வானதி சீனிவாசன் திருப்பூர் தெற்கு தொகுதியிலும் போட்டியிடக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த தேர்தலில் அண்ணாமலை அரவக்குறிச்சியில் நின்று தோற்றார். கோவை தெற்கில் நின்று கமல்ஹாசனை வீழ்த்தி வென்றவர் வானதி.  இந்த முறை இருவரும் தொகுதிகள் மாறவுள்ளதாகத் தெரிகிறது.


அதிமுக வசம் இருக்கும் கொங்கு மண்டலத்தைத் தனது கோட்டையாக மாற்ற பாஜக எடுக்கும் தீவிர முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.


தென் மண்டலத்தைப் பொறுத்தவரை தற்போது நெல்லை தொகுதியில் எம்எல்ஏவாக இருக்கும் நயினார் நாகேந்திரன் வாசுதேவநல்லூர் தொகுதிக்கு மாறக் கூடும் என்று தெரிகிறது. பொன் ராதாகிருஷ்ணன் நாகர்கோவில் மற்றும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடக் கூடும். பொன் ராதாகிருஷ்ணன் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரியில் போட்டியிட்டுத் தோற்றார். அதேபோல தமிழிசை, சென்னை தெற்குத் போட்டியிட்டு தோல்வியுற்றார்.


தமிழிசை உள்ளிட்டோரை களம் இறக்குவதன் மூலம், தென் தமிழகத்தில் பாஜகவை வலுவாக்கும் முயற்சியாகப் பார்க்கலாம்.




பாஜகவின் பிற ஸ்டார் வேட்பாளர்களாக பார்க்கப்படுபவர்கள் நடிகை குஷ்பு, எச். ராஜா ஆகியோர். இதில் குஷ்பு மயிலாப்பூரில் போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது. எச். ராஜா மானாமதுரையில் போட்டியிடக் கூடும்.


அடுத்து அமமுக பக்கம் வருவோம். அதிமுகவின் கோட்டையான போடிநாயக்கனூர் தொகுதியில் முன்னாள் முதல்வரும், தற்போது திமுகவில் இணைந்துள்ளவருமான ஓ.பி.எஸ். போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்தத் தொகுதியை அதிமுக தன் வசமே எடுத்துக் கொண்டுள்ளது.


ஓ.பி.எஸ் மீண்டும் போடியில் போட்டியிடுவாரா அல்லது திருமங்கலத்திற்கு மாறுவாரா என்று தெரியவில்லை. திருமங்கலத்தில் மீண்டும் ஆர்.பி. உதயக்குமாரே போட்டியிடவுள்ளார். அமமுகவுக்கு தேனி மாவட்டத்தில் பெரியகுளம் தொகுதி மட்டுமே தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.