நெருக்கடிகளின் நடுவில் விஜய்.. இப்படியே அமைதி காப்பாரா.. அல்லது அதிரடிக்கு மாறுவாரா?
சென்னை: தவெக தலைவரும், முதல்வருமான சி. ஜோசப் விஜய்க்கு கடும் நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன. எதிர்க்கட்சிகளிடமிருந்து மட்டுமல்லாமல் தற்போது கூட்டணிக் கட்சிகளிடமிருந்தும் கூட அரசுக்கு தற்போது நெருக்கடிகள் முற்ற ஆரம்பித்துள்ளன.
திரைத்துறையில் இருந்து அரசியல் களம் புகுந்து, தமிழக அரசியலின் முக்கியக் காரணியாக மாறியிருக்கும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், தற்போது தனது ஆட்சி மற்றும் அரசியல் பயணத்தின் மிக முக்கியமான சோதனைக் கட்டத்தை எதிர்கொண்டுள்ளார்.
ஒருபுறம் சொந்தக் கட்சி நிர்வாகிகளின் சர்ச்சைப் பேச்சுகள், மறுபுறம் எதிர்க்கட்சிகளின் சரமாரித் தாக்குதல்கள், மற்றொரு புறம் கூட்டணிக் கட்சிகள் தரும் நெருக்கடிகள் என மூன்று முனை நெருக்கடியில் அவர் சிக்கியுள்ளார்.
இன்னொரு புறம் மாநில நலன் தொடர்பான விவசாயிகள் கடன் பிரச்சினை, காவிரி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினை, மேகதாது பிரச்சினை, சென்னை விமான நிலையப் பிரச்சினை ஆகியவற்றிலும் பெரும் சிக்கல்கள் நீடித்து வருகின்றன. இதுவும் தவெக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது.
ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக தவெக எம்எல்ஏ கருப்பையா பேசிய கருத்து அரசியல் தளத்தில் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது. பாரம்பரியம் மற்றும் மக்களின் உணர்வுகளோடு தொடர்புடைய ஒரு விவகாரத்தில், கட்சியின் மூத்த பொறுப்பில் உள்ளவர் கூறிய கருத்து எதிர்க்கட்சிகளுக்குப் பெரிய ஆயுதமாகக் கிடைத்துள்ளது.
திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட முதன்மை எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்து, அரசியல் முதிர்ச்சியற்ற கட்சி என்றும் மக்களின் உணர்வுகளை மதிக்காத நிலைப்பாடு என்றும் தவெக மீது சரமாரிப் புகார்களைக் குவித்து வருகின்றன.
மேகதாது தொடர்பாக இதுவரை விஜய் அரசு அழுத்தமான, அதிரடியான நடவடிக்கையை எடுக்கவில்லை. இது மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல சென்னை பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மறுபக்கம், ஆட்சி அதிகாரத்தில் நீடிப்பதற்கும் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கும் தவெக கூட்டணிக் கட்சிகளின் தயவை எதிர்பார வேண்டிய சூழல் நிலவுகிறது. கொள்கை முடிவுகள், அமைச்சரவை கோரிக்கைகள் மற்றும் தேசிய அரசியல் நிலைப்பாடுகளில் கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகின்றன. விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள் ஆகியவை தொடர்ந்து ஏதாவது ஒரு ரூபத்தில் குடைச்சல் தந்து கொண்டே உள்ளன. இப்போது காங்கிரஸும் இதில் சேர்ந்துள்ளது.
ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக விஜய் ஏற்காவிட்டால் ஆட்சியிலிருந்து விலகுவோம் என்று காங்கிரஸ் கூறியுள்ளது தவெகவினரை அதிர வைத்துள்ளது. காங்கிரஸ் வசம் 5 எம்எல்ஏக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னொரு பக்கம், நீதிமன்ற வழக்குகள் மற்றும் இடைத்தேர்தல் தொடர்பான சட்டப் போராட்டங்களில் தவெக கவனம் செலுத்தி வரும் வேளையில், ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள காலியாக உள்ள தொகுதிகளில் வெற்றி பெற்று தனித்து பெரும்பான்மைக்கு நெருக்கமாகச் செல்ல வேண்டிய கட்டாயம் விஜய்க்கு மிக மிக அவசியமாக மாறியுள்ளது. எதிர்க்கட்சிகள் தவெக அரசு எப்போது கவிழும் என்று காத்திருக்கும் நிலையில், இடைத்தேர்தல் வெற்றிகளே விஜய்யின் முதன்மை இலக்காக இருக்கும்.
விஜய்யின் வழக்கமான அரசியல் பாணி என்பது பொறுமை காத்து சரியான நேரத்தில் காய்களை நகர்த்துவது என்பதாகவே இருந்துள்ளது. ஆனால், தற்போதைய சூழலில் வெறும் அமைதி மட்டுமே அவருக்கு உதவாது. தொடர்ந்து அமைதி காத்தால் கட்சி நிர்வாகிகளின் கட்டுப்பாடு கைநழுவி விடும் என்றும், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்வது போலாகிவிடும் என்றும் கட்சிக்குள் ஆதங்கம் எழக்கூடும்.
எனவே, சர்ச்சையை ஏற்படுத்திய எம்எல்ஏ கருப்பையா போன்ற நிர்வாகிகள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதன் மூலம் கட்சிப் கட்டுப்பாடு விஷயத்தில் தான் சமரசம் செய்ய மாட்டேன் என்பதை வெளிப்படுத்துவது, இடைத்தேர்தல் வரவுள்ள தொகுதிகளை மையமாகக் கொண்டு பெரிய அளவிலான பிரசாரப் பயணங்களை மேற்கொண்டு தொண்டர்களை உற்சாகப்படுத்துவது மற்றும் கூட்டணிக் கட்சிகளின் மிரட்டல்களுக்குப் பணியாமல் சட்டசபையில் பலத்தை நிரூபிப்பதற்கான மாற்றுத் திட்டங்களைச் செயல்படுத்துவது போன்ற அதிரடி முடிவுகளை விஜய் விரைவிலேயே எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நெருக்கடிகள் விஜய்க்கு ஒரு மிகப்பெரிய அரசியல் சோதனையாகும். ஜல்லிக்கட்டு தொடர்பான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது, கூட்டணிக் கட்சிகளின் அழுத்தத்தைச் சமாளிப்பது மற்றும் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது ஆகிய மூன்றையும் அவர் எவ்வாறு கையாள்கிறார் என்பதில்தான் தவெக அரசின் எதிர்காலம் அடங்கியுள்ளது.
இப்படியே எல்லாப் பிரச்சினைகளுக்கும் விஜய் அமைதி காத்து வந்தால் அது மக்கள் மத்தியிலும் கூட அதிருப்தியை ஏற்படுத்தலாம். எனவே முதல்வர் விஜய் தீவிரக் கவனம் செலுத்தி நிலைமையை சரி செய்ய முயற்சித்தால் நல்லது.