மோடி-ராகுல் காந்தி... யாரை சந்திக்க போகிறார் விஜய்? இடியாப்பச் சிக்கலில் தவெக!

Su.tha Arivalagan
Oct 09, 2026,10:11 AM IST

சென்னை: பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இருவரும் அடுத்தடுத்த நாட்களில் தமிழகம் வர உள்ளதால், தமிழக முதல்வர் விஜய் யாரை சந்திப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இருவரில் யாரை சந்தித்தாலும் தவெக.,விற்கு மிகப் பெரிய சங்கடம் காத்திருக்கிறது.


சென்னையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ சேவையை துவங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி, அக்டோபர் 11ம் தேதியன்று தமிழகம் வர உள்ளார். இதற்கு முன்னதாக அக்டோபர் 10ம் தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் சென்னை வர உள்ளார். 


தற்போது தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் தவெக, பாஜக எதிர்ப்பு நிலைப்பாட்டில் உள்ளது. காங்கிரசுடன் கூட்டணியில், அவர்களின் ஆதரவுடன் தவெக அரசு நடைபெற்று வருகிறது. 


பிரதமர் என்ற அடிப்படையில் மோடியையும், கூட்டணி கட்சி தலைவர் என்ற முறையில் ராகுலையும் சென்று விஜய் சந்திக்க வேண்டும். ஆனால் ராகுலை சந்திக்க விஜய் நேரம் ஒதுக்க மறுத்து விட்டதாக ஒரு தகவல் கூறுகிறது.


3 "பிரதமர் வேட்பாளர்கள்" :




2029ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி தான் மீண்டும் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று நம்பப்படுகிறது. அதே போல் காங்கிரஸ் தரப்பில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என கூறி வருகிறார்கள். இதற்கிடையில் தவெக.,வினரும் விஜய் தான் பிரதமர் வேட்பாளர் என்றும் கூறி வருகிறார்கள். 


ஒரே கூட்டணியில் இருக்கும் தவெக, காங்கிரஸ் இரண்டு கட்சிகளுமே தங்கள் கட்சி தலைவர்களை பிரதமர் வேட்பாளர்கள் என்று கூறி வருவதால், கூட்டணியில் சமீப காலமாக புகைச்சலும் ஏற்பட்டது. இதை உறுதிப்படுத்தும் விதமாக, டில்லியில் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்கு விஜய்க்கு பதிலாக தவெக கட்சி சார்பில் மட்டுமே கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு ராகுல் கைது செய்யப்பட்ட போது முதல் ஆளாக விஜய் தான் கண்டனம் தெரிவித்தார் என்பது நினைவிருக்கலாம்.


தவெக.,வுக்கு என்ன சிக்கல்?


கூட்டணியில் இருந்து கொண்டு தனியாக பிரதமர் வேட்பாளரை அறிவித்துள்ளது, தலைமை தேர்தல் கமிஷனர் விவகாரம், எஸ்ஐஆர் விவகாரம் ஆகியவற்றில் பாஜக.,விற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், அவர்களுடன் இணக்கமாக போவது போன்ற தவெக.,வின் செயல்பாடுகளால் காங்கிரஸ் அதிருப்தி அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. 


இதனால் தவெக கூட்டணியில் இருந்து விலகுவது தொடர்பாக காங்கிரஸ் ஆலோசித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையில் விசிக, இடதுசாரிகள் போன்ற கட்சிகளும் தவெக அரசுக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் வாங்க முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் தான் அவர்கள் தொடர்ந்து தவெக.,விற்கு எதிரான கருத்துக்களை முன் வைத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. 


கூட்டணி கட்சிகள் ஆதரவை வாபஸ் வாங்கினால் தவெக ஆட்சி கவிழுமா? என்றால் அதுவும் சந்தேகம் தான். பாமக, அதிமுக அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் ஆதரவு அளித்தால் தவெக அரசுக்கு பெரும்பான்மை கிடைத்து விடுமே என்று நினைக்கலாம். ஆனால் அதிலும் சிக்கல் உள்ளதாம். 


தவெக அரசுக்கு ஆதரவு தர பாமக தரப்பில் ஒரு அமைச்சர் பதவி உள்ளிட்ட இன்னும் சில கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளதாம். ஆனால் அதை ஏற்க தவெக தயங்கி வருகிறதாம். சரி, அதிமுக அதிருப்தி எம்எல்ஏ.,க்களின் ஆதரவை கேட்கலாம் என்றால், தேர்தல் முடிவுகள் வந்தவுடன் சென்று விஜய் அவர்களை சந்தித்ததுடன் சரி. அதற்கு பிறகு தவெக தரப்பில் யாரும் அவர்களை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டதால் தவெக மீது கடும் கோபத்தில் இருக்கிறார்களாம்.


இப்படி பல்வேறு இடியாப்பச் சிக்கல்களுக்கு மத்தியில் இருந்து வரும் தவெக, பிரதமர் மோடி சந்திப்பு மற்றும் ராகுல் காந்தி சந்திப்பு தொடர்பாக புதிய சங்கடத்தில் ஆழ்ந்துள்ளது. எப்படி இதை சமாளிப்பார் முதல்வர் விஜய்.. பொறுத்திருந்து பார்க்கலாம்.