25 சீட்டுதானா.. அல்லது கூடுதலாக கிடைக்குமா.. எதிர்பார்ப்பில் காங்கிரஸ்.. என்ன நடக்கும்?

Su.tha Arivalagan
Jan 28, 2026,01:20 PM IST

சென்னை: 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 25 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் அபார வெற்றி பெற்றது. இந்த முறை அதை விட கூடுதலாக காங்கிரஸ் எதிர்பார்க்கிறது.


2016 சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 41 இடங்களில் போட்டியிட்டு வெறும் 8 இடங்களில் மட்டுமே வென்றிருந்தது. அத்துடன் ஒப்பிடுகையில் 2021 தேர்தலில் அதன் வெற்றி சதவீதமானது, மிகப் பெரிதாகவே இருந்தது.  இந்த நிலையில் வருகிற சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. காரணம் இரு தரப்புக்கும் இடையே நீரு பூத்த நெருப்பு போல நிலவி வரும் உரசல்கள், சமூக வலைதள சாடல்களே.


தற்போதைய அரசியல் சூழல், திமுக-காங்கிரஸ் இடையிலான பேச்சுவார்த்தைகள் மற்றும் கள நிலவரத்தை வைத்துப் பார்க்கும்போது அடுத்து என்ன நடக்கும் என்பதை ஊகிக்கலாம்.




காங்கிரஸ் தரப்பிலிருந்து இந்த முறை 35 முதல் 40 தொகுதிகள் வரை கேட்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, கடந்த முறை வெற்றி பெற்ற 18 தொகுதிகளைத் தக்கவைத்துக் கொள்வது மற்றும் தெற்கு மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் கூடுதல் இடங்களைப் பெறுதல்.


கூட்டணியில் தங்களுக்கு அமைச்சரவையில் பங்கு வேண்டும் என்ற அழுத்தத்தையும் காங்கிரஸ் கொடுத்து வருகிறது.


அதேசமயம், திமுக-வைப் பொறுத்தவரை, அதிக இடங்களில் (சுமார் 160+) நேரடியாகப் போட்டியிட விரும்புகிறது. மற்ற கூட்டணிக் கட்சிகளான விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் கூடுதல் இடங்களைக் கேட்பதால், காங்கிரஸுக்கு கடந்த முறையை விட மிக அதிக இடங்களைக் கொடுப்பது திமுக-வுக்கு சவாலாக இருக்கும்.


இருப்பினும், காங்கிரஸின் அகில இந்தியத் தலைமை மற்றும் ராகுல் காந்தியின் செல்வாக்கை கருத்தில் கொண்டு, 25 முதல் 32 இடங்கள் வரை ஒதுக்கப்பட வாய்ப்பு அதிகம். இருப்பினும் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை திமுக ஏற்காது என்றே சொல்லப்படுகிறது. ஆட்சியில் பங்கு என்பதை விட கூடுதலாக இடங்களைக் கொடுத்து காங்கிரஸை திமுக அமைதிப்படுத்தவே வாய்ப்புகள் அதிகம்.


இதற்கிடையே டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, இன்று திமுக எம்.பி. கனிமொழி சந்தித்துப் பேசவுள்ளார். அப்போது தொகுதிப் பங்கீடு தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.