அந்த ஒரு ராஜ்யசபா எம்.பி., சீட் யாருக்கு?...உச்சகட்ட பரபரப்பில் அதிமுக, திமுக கூட்டணிகள்

Su.tha Arivalagan
Feb 20, 2026,06:04 PM IST
சென்னை : தமிழகத்தில் இந்த மாதத்துடன் காலியாக போகும் 6 ராஜ்யசபா எம்.பி., சீட்டுகளுக்கான தேர்தல் மார்ச் 16ம் தேதி நடக்க உள்ளது. இதில் 4 திமுக சீட்டுகள், 2 அதிமுக சீட்டுகள். இரண்டு கூட்டணியிலுமே தங்களுக்கான ராஜ்யசபா சீட்கள் யாருக்கு என்பது ஏறக்குறைய முடிவாகி விட்டது. திமுக கூட்டணியில் 3 சீட்கள் யாருக்கு என்பதும், அதிமுக.,வில் ஒரு சீட் யாருக்கு என்பதும் ஏறக்குறைய முடிவாகி விட்டது. மீதமுள்ள அந்த ஒரு சீட் யாருக்கு என்ற எதிர்பார்ப்பு உச்சகட்டத்தை எட்டி உள்ளது.

இதுவரை கிடைத்துள்ள தகவல்களின் படி, அதிமுக.,வில் காலியாகும் 2 ராஜ்யசபா எம்.பி., சீட்டுகளில் ஒன்று ஏற்கனவே அன்புமணி தரப்பு பாமக.,விற்கு ஒதுக்கப்பட்டு விட்டதாக சொல்லப்படுகிறது. அன்புமணி ஏற்கனவே எம்.பி.,யாகவும், மத்திய அமைச்சராகவும் இருந்தவர் என்பதால் மீண்டும் அவர் ராஜ்யசபா எம்.பி.,யாக வாய்ப்புள்ளது. அல்லது இந்த முறை ராஜ்யசபா எம்.பி., சீட்டை தனது மனைவி செளமியா அன்புமணிக்கு கொடுத்து விட்டு, தமிழக சட்டசபை தேர்தலில் அன்புமணி போட்டியிடவும் வாய்ப்புள்ளது. எப்படியோ, பாமக.,விற்கு ஒரு எம்.பி.,சீட் உறுதியாகி விட்டது. மீதமுள்ள அந்த ஒரு எம்.பி., சீட்டை அதிமுக யாருக்கு கொடுக்க போகிறது? கூட்டணி கட்சிகள் ஏதாவது ஒன்றிற்கு கொடுக்குமா அல்லது தங்கள் வசமே வைத்திருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.



ஒருவேளை இந்த முறை தமிழக சட்டசபை தேர்தலில் அதிக எம்எல்ஏ.,க்களை அதிமுக பெற்றால், ராஜ்யசபாவில் கூடுதல் எம்.பி.,சீட்கள் அதிமுக.,விற்கு கிடைக்க வாய்ப்புள்ளது. அப்படி கிடைக்கும் போது அதை தங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இப்போதுள்ள ஒரு ராஜ்யசபா சீட்டை கூட்டணி கட்சிகளில் ஒன்றிற்கு கொடுத்து, கூட்டணியை பலப்படுத்த அதிமுக திட்டமிடுமா? என்ன முடிவு எடுக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு உச்சகட்டத்தை எட்டி உள்ளது.

மற்றொரு புறம் திமுக கூட்டணியில் இருக்கும் 4 ராஜ்யசபா எம்.பி.,க்கள் சீட்களில் ஒன்று திருச்சி சிவா.,விற்கு மீண்டும் வழங்கப்படலாம் என சொல்லப்படுகிறது. இன்னொரு சீட், காங்கிரஸில் ப.சிதம்பரத்திற்கு உறுதி செய்யப்பட்டு விட்டதாக சொல்லப்படுகிறது. மூன்றாவது சீட், சமீபத்தில் கூட்டணியில் இணைந்த தேமுதிக.,வின் சுதீசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மீதமுள்ள அந்த ஒரு சீட் யாருக்கு? என்பது தற்போது ஹாட் டாப்பிக்காக போய் கொண்டிருக்கிறது. ஆனால் இன்று அந்த ஒரு சீட் யாருக்கு என்பது ஏறக்குறைய முடிவாகி விட்டதாக தெரிகிறது.

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், திமுக.,வில் இணைய உள்ளது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. இன்று ஒரே நாளில் இரு முறை சென்று முதல்வர் ஸ்டாலினை தனது மகன் ரவீந்திரநாத்துடன் சென்று ஓபிஎஸ் சந்தித்துள்ளார். அதைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவுவையும் அவர் சென்று சந்தித்துள்ளார். அவரது ஆதரவு எம்எல்ஏ.,வான ஐயப்பன் சட்டசபையிலேயே வைத்து, எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆசியுடன் மு.க.ஸ்டாலின் மீண்டும் தமிழக முதல்வர் ஆவார் என புகழ்ந்து பேசி உள்ளார். சட்டசபை கூட்டம் முடிந்து வெளியே வந்த ஓபிஎஸ், "நல்லாட்சி தந்ததற்காக முதல்வருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக அவரை சந்தித்தேன். தமிழகத்திற்கு நல்ல காலம் பிறந்துள்ளது. மீண்டும் திமுக ஆட்சி அமைவது உறுதியாகி உள்ளது. பெரும்பான்மை மக்களின் கருத்துக்களையே ஐயப்பன் வெளிப்படுத்தி உள்ளார்" என திமுக ஆதரவு நிலைப்பாட்டை உறுதி செய்துள்ளார்.

ஓபிஎஸ் திமுக கூட்டணியில் இணைகிறார் என்றால், தனது மகனுடன் சென்று முதல்வரை சந்தித்து விட்டு வந்துள்ளதால், ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்திற்கு மீதமுள்ள ஒரு ராஜ்யசபா எம்.பி., சீட்டை ஒதுக்க திமுக.,விடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கலாம் என சொல்லப்படுகிறது. மகனுக்கு ஒரு ராஜ்யசபா சீட், தனக்கு 3 முதல் 6 சட்டசபை தொகுதிகள் என ஓபிஎஸ் கேட்டு பெற்றிருக்கலாம் என சொல்லப்படுகிறது.

ஆனால் திமுக சீனியர்கள் தலைவர்கள் இதற்கு ஒப்புக் கொள்வார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வியாகும். காரணம் ஓபிஎஸ்ஸுக்கு சில சட்டசபைத் தொகுதிகள் தரக் கூட பிரச்சினை இருக்காது. ஆனால் ராஜ்யசபா சீட்டை கொடுக்க, பலமுறை முதல்வர் யோசிக்கக் கூடும் என்று தெரிகிறது.