பாஜகவுக்கு செக் வைக்க.. இன்னொரு தமிழ்நாட்டுக்காரரை வேட்பாளராக்குமா இந்தியா கூட்டணி?

Su.tha Arivalagan
Aug 18, 2025,12:33 PM IST

டெல்லி: திமுகவுக்கு செக் வைக்க தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணனை குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராக்கியுள்ளது பாஜக. ஆனால் இதை இந்தியா கூட்டணி எப்படி சமாளிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாலராக மகாராஷ்டிர மாநில ஆளுநராக இருக்கும் சி.பி.ராதாகிருஷ்ணனை அறிவித்துள்ளனர். இவர் கோயம்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். முன்னாள் பாஜக எம்.பி. ஆர்.எஸ்.எஸ் பின்னணியில் இருந்து வந்தவர். 


ஆளுநராக இருந்து வரும் சி.பி.ராதாகிருஷ்ணனை வேட்பாளராக்கியிருப்பது தமிழ்நாட்டு சட்டசபைத் தேர்தலை மனதில் கொண்டு என்று ஒரு பேச்சு எழுந்துள்ளது. மேலும் இது திமுகவுக்கு வைக்கப்பட்ட செக் என்றும் கூறப்படுகிறது.  இதை நிரூபிக்கும் வகையில் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட கையோடு முதல்வர் மு.க.ஸ்டாலினை தொடர்பு கொண்டு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார். அப்போது சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தர வேண்டும் என்றும் கோரியுள்ளார்.




அதாவது தமிழ்நாட்டுக்காரரான சி.பி.ராதாகிருஷ்ணனை தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் என்று பாஜக விரும்புகிறது. குறிப்பாக திமுக கூட்டணியை அது குறி வைத்துள்ளது. ஒரு வேளை தேர்தலில் ராதாகிருஷ்ணனுக்கு எதிராக திமுக ஓட்டளிக்கும் பட்சத்தில் வரும் 2026 தமிழக சட்டசபை தேர்தலில் அதை தனக்கு சாதமாக்கிக் கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளது.


அதாவது தமிழ்நாட்டைச்  சேர்ந்தவரையே திமுக புறக்கணித்து விட்டது, துரோகம் செய்து விட்டது என்று பிரச்சாரம் செய்யவும் பாஜக முயலும் என்பதை எளிதாக கணிக்கலாம். அதே சமயம் இந்தியா கூட்டணியை பகைத்துக் கொண்டு ராதாகிருஷ்ணனுக்கு திமுக ஆதரவு வழங்கினாலும், இதையே காரணமாக வைத்து இந்தியா கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி செய்யும். ஆனால் அதற்கு கண்டிப்பாக வாய்ப்பில்லை என்று நம்பலாம்.


காரணம், இந்தியா கூட்டணியின் மிக முக்கியமான கட்சியே திமுகதான். அப்படி இருக்கும்போது முன்னாள் ஆர்எஸ்எஸ் பிரமுகரான சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு திமுக ஆதரவு தர வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது. அதேசமயம், பாஜகவுக்குப் பதிலடி கொடுக்க இந்தியா கூட்டணியும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக்க முயலுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.


வைகோ போன்ற தலைவர்களைக் கூட இந்தியா கூட்டணி பரிசீலிக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதுபோன்ற ஒரு தலைவரை வேட்பாளராக்கினால் பாஜகவின் செக்கை திமுக கூட்டணி எளிதாக சமாளிக்க முடியும் என்று நம்பப்படுகிறது.