பாஜக.,வின் உருட்டல்...மிரட்டலை அரசியல் ரீதியாக எதிர்கொள்வோம் : முதல்வர் பேச்சு

Manjula Devi
May 03, 2025,02:46 PM IST

சென்னை: அரசியல் ரீதியாக நம்மை வெல்ல முடியாதவர்கள் மிரட்டல் மூலம் அசிங்கப்படுத்த நினைக்கிறார்கள். அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை பயன்படுத்தி பாஜக ஒன்றிய அரசு அரசியல் நடத்துவதாக திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.


சென்னை அண்ணா அறிவாலயத்தில்  முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் உள்ளிட்ட 76 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். இதில் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தல் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக   பல்வேறு தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.


அதில், அதிமுகவை மிரட்டி தமிழகத்தில் காலூன்ற பாஜக முயற்சிகிறது. எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த கட்சியின் மீதான கட்டுப்பாட்டை இழந்துவிடுவோமோ என்ற பயத்தில் பாஜக கூட்டணியை ஏற்றுக் கொண்டுள்ளார்.




அரசியல் ரீதியாக நம்மை வெல்ல முடியாதவர்கள் மிரட்டல்கள் மூலம் அசிங்கப்படுத்த நினைக்கிறார்கள். அவர்களின் அரட்டல், மிரட்டல், உருட்டலுக்கான உண்மையான காரணம் மக்களுக்கு தெரியும். எனவே, எந்த அச்சுறுத்தலையும் சட்டபூர்வமாகவும் மக்கள் ஆதரவுடன் திமுக எதிர்கொள்ளும். நம்முடைய பலமே நம்முடைய கழக கட்டுமானம் தான். இத்தகைய நிர்வாக கட்டமைப்பு எந்த கட்சிக்கும் கிடையாது .அந்த கட்டமைப்பை காலம் தோறும் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறோம். இருக்க வேண்டும். தடங்கள் என்பது எப்போதும் இருக்கும். அதை உங்களிடம் உள்ள உழைப்பால் வெல்லுங்கள் என கூறினார்.


மேலும் அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை பயன்படுத்தி அரசியல் நடத்தும் ஒன்றிய பாஜக அரசுக்கு கண்டனம் விடுக்கப்பட்டது.