Political Maturity on cards?.. கே.ஏ.செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் பயணிக்குமா த‌வெக?

Su.tha Arivalagan
Dec 16, 2025,05:14 PM IST

- க. சுமதி


ஈரோடு: தவெக தொண்டர்களுக்கு  தற்போது மிக மிக அவசியமாக தேவைப்படும்  அரசியல் முதிர்ச்சியைத் தரும் பணியை முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கையில் எடுத்திருப்பதாக சொல்கிறார்கள். ஈரோடு விஜய் கூட்டம் அதன் முதல் படியாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.


ஜெயலலிதா காலத்திலேயே சிறந்த ஸ்டிரேட்டஜிஸ்ட் என்று சொல்லப்பட்டவர் செங்கோட்டையன். எனவே அவர் விஜய்யையும் கூட சரியான பாதைக்குத் திருப்ப உதவுவார் என்றும் கருதப்படுகிறது. இனிமேல் விஜய் பங்கேற்கும் பொது நிகழ்ச்சிகள் எந்தக் குழப்பமும் இல்லாமல் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


ஈரோடு மாவட்டம் சரளை என்ற இடத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் பிரச்சாரக் கூட்டம் டிசம்பர் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை  தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர்  முன் நின்று நடத்தி வருகின்றனர்.




முன்னதாக, டிசம்பர் 18ஆம் தேதி நடைபெறவிருக்கும் பிரச்சாரக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்வதற்கான மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், தவெக   தலைமை  ஒருங்கிணைப்பாளராக இணைந்துள்ள மதிப்பிற்குரிய முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்களின் வழிகாட்டுதலின்படி தவெக அரசியல் பயணம் தொடரும் என்று தெரிவித்தார் என்பதை இங்கு நினைவு கூற வேண்டும்.


புஸ்ஸி ஆனந்த் மேலும் பேசும்போது, விஜய் ரசிகர் மன்றம் முதன் முதலில் ஈரோட்டில் தான் தொடங்கப்பட்டது. இங்கு உள்ள கட்சி தொண்டர்கள் அனைவரும் செங்கோட்டையன் அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படி  செயல்படாக தயாராக இருக்கிறோம். எங்களை நம்பி வந்தவர்களை கடைசிவரை கைவிட மாட்டோம். நமக்கு எதிராக உள்ள அரசியல் கட்சி பிரமுகர்களும் நமது கட்சிக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். செங்கோட்டையன் அவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டோம். அவர் வகு‌க்கும் பாதையில் நாங்கள் பயணிப்போம் என்றும் கூறினார். இனி அரசியல் ரீதியாக விஜய்க்கு செங்கோட்டையன் உத்திகளை வகுத்துக் கொடுப்பார் என்ற நம்பிக்கை தவெகவினர் மத்தியில் எழுந்துள்ளது.


விஜய் பாதையில் நடை போட்டு வரும் தவெகவினர் மேலும் முதிர்ச்சி பெற்றவர்களாக மாறும்போது அரசியல் ரீதியாக அவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களும் எளிதாக கிடைக்கும், இலக்குகளையும் எளிதாக அடைய முடியும் என்று நம்பலாம்.


(க.சுமதி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)