நேபாளத்தில் ஓயாத அமளி.. அடுத்தடுத்து அமைச்சர்கள் ராஜினாமா.. அரசு கவிழ்கிறதா?

Su.tha Arivalagan
Sep 09, 2025,01:51 PM IST

காத்மாண்டு:  சமூக வலைதள தடை மற்றும் அரசின் ஊழல்களுக்கு எதிரான நேபாள நாட்டு இளைஞர்களின் போராட்டம் ஓய்வதாகத் தெரியவில்லை. அந்த நாட்டில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது. அதிபரின் மாளிகை தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களும் அடுத்தடுத்து விலகி வருவதால் அரசு கவிழுமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது.


நேபாளத்தில் இளைஞர்கள் பெரும் போராட்டத்தில் குதித்துள்ளனர். சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி அவர்கள் போராட்டத்தில் குதித்ததாக முதலில் கூறப்பட்டது. ஆனால் அரசின் ஊழல்களுக்கு எதிரான போராட்டமாகவும் இது வர்ணிக்கப்படுகிறது. ஊழல் புகார்கள் குறித்து சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகளைத் தடுக்கவே சமூக வலைதளங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.




குறிப்பாக பிரதமர் கேபி சர்மா ஒலி மீது பெரும் புகார்கள் சுமத்தப்படுகின்றன. அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டு வருகிறது. இந்த குழப்பமான சூழ்நிலையில், உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகக் நேற்று பதவி விலகினார். விவசாய அமைச்சரும் செவ்வாய்க்கிழமை காலையில் பதவி விலகினார்.


மறுபக்கம் பிரதமர் ஒலி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். "நிலைமையை மதிப்பிடுவதற்கும், அர்த்தமுள்ள முடிவைக் காண்பதற்கும் சம்பந்தப்பட்ட கட்சிகளுடன் நான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். அதற்காக, இன்று மாலை 6 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளேன். இந்த கடினமான சூழ்நிலையில் அனைத்து சகோதர சகோதரிகளும் அமைதியாக இருக்க பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.


நேபாளத்தில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. அரசு பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண முயற்சி செய்து வருகிறது. ஒரு வேளை பிரச்சினை முற்றினால் பிரதமர் சர்மா ஒலி நாட்டை விட்டு வெளியேறும் முடிவை எடுப்பார் என்று கூறப்படுகிறது.