இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?

Su.tha Arivalagan
Sep 09, 2025,10:43 AM IST

சென்னை: இசைஞானி இளையராஜா, நடிகர் அஜித் குமாரின் "Good Bad Ugly" படத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அவரது பாடல்களை படத்தில் பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் ஓடிடி தளத்திலிருந்து படம் நீக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


தன்னுடைய மூன்று பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக இளையராஜா குற்றம் சாட்டியுள்ளார். இந்த வழக்கின் காரணமாக, உயர் நீதிமன்றம் படக்குழுவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. "ஒத்த ரூபாயும் தாரேன்", "என் ஜோடி மஞ்ச குருவி", "இளமை இதோ இதோ" ஆகிய பாடல்களை படத்தில் குட் பேட் அக்லி படத்தில் பயன்படுத்தியுள்ளனர். 




படம் ஏற்கனவே தியேட்டர்களில் தடபுடலாக ஓடி விட்டது. தற்போது நெட்பிளிக்ஸ்  ஓடிடி தளத்திலும் ஏற்கனவே வெளியாகி விட்டது. கோர்ட் உத்தரவால் படத்திலிருந்து அந்தப் பாடல்களை எடுக்க வேண்டும். தியேட்டர்கள் மட்டுமல்லாமல் வேறு எந்த இடத்திலும் இதே பாடல்களோடு படத்தை ஒளிபரப்ப முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் படக்குழு சட்ட சிக்கலில் சிக்கியுள்ளது. 


இளையராஜா ஏற்கனவே Mythri Movie Makers நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். ஆனால், பாடல்களுக்கான உரிமையை இசை நிறுவனங்களிடம் இருந்து பெற்றுவிட்டதாக படக்குழு பதிலளித்தது. இந்த பதில் சரியில்லை என்று இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இசை நிறுவனங்களின் பெயர்களை படக்குழு குறிப்பிடவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், படக்குழு அளித்த பதில் தெளிவில்லாமல் இருந்ததால், இளையராஜாவுக்கு சாதகமாக இடைக்கால தடை விதித்தார். OTT உட்பட எந்த தளத்திலும் இளையராஜாவின் பாடல்கள் இடம்பெறும் காட்சிகளை ஒளிபரப்பவோ, விற்கவோ, வெளியிடவோ கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இளையராஜா இசை உரிமை பிரச்சினை காரணமாக ஒரு முக்கிய நடிகரின் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்பதால், இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.