திமுக.,வில் இணையப் போகிறாரா ஓபிஎஸ்? .. சட்டசபையை அதிர வைத்த ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன்!
சென்னை : தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று (பிப்ரவரி 20) சட்டசபை வளாகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசி உள்ளார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். இது பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மறுபக்கம் சட்டசபையில் இன்று பேசிய ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏவான உசிலம்பட்டி அய்யப்பன் ஒரு படி மேலே போய் மீண்டும் முதல்வராக மு.க.ஸ்டாலின்தான் வர வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆசியுடன் அவர் முதல்வராக வருவார் என்று ஒரேயடியாக புகழ்ந்தும் வாழ்த்தியும் பேசி அதிர வைத்து விட்டார். அவரது பேச்சை முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்ப முடியாத ஆச்சரியப் புன்னகையுடன் கேட்டு ரசித்தார். திமுக எம்எல்ஏக்களோ மேசைகளை பலமாக தட்டி அவரது பேச்சை வரவேற்று மகிழ்ந்தனர். ஓ.பி.எஸ்ஸும் கூட இதை புன்னகையுடன்தான் பார்த்துக் கொண்டிருந்தார்.
இதையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்து, ஓபிஎஸ் திமுக.,வில் இணைய போகிறாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளது. இன்னும் சிலர் முதல்வர் - ஓபிஎஸ் சந்திப்பு, சாதாரண சந்திப்பு தான் என்றும் சொல்கிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பும் தொடர்ந்து ஒரே நாளில் இரு முறை முதல்வரை அவரது வீட்டிற்கே சென்று சந்தித்து விட்டு வந்தார் ஓபிஎஸ். அப்போதும் அவர் திமுக.,வில் இணைய போகிறார் என்ற பேச்சுக்கள் எழுந்தது. இது பற்றி ஓபிஎஸ் இடம் கேட்டதற்கு, அரசியலில் எதுவும் நடக்கலாம் என சூசகமாக பதிலளித்து விட்டு சென்றார். ஆனால் தமிழக அரசியலில் அன்று இருந்த நிலை வேறு, இன்று இருக்கும் நிலை வேறு.
தனித்து விடப்பட்ட ஓ.பி.எஸ்.
ஓபிஎஸ், டிடிவி.தினகரன் ஆகியோரை என்டிஏ கூட்டணியில் இணைக்க தீவிரமாக பாஜக முயற்சித்து வந்த நேரம் அது. ஆனால் இப்போது டிடிவி.தினகரன் ஏற்கனவே என்டிஏ கூட்டணிக்கு வந்து விட்டார். என்டிஏ கூட்டணி ஏறக்குறைய ஒரு வடிவத்திற்கு வந்து விட்டது. மார்ச் 01ம் தேதி பிரதமர் மோதி மீண்டும் தமிழகம் வருவதற்கு முன் என்டிஏ கூட்டணி முழுமை பெற்று, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளும் பேசி முடிக்கப்பட்டு விடும் என சொல்லப்படுகிறது.
ஓபிஎஸ் மற்றும் சசிகலாவை மீண்டும் அதிமுக.,விலோ அல்லது என்டிஏ கூட்டணியிலேயோ சேர்க்க திட்டவட்டமாக மறுத்து விட்டார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி. இதனால் ஓபிஎஸ்.,ஐ என்டிஐ பக்கம் கொண்டு வரும் முயற்சியை பாஜக ஏற்கனவே கைவிட்டு விட்டது.
தென் மாவட்டங்களில் உள்ள முக்குலத்தோர் ஓட்டுக்களை கவருவதற்காக தான் ஓபிஎஸ், டிடிவி.தினகரன், சசிகலாவை என்டிஏ பக்கம் இழுக்க முயற்சி நடந்தது. ஆனால் டிடிவி.தினகரன் என்டிஏ பக்கம் வந்து விட்டார். அவர் ஒரு கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் அவரை என்டிஏ.,வில் சேர்த்துக் கொண்டுள்ளனர். அதே போல் சசிகலாவும், என்டிஏ.,விற்காக பிரச்சாரம் செய்வதற்கு ஓகே சொல்லி விட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் முக்குலத்தோர் ஓட்டுக்களில் பெரும்பாலான ஓட்டுக்கள் என்டிஏ.,விற்கு வந்து விட வாய்ப்புள்ளது. ஓபிஎஸ், டிடிவி.தினகரன், சசிகலா ஆகிய மூன்று பேருடன் ஒப்பிடுகையில் செல்வாக்கு குறைந்தவராக ஓபிஎஸ் இருப்பதால் அவரை வளைக்கும் முயற்சியை பாஜக கைவிட்டு விட்டது.
என்டிஏ கூட்டணி கதவுகள் அடைக்கப்பட்டு விட்டதால் தற்போது ஓபிஎஸ்.,சிற்கு இருக்கும் ஒரே வாய்ப்பாக திமுக கூட்டணி உள்ளது. தவெக கூட்டணி இருந்தாலும் அதனால் தனக்கு என்ன லாபம்? ஒரு எம்.பி., சீட்டோ அல்லது எம்எல்ஏ., சீட்டோ, ஒருவேளை தேர்தலில் வெற்றி பெற்றால் அமைச்சர் பதவியோ கிடைக்குமா என்றால் நிச்சயம் கிடைக்காது. அதுவே திமுக கூட்டணியில் இணைந்தால் மகன் ரவீந்திரநாத்திற்கு, ஒரு ராஜ்யசபா எம்.பி., சீட்டை கேட்டு வாங்கலாம்.
மீண்டும் அமைச்சராக வாய்ப்பு
ஓபிஎஸ்.,க்கு சட்டசபை தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படலாம். ஒருவேளை அவர் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனால், மூத்த அரசியல் தலைவர், முதல்வர், துணை முதல்வர், நிதித்துறை, பொதுப்பணித்துறை என பல முக்கிய துறைகளை கையாண்ட அனுபவம் பெற்றவர் என்பதால் அவருக்கு அமைச்சரவையில் இடம் தருவதற்கு கூட வாய்ப்புள்ளது. எப்படி பார்த்தாலும் திமுக கூட்டணியில் சென்று இணைவது ஓபிஎஸ்.,க்கு பல வழிகளில் லாபம் தான்.
அதே சமயம் திமுக பக்கம் இருந்து பார்த்தால், ஓபிஎஸ்.,ன் வருகை லாபமா? பாதிப்பா? என்று கேட்டால் பாதிப்புகள் தான் அதிகம். லாபம் என்று பார்த்தால் ஒரு சில முக்குலத்தோர் ஓட்டுக்கள் மட்டும் தான். ஆனால் பாதிப்பு என்று பார்த்தால், நிறைய சொல்லலாம். ஓபிஎஸ்.,க்கு செல்வாக்கு இருப்பதாக சொல்லப்படும் தேனி, ஆண்டிப்பட்டி போன்ற தொகுதிகளில் அவரை விட செல்வாக்கானவர் என தங்க தமிழ்செல்வன் ஏற்கனவே நிரூபித்து, திமுக சார்பில் எம்.பி.,யாக இருக்கிறார்.
தேனி மாவட்டத்தில் செல்வாக்கு மிகுந்த திமுக முகமாகவும் தங்க தமிழ்ச்செல்வன் மாறி விட்டார். இப்போது ஓபிஎஸ் திமுக.,விற்குள் வந்தால் நிச்சயம் தங்க தமிழ்செல்வன் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார். இது திமுக.,வில் புதிய குழப்பதை ஏற்படுத்தும். இதுவரை எடுக்கப்பட்ட ஆய்வில் ஓபிஎஸ்.,க்கு அவரது சொந்த தொகுதியிலேயே செல்வாக்கு சரிந்து உள்ளதால், அந்த தொகுதியில் அவருக்கு சீட் கொடுத்தால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு குறைவு தான் என சொல்லப்படுகிறது. ஒருவேளை அதையும் மீறி திமுக, ஓபிஎஸ்.,ஐ சேர்த்தால் அவர் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும்.
ஜெயலலிதாவால் முதல்வராக அடையாளம் காணப்பட்டவர் என இதுவரை அதிமுக.,பிரதிநிதியாகவும், ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்றவருமாக பார்க்கப்பட்டு வந்த ஓபிஎஸ், எதிரி கட்சியாக கருதப்படும் திமுக.,வின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் அவர் மீதான எதிர்ப்பு ஓட்டுக்கள் தானாக அதே தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு சென்று விடும். இதனால் ஒரு தொகுதியை திமுக.,இழக்கும் நிலை தான் ஏற்படும்.
என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.