டி20 உலகக்கோப்பையில் திருப்பம்.. ‘புறக்கணிப்பு’ முடிவிலிருந்து பாகிஸ்தான் யூ-டர்ன்?

Su.tha Arivalagan
Feb 08, 2026,01:11 PM IST

கொழும்பு/துபாய்: 2026 டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிப்பதாக அறிவித்திருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்போது தனது பிடிவாதத்தை தளர்த்தி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் ரகசியப் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 


பாதுகாப்பு காரணங்களைக் கூறி வங்கதேச அணி இந்தியாவில் விளையாட மறுத்ததால், அந்த அணியை நீக்கி விட்டு, அதற்குப் பதிலாக ஸ்காட்லாந்து தொடருக்குள் கொண்டு வரப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாகவும், வங்கதேசத்திற்கு ஆதரவாகவும் பிப்ரவரி 15-ம் தேதி கொழும்பில் நடைபெறவிருந்த இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியைப் புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவித்தது.


பாகிஸ்தானின் இந்த ஒருதலைப்பட்ச முடிவுக்கு ஐசிசி கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. விளையாட்டில் அரசியலைப் புகுத்துவது ஏற்புடையதல்ல என்று எச்சரித்த ஐசிசி, போட்டி ரத்தானால் ஒளிபரப்பு மற்றும் விளம்பரதாரர்கள் மூலம் ஏற்படப்போகும் சுமார் 2,200 கோடி ரூபாய் இழப்பீட்டை பாகிஸ்தான் வாரியமே ஏற்க வேண்டியிருக்கும் என மறைமுகமாகச் சுட்டிக்காட்டியது. மேலும், ஒரு போட்டியை மட்டும் புறக்கணித்துவிட்டு மற்ற போட்டிகளில் விளையாடுவதை தவிர்க்க முடியாத சூழல் என ஏற்க முடியாது என்றும் கறாராகத் தெரிவித்தது.




ஐசிசி-யின் கடுமையான சட்ட மற்றும் நிதி நெருக்கடி எச்சரிக்கையை அடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்போது இறங்கி வந்துள்ளது. கொழும்பில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடுவது குறித்து ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மறுபுறம், இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், நாங்கள் திட்டமிட்டபடி கொழும்பு செல்வோம், போட்டியில் பங்கேற்போம் என தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார்.


ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வருமானம், கோடிக்கணக்கான ரசிகர்களின் உணர்வு எனப் பிணைந்துள்ள இந்த மகா கிரிக்கெட் யுத்தம் நடக்குமா அல்லது பாகிஸ்தான் தனது புறக்கணிப்பு முடிவில் உறுதியாக இருக்குமா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். தற்போதைய சூழலில், பாகிஸ்தான் தனது நிலையிலிருந்து யு-டர்ன் போட்டு மீண்டும் களத்திற்குத் திரும்ப அதிக வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.