கவலையில் மூழ்கிய கிராமங்கள்.. சோகத்தில் மக்கள்.. விமான நிலைய விசனங்கள்!

Su.tha Arivalagan
Dec 29, 2025,04:32 PM IST

- எழுத்தாளர் சைவ சித்தாந்தச்சுடர் சிவ. பா. சுமதி 


காஞ்சிபுரம் அருகே உள்ள ஏகநாஞ்சேரி, பரந்தூர் உட்பட பல கிராமங்கள் புதிய விமான நிலையத் திட்டத்துக்காக கையகப்படுத்தப் போகும் விவகாரம் இன்னும் சூடுபிடித்த நிலையிலேயே உள்ளது. இதுதொடர்பாக தென்தமிழ் இணையத்தில் வெளியான ஒரு உருக்கமான கவிதையும் மனதைக் கவ்வியது.


யாரோ ஒருவர் இறங்கி ஏறிச் செல்வதற்காக புதிதாக விமான தளம் அமைக்கப் போவதும் அதற்காக மக்கள் நலமாக வாழ்ந்து வரும் கிராமங்களை அழிப்பதும் எந்த விதத்தில் நியாயம்? என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுவது போலவே எனது மனதையும் உலுக்கி எடுக்கிறது.


மாறிவரும் தொழில்நுட்பங்கள் அவசியம் தான். ஆனால் அது மக்களின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்கு தான் பயன் பட வேண்டுமே தவிர அழிவுக்கு பயன் படக் கூடாது. உயிரோடு ஒருவரைக் கொன்று புதைத்துவிட்டு அதே இடத்தில் அவருக்கு சிலை எழுப்பி மரியாதை செய்து என்ன பயன்?




இன்று காடு, மலைகள் எல்லாம் இன்று அழிக்கப்பட்டு அடுக்கு மாடி குடியிருப்புகளாகி வருகிறது. ஏன் சென்னையைச் சுற்றி இருந்த பல் வேறு ஏரிகள் இருந்த இடத்தில் அந்தப் பெயரில் பல ஊர்கள் உருவாகிவிட்டது. இது மட்டுமா ? பொன் விளையும் விளை நிலங்கள் அழிக்கப்பட்டு அந்த இடத்தில் பொழுது போக்கு மையங்களாக, திரையரங்குகளாக உருவாக்கம் பெற்று வருகிறது. 


ஆறுகள், ஏரிகள் இருந்த இடங்கள் காணாமல் போய் அடுக்குமாடிக் கட்டிடங்களாக மாறி வரும் அவலம் தொடர்கிறது. வந்தாரை வாழ்விக்கும் தமிழகத்தில் இன்று நீர் நிலை ஆக்கிரமிப்புகளும், வயல் வெளி அழிப்புகளும் தலைவிரித்தாடுகின்றன. மாறிவரும் நகரமயமாக்கல் காரணமாக விவசாயம் , காடுகள், மலைகள் ஏன் கடல் வளங்களும் கூட அழிக்கப்பட்டு வரும் கொடுமையும் அரங்கேறி வருகிறது.

       

இதே நிலை நீடித்தால் நாளை உணவுப் பற்றாக்குறை மட்டுமல்ல குடிக்கும் தண்ணீருக்கும் பிறரிடம் கையேந்தி நிற்கும் அபாயம் ஏற்படும் நிலையில் தான் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இப்போதே விவசாயத்துக்கே நாம் தண்ணீருக்காக அல்லாடும் நிலையில்தான் உள்ளோம்.


பிறந்த மண்ணைப் பிரிந்து, வேலை இழந்து, உரிமை, உறவுகளைத் துறந்து, விவசாயம் அதையும் மறந்துவிட்டால் நாளைய நம் சந்ததிக்கு நாம் எதை மிச்சம் வைத்துச் செல்வோம்? என்று தெரியவில்லை.


ஏதோ ஒரு கிராமம், எங்கோ ஒரு ஊர் அழிந்தால் நமக்கென்ன வந்தது ? நாம் நலமாகத் தானே இருக்கிறோம் என்று சந்தோஷப்படும் முடியாது. இன்று ஏகனாஞ்சேரிக்கு ஏற்பட்ட நிலை நாளை நமக்கும் என்பதே நிதர்சனம். முன்னேற்றங்கள், சாலைகள், விமான நிலையங்கள் தேவைதான்.. ஆனால் பெருமளவிலான பாதிப்புகளைத் தவிர்த்து அவை அமையும்போது அனைவருமே அதை நிச்சயம் வரவேற்கவே செய்வார்கள்.


(எழுத்தாளர் பா. சுமதி குறித்து.. பி.காம், பி.ஏ ஆங்கிலம் படித்தவர். மான்டிசோரி கல்வியாளர், யோகாவில் டிப்ளமோ முடித்தவர்.எழுத்தாளர், கவிஞர், பேச்சாளர். யோகா ஆசிரியர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் திருவண்ணாமலை குழுமத்தில் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்றவர், உலக சாதனையாளர் விருது பெற்றவர்.  பன்னிரு திருமுறைகளைப் பாடுவதில் தேர்ச்சி பெற்றவர்.நெய்வேலி புத்தகத் திருவிழாவில் தொடர்ந்து பல ஆண்டுகள் சிறு கதைகள், கவிதைகள் எழுதிப் பரிசு பெற்றவர்).