விஜய் பக்கம் திரும்புகிறதா காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் சலசலப்பா.. என்ன நடக்கிறது?

Su.tha Arivalagan
Nov 13, 2025,03:45 PM IST

சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியுடன் நெருங்கி வருவதாகத் தெரிகிறது. 


தமிழ்நாடு மட்டுமல்லாமல், கேரளாவிலும், புதுச்சேரியிலும் அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, கேரளாவிலும் புதுச்சேரியிலும் விஜய்யின் பிரபலத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கட்சித் தலைமையிடம் வலியுறுத்துவதாகத் தகவல்கள் 


அதேபோல தமிழ்நாட்டிலும் அதிக தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் விரும்புவதாகவும், இது ஆளும் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. விஜய்யுடன் இணைந்து நிச்சயம் உடனடியாக ஆட்சியைப் பிடிக்க முடியாது என்றாலும் கூட எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு விஜய்யுடன் இப்போதிருந்தே நெருங்கி வந்தால், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் அதிக அளவிலான தொகுதிகளில் வெற்றி பெற முடியும் என காங்கிரஸ் கணக்குப் போடுகிறதாம்.




மேலும் தமிழ்நாட்டைப் போலவே விஜய்க்கு கேரளாவிலும் நல்ல ரசிகர் கூட்டம் இருப்பதாலும், புதுச்சேரியிலும் விஜய்க்கு செல்வாக்கு இருப்பதாக காங்கிரஸ் நம்புவதாலும் இந்தக் கணக்குகளில் அது இறங்கியுள்ளதாக சொல்கிறார்கள்.


காங்கிரஸ் மற்றும் தவெக இடையேயான உறவு  ஏதோ ஒரு வகையில் வலுவடைந்து வருவதாக திமுகவும் நம்புகிறதாம். இதனால் இதைக் கூர்ந்து கவனித்து வருவதாகத் தெரிகிறது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஒரு மேடையில் காங்கிரஸ் எம்பியுடன் பேசும்போது, "கை வெளியேறாது, நம்முடன்தான் இருக்கும்" என்று குறிப்பிட்டு, கூட்டணியில் உள்ள சில கருத்து வேறுபாடுகளை மறைமுகமாகச் சுட்டிக்காட்டினார்.


இதற்கிடையில், தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளில், முன்பு அதிமுக வென்ற சில தொகுதிகளை காங்கிரஸுக்கு வழங்க திமுக பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், கூட்டணி குறித்த இறுதி முடிவுகளும், தொகுதி ஒதுக்கீடுகளும் டெல்லியில் உள்ள கட்சித் தலைமையால் மட்டுமே எடுக்கப்படும் என்று தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


இருப்பினும் திமுகவை தடாலடியாக காங்கிரஸ் கை விடுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. காரணம், ராகுல் காந்தியை தனது தம்பி என்று பாசத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து அழைத்து வருகிறார். டெல்லியிலும் திமுகவின் குரல் உரத்து ஒலிக்க காங்கிரஸ் கட்சியுடன் உள்ள நெருக்கமே காரணம். காங்கிரஸுக்கு திமுகவும் உறுதுணையாக இருந்து வருகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் காங்கிரஸ் கட்சிக்கு அதிக எம்.பிக்களும் கிடைத்தனர். இதனால் திமுகவை அவ்வளவு சீக்கிரம் காங்கிரஸ் உதறாது என்ற நம்பிக்கையும் உள்ளது. ஆனால் அரசியலைப் பொறுத்தவரை நம்பிக்கையை விட பிராக்டிகலாட்டிக்குத்தான் முதலிடம் என்பதையும் மறந்து விட முடியாது.