தனியா.. கெத்தா.. மாமல்லபுரத்தில் சொன்னது போல நடக்கப் போகிறாரா விஜய்?
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் வருகிற சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான உத்திகள் குறித்து தொடர்ந்து குழப்பமாகவே உள்ளது. இதுவரை எந்தக் கட்சியும் கூட்டணியில் இணையாமல் உள்ளதால் அநேகமாக தவெக தனித்தே போட்டியிட வாய்ப்புகள் அதிகம்.
தமிழக அரசியலில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகம் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஒரு முக்கிய சக்தியாக உருவெடுத்து வருகிறது. கட்சி தொடங்கி நடந்த முதல் மாநாட்டின்போது கூட்டணிக்குத் தயார் என்று அறைகூவல் விடுத்திருந்தார் விஜய். ஆனால் இந்த நிமிடம் வரை ஒரு கட்சி கூட கூட்டணிக்கு வரவில்லை.
அதிமுக, காங்கிரஸ் கட்சி, நாம் தமிழர் கட்சியுடன் பேச்சுக்கள் நடந்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால் எதுவுமே பாசிட்டிவாக நடக்கவில்லை. இதில் அதிமுக, காங்கிரஸ் கட்சியுடன்தான் அதிக அளவில் பேச்சுக்கள் நடந்ததாகவும் கூறப்பட்டது. அதிமுக கூட்டணி முடிவாகி விட்டதாக கூட பேச்சுக்கள் வெளியாகின. ஆனால் அதுவும் நடக்கவில்லை. பாஜக, அதிமுகவை தக்க வைத்துக் கொண்டு விட்டது.
காங்கிரஸ் பக்கம் விஜய் போகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் தரப்பில் தரப்பட்ட எந்த லீடையும் விஜய் பயன்படுத்தவில்லை. குறிப்பாக ஜனநாயகன் படம் தொடர்பாக ராகுல் காந்தி டிவீட் கூட போட்டார். ஆனால் அதையும் கூட விஜய் பயன்படுத்திக் கொண்டு அதை வைத்து கூட்டணிக்கு முயற்சிக்கவில்லை. இதனால் காங்கிரஸ் வாய்ப்பும் பறி போய் விட்டதாகவே கருதப்படுகிறது.
இப்போது எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமையாத நிலையே உள்ளது. இந்த நிலையில்தான் மாமல்லபுரம் கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் தனித்து கெத்தாக நிற்கவும் நம்மால் முடியும் என்று கூறியிருந்தார் விஜய். அதை வைத்துப் பார்க்கும்போது, 234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டியிட முடிவு செய்திருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.
ஆனால் இது எளிதானதா.. நிச்சயம் கடினம்தான். ஒரு புதிய கட்சிக்கு 234 தொகுதிகளிலும் வலுவான வேட்பாளர்களைக் கண்டறிவது என்பது மிகப்பெரிய சவாலாகும். தேமுதிக தொடங்கியபோது விஜயகாந்த் இதை சவாலைத்தான் சந்தித்தார். அப்போது அவர் மட்டுமே கட்சியின் முகமாக இருந்தார். இப்போது விஜய்யும் கூட தவெகவின் ஒரே முகமாக இருக்கிறார். எனவே 234 தொகுதிகளிலும் தவெக போட்டியிட்டாலும் அங்கு மக்கள் விஜய்யைத்தான் கட்சி வேட்பாளராக பார்ப்பார்கள். அதை உறுதி செய்ய 234 தொகுதிகளிலும் விஜய் போயாக வேண்டும்.
சுமார் 1.5 கோடி உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்ற இலக்குடன் தவெக தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 70,000-க்கும் மேற்பட்ட பூத் ஏஜென்ட்களை நியமிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மறுபக்கம் வேட்பாளர் தேர்விலும் தவெக சத்தம் போடாமல் இறங்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
அனுபவம் வாய்ந்த முன்னாள் அரசியல்வாதிகள் மற்றும் புதிய முகங்களின் கலவையாகத் தனது வேட்பாளர் பட்டியலைத் தயார் செய்து வருவதாகத் தெரிகிறது. முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் தவெக-வில் இணைந்து வருவது கட்சிக்கு கூடுதல் நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. இதுதவிர மக்களிடையே பிரபலமாக உள்ள, எளிமையான தலைவர்களையும் அடையாளம் கண்டறிந்து அவர்களையும் களத்தில் இறக்கும் திட்டம் விஜய்யிடம் உள்ளதாம்.
எல்லாம் சரி விஜய் எங்கு போட்டியிடுவார்.. இது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. விஜய் மெட்ராஸ் பையனாகவும் தன்னை திரைப்படங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.. கோயம்பத்தூர் மாப்பிள்ளையாகவும் அடையாளப்படுத்தியுள்ளார்.. மதுரையாகவும் வந்துள்ளார்.. எனவே விஜய் தமிழ்நாடு முழுமைக்கும் சொந்தக்காரராக இருக்கிறார். ஆனால் ஏதாவது ஒரு தொகுதி அல்லது அதிகபட்சம் 2 தொகுதிகளில்தான் போட்டியிட முடியும் என்பதால் விஜய் அனேகமாக 2 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.
ஒரு சிட்டி தொகுதி, ஒரு கிராமப்புற தொகுதி என விஜய் இரண்டு தொகுதிகளில் நிற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதுவும் உறுதியாகத் தெரியவில்லை.
திமுக மற்றும் அதிமுக போன்ற அரை நூற்றாண்டு கால பாரம்பரியம் கொண்ட கட்சிகளுக்கு எதிராக 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவது எளிதல்ல. ஆனால், விஜய்க்கு இருக்கும் இளைஞர் பட்டாளம் மற்றும் ரசிகர் மன்றங்களின் பின்னணி இந்த சவாலை எதிர்கொள்ள அவருக்கு உதவியாக இருக்கும்.
தமிழக அரசியல் களம் தற்போது நான்கு முனைப் போட்டியாக அதாவது, திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக மற்றும் நாம் தமிழர் என உள்ளது. இதில் எந்த மாற்றமும் வராது என்றே நம்ப்படுகிறது. அந்த வகையில் வருகிற சட்டசபைத் தேர்தலில் தவெக எப்படி போட்டியிடும், ரிசல்ட் எப்படி இருக்கும், அதன் எதிர்கலாம் எப்படி அமையும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.