2026 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில்.. 30% வாக்குகள் கிடைக்கும்.. தவெக சொல்கிறது!
சென்னை: தமிழகத்தில் 2026-ல் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் குறித்த அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உள்கட்சி ஆய்வுகள் குறித்த ஒரு தகவலை இந்தியா டுடே வெளியிட்டு பரபரப்பைக் கூட்டியுள்ளது.
அதாவது தமிழ்நாடு அளவில் தவெக சார்பில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டதாம். அந்த ஆய்வில் தங்களுக்குச் சாதகமான முடிவுகள் வந்துள்ளதாக தவெக கணித்துள்ளது. அந்த கணிப்பு முடிவுகளைத்தான் இந்தியா டுடே வெளியிட்டுள்ளது.
சுமார் 41,453 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின்படி, ஆளுங்கட்சியான திமுக 32.9% ஆதரவுடன் முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து நடிகர் விஜய்யின் தவெக 31.7% வாக்கு ஆதரவுடன் மிக நெருக்கமாக இரண்டாம் இடத்தில் உள்ளது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக 27.3% ஆதரவைப் பெற்றுள்ளதாம்.
தங்கள் கட்சி 30 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெறும் என தவெக நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அக்கட்சியின் நிர்வாகி சி.டி. நிர்மல் குமார் கூறுகையில், இன்று தமிழகத்தில் மக்களிடம் அதிக ஆதரவு கொண்ட கட்சியாக தவெக உள்ளது. திமுக-வின் வாக்கு சதவீதம் 21%-ஐத் தாண்டாது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆய்வின் அடிப்படையில் தொகுதி வாரியான உத்தேசக் கணக்கீடு பின்வருமாறு:
திமுக: 104 இடங்கள்
தவெக: 74 இடங்கள்
அதிமுக: 56 இடங்கள்
சென்னை, செங்கல்பட்டு, தர்மபுரி, மதுரை, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, தென்காசி, திருப்பத்தூர், திருவாரூர், தூத்துக்குடி, திருப்பூர், திருவள்ளூர் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் தவெக கட்சிக்கு அதிக செல்வாக்கு இருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறதாம்.
இந்தத் தகவல்களைத்தான் இந்தியா டுடே வெளியிட்டுள்ளது. அதேபோல காங்கிரஸ் பிரமுகர் ஒருவரால் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில், தவெக-வின் வாக்கு சதவீதம் சுமார் 26% ஆக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில் 2026 தேர்தலில் திமுகதான் முன்னிலை வகுக்கும் என்றே பலரும் கணித்துள்ளனர். திமுகவுக்கு எதிரான கருத்தில் உள்ளவர்களும் கூட அதைத்தான் சொல்கின்றனர். காரணம் எதிர்த் தரப்பில் உள்ளவர்களிடையே தெளிவான நிலைப்பாடு இல்லாத காரணத்தால். காரணம் அதிமுக - பாஜக கூட்டணி இன்னும் பலவீனமாகவே உள்ளது. தவெக பலம் இன்னும் நிரூபிக்கப்படவில்லை.
அதேசமயம், திமுக முன்னிலை வகித்தாலும், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஒரு மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்து ஆளுங்கட்சிக்கும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக-விற்கும் கடும் சவாலை அளிக்கும் என்று பலரும் கருதுகின்றனர். அதாவது விஜய் வெற்றி பெற முடியாவிட்டாலும் கூட வாக்குகளைப் பிரிக்கும் சக்தியாக உருவெடுப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அவர் பிரிக்கப் போவது யாருடைய வாக்குகளை, யாருக்கு அவர் ஆப்பு வைக்கப் போகிறார் என்பது மட்டுமே பொறுத்திருந்து பார்க்க வேண்டியதாகும்.