2027 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா விளையாட வாய்ப்பே இல்லையா?

Su.tha Arivalagan
May 13, 2025,04:57 PM IST

மும்பை: ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே தற்போது ரோஹித் சர்மா, விராட் கோலி விளையாடவுள்ளனர் என்றாலும் கூட அவர்கள் 2027 உலலக் கோப்பைத் தொடரில் இடம் பெற மாட்டார்கள் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.


விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும்  முதலில் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்கள். இந்தியா டி20 உலகக் கோப்பையை வென்றதுமே, இருவரும் ஒரு சேர அந்த ஓய்வை அறிவித்தனர். இந்த நிலையில் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் இருவரும் ஓய்வை அறிவித்துள்ளனர். ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்கள். 


விராட் கோலி 2027 உலகக் கோப்பையில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார். ரோஹித் சர்மாவுக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை முக்கியமானது. ஆனால், இருவருக்கும் அந்த வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.




இதுகுறித்து அவர் கூறுகையில், ரோஹித் மற்றும் விராட் 2027 உலகக் கோப்பையில் விளையாடுவது சாத்தியமில்லை. தேர்வுக்குழுவின் எண்ணத்தைப் பொறுத்தே அவர்களின் வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து ஒரு நிகழ்ச்சியில் கவாஸ்கர் பேசுகையில், இருவரும் இந்த பார்மெட்டில் பெரிய பங்களிப்பை செய்திருக்கிறார்கள். தேர்வுக்குழு 2027 உலகக் கோப்பையை மனதில் வைத்து வீரர்களைத் தேர்ந்தெடுக்கும். அவர்கள் 2027 உலகக் கோப்பை அணியில் இருக்க முடியுமா? அவர்கள் முன்பு போல் பங்களிப்பு செய்ய முடியுமா என்று பார்ப்பார்கள். தேர்வுக்குழு 'முடியும்' என்று நினைத்தால், அவர்கள் இருவரும் அணியில் இருப்பார்கள்.


என்னைப் பொறுத்தவரை, அவர்கள் விளையாடுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஆனால், அடுத்த வருடம் அல்லது அதற்குள் அவர்கள் நிறைய ரன்கள் குவித்தால், கடவுளாலும் கூட அவர்களை நீக்க முடியாது. அவர்கள் இருவரும் திறமையான வீரர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், வயதும் ஒரு காரணம். 2027 உலகக் கோப்பையின்போது அவர்களுக்கு வயது அதிகமாக இருக்கும். எனவே, தேர்வுக்குழு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க நினைக்கலாம்" என்றார் கவாஸ்கர்.


தேர்வுக்குழு என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாட ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.