பெண் எனும் ஒளி சக்தி.. பெண் கல்வியின் மகாசக்தி.. சாவித்திரிபாய் புலே!

Su.tha Arivalagan
Sep 24, 2025,03:27 PM IST

- ரத்னா செந்தில்குமார், திருவண்ணாமலை


பெண் எனும் ஒளி சக்தி இந்த உலகத்தில் இல்லையெனில் இந்த உலகம் இருளாகவே இருக்கும். பெண் தன்னை உயர்த்தி கொள்கிறாரோ இல்லையோ அடுத்தவர்களை உயர்த்தி பிடித்து தாங்கும் நம்பிக்கைத் தூண். பெண்ணின் பருவம் ஏழு, அவளின் கருத்துக்களை கேட்டு வாழு வாழும் முறைகளை சொல்லித் தரும் வாழும் தெய்வம்.


ஒவ்வொரு பெண்ணும் இந்த சமூகத்தில் முன்னேற தன்னுடைய அனைத்து சக்திகளையும் பயன்படுத்தி ஒவ்வொரு கட்டத்திலும் தன்னுடைய வெற்றியின் பாதையை தொட்டுக் கொண்டே வருகிறார்கள். நம்முடைய தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, ஏன் உலகத்திலேயே கூட பெண்களின் முன்னேற்றம் பெண்களின் முன்னேற்றம் என்று பல அறிஞர்கள் தங்களுடைய கருத்துக்களை முன்னெடுத்து வைத்து அவர்களுக்கான நம்பிக்கையை கொடுத்து இந்த சமூகத்தில் முன்னேற வைத்திருக்கிறார்கள். வெற்றி பெற்ற ஒவ்வொரு பெண்ணும் கடந்து வந்த பாதைகள் நம் வீட்டில் உள்ள பெண்கள் முதல் விண்வெளிக்குச் சென்று தன் காலடியை பதித்து வந்த பெண்கள் வரை அவர்கள் வாழ்வில் எதிர்கொண்ட போராட்டங்கள் எத்தனை எத்தனை போராட்டங்களை தாண்டி தான் வெற்றி பெற்ற பெண்ணாக இந்த சமூகத்தில் இருக்கிறாள்.


மகப்பேறு என்பது.. எத்தனை போராட்டம் நிறைந்த வலியும் வேதனையும். அதையே கடந்து வந்து ஓர் உயிர் இந்த உலகத்திற்கு தந்து அந்த உயிரை வளர்த்து சமூகத்தின் வளர்ச்சிக்கு குடும்பத்தின் பெருமைக்கும் அடுத்த தலைமுறையை தரும் மாபெரும் சக்தி இந்த போராட்டத்தையே தாண்டி வந்த பெண் எந்த போராட்டத்தை தாண்ட மாட்டாள். அதனால் தான் பெரியாரும் அம்பேத்கரும் பாரதியாரும் விவேகானந்தரும் என பல சான்றோர் பெருமக்கள் பெண்ணின் பெருமையை உணர்ந்து பெண்ணிற்காக அவள் இந்த சமூகத்தில் சமமாக மதிக்கப்பட வேண்டும், எல்லாவற்றிலும் அவளுக்கும் உரிமை உள்ளது என்பதை பெரும் குரலாக கொடுத்து வீட்டுக்குள்ளே இருந்த பெண்களை சமூகத்தில் வெற்றி பெற்ற பெண்ணாக நிற்க வைத்து இருக்கிறார்கள்.




ஒரு நாட்டின் ஜனாதிபதி முதல் ஆகாயத்தின் விமான ஓட்டுனராகவும் விண்ணில் பறக்கும் அளவிற்கு வெற்றி பெற்றிருக்கும் சூழலை நாம் பார்க்கிறோம். இதெல்லாம் எப்படி சாத்தியம் அடுப்பூதும் பெண்ணிற்கு இதெல்லாம் எப்படி சாத்தியமானது, அவளின் தன்னம்பிக்கை அவளின் தைரியம் அவளின் விடாமுயற்சி அவளின் கல்வி அவளின் நம்பிக்கை இது எல்லாமே அவளின் வெற்றிக்கு முதல் படியாகவும் இந்த சமூகத்தின் சான்றோர் பெருமக்கள் பெண்களுக்கு காட்டிய வழிகாட்டுதலாகவும் இருந்திருக்கிறது என்பது நாம் எல்லோரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய நிதர்சன உண்மைதான். இத்தனை தடைகளை தாண்டி ஒரு பெண் எப்படி வெற்றி பெற்றால் என்று ஆச்சரிய குறி வைக்கப் போகிறோம் வியக்க போகிறோம் வாருங்கள்.


பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்

திண்மை உண்டாகப் பெறின்

(குறள் எண்: 54)


கற்பு என்னும் உறுதியை விட பெண்ணுக்கு பெருமை வேறு இல்லை என்று இங்கே திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார். கற்பு என்பது உடல் சார்ந்தது என்று மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கற்பு என்பது அதையும் தாண்டி மன ஒழுக்கம், கட்டுப்பாடு, உயர்ந்த எண்ணம், ஓர் அறிவுள்ள உயிருக்கும் அன்பு செய்தல், தன் குடும்பம் தன் சமூகம் இவைகளை காத்து உயர்த்துதல் இவையெல்லாம் முழுமையாக செய்பவள் பெண் என்பதால் தான் ..கற்பு என்னும்  திண்மை உண்டாகப் பெறின் என்று திருவள்ளுவர் பெண்ணுக்கு மட்டுமே பொறுமை இருக்கும் சகிப்புத்தன்மை இருக்கும் வலிகளை தாங்கும் பெரும் சக்தி இருக்கும் அதனால் தான் வாழ்வில் வெற்றி பெற்ற பெண்கள் எல்லாம் இத்தனை தடைகளையும் தாண்டி சாதித்த பெண்களாக தடம் பதித்த தாரகைகளாக இருக்கிறார்கள்.


பெரியார் தன்னுடைய பெண் ஏன் அடிமையானால் என்ற நூலில் கூட கற்பு என்பது பெண்ணுக்கு மட்டுமே இல்லை என்பதை மிகச் சிறப்பாக சொல்லி இருப்பார் கற்பு என்பது உடல் சார்ந்து இல்லாமல் எல்லா குண நலன்களையும் ஒறுங்கே பெற்று வாழ்பவர்களே கற்புடையவர்கள் என்பதுதான் நிதர்சன உண்மை. அத்தகைய சிறப்புமிக்க எல்லா குணங்களையும் கொண்டு இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராக பெண் குழந்தைகளுக்கு என்று தனி கல்விக்கூடத்தை திறந்த மிகச்சிறந்த பெண் ஆளுமை சாவித்திரி பாய் புலே அவர்களைப் பற்றிய நாம் இன்று தெரிந்து கொள்ளப் போகிறோம்.


பெண் கல்வியின் மகாசக்தி சாவித்திரிபாய் புலே


சமூக சீர்திருத்தவாதி இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர், பெண் உரிமைக்காக... பெண்ணுக்கு உரிமை கிடையாது என்று கதவை மூடி வைத்திருந்த காலத்தில் பெண் கல்விக்காக காலமெல்லாம் பாடுபட்டவர். 1831 ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி மராட்டிய மாநிலத்தில் சதாரா மாவட்டத்தில் நைகான் என்னும் சிற்றூரில் பிறந்தார். பெண் குடும்பத்தின் வீட்டு வேலைக்கு மட்டுமே என்று நடைமுறை இருந்த காலத்தில் 9 வயதில் ஜோதிராவ் புலேவை மணந்தார்.


தன்னைவிட தன் மனைவி அறிவாளியாகவும், படிப்பாளியாகவும் பொருளாதாரம் அதிகம் பெறும் மனைவியாக இருந்தால்  கணவரால் ஏற்றுக் கொள்ள முடியாத சூழல் இன்றும் உள்ளது... ஆனால், அன்று ஜோதிராவ் புலே தன்னுடைய மனைவியை பெண் ஒடுக்கு முறைக்கு எதிராகவும், சாதிய சமூக அவலங்களுக்கு எதிராகவும், நடக்கும் போராட்டங்களில் மனைவியை தன்னுடன் இனைத்துக் கொண்டு போராட்டங்களில் ஈடுபட துணிவு கொடுத்தார்.


ஒடுக்கப்பட்ட மக்கள் ஒடுங்கிக் கொண்டே இருக்கிறார்கள் அவர்களுக்கு கல்வி இல்லை சமமான உரிமை இல்லை என்பதை இருவரும் உணர்ந்தார்கள். 1864  ஒரு பள்ளியை தொடங்கினார்கள். ஜோதிராவ் அப்பள்ளியில் தன் மனைவியையும், பாத்திமா ஷேக் என்ற பெண்ணையும், இணைத்துக் கொண்டார். ஒடுக்கப்பட்டவர்கள் வீட்டு பெண் குழந்தைகளையும் இணைத்து கல்விப் பணியை தொடர்ந்தார். 1848 ஆம் ஆண்டு சாவித்திரிபாய் ஆசிரியர் பயிற்சி படித்து நிறைவு செய்து ஒன்பது மாணவிகளுடன் இந்தியாவின் முதல் பெண் குழந்தைகளுக்கான தனி பள்ளியை தொடங்கினார்.


பள்ளியில் சாவித்திரிபாய் தலைமை ஆசிரியராக பணி செய்தார் இந்த சமூகத்தில் தான் பெண் முன்னேறினாலும், பெண் படித்தாலும் எதிர்க்கும் சூழல். அந்த சூழல் இருந்ததால் அந்த பள்ளியை தொடர்ந்து நடத்த முடியாத சூழல் நெருக்கடிகள் துன்பங்கள் என பல பல இவர்களுக்கு வந்தது. சாவித்திரிபாய் புலே கல்வி பணி செய்வதை தடுக்க பல தொல்லைகள் தந்தனர் ஆனாலும் மனதிடத்துடன் தன்னுடைய பயிற்சியை பணியை தொடர்ந்தார்.


சாவித்திரி பள்ளிக்கு ஆசிரியர் பணிக்கு நடந்து போகும்போது அவர் மீது சேற்றினையும் மலத்திணையும் வாரி வீசுவார்கள் அதனுடன் எண்ணற்ற சொற்களையும் வீசுவார்கள் எல்லாவற்றையும் வீசியதை தாங்கிக் கொண்டு தைரியமிக்க பெண்ணாய் நாளும் நடப்பார்.. தொடர்ந்து நடக்கும் போது தன் கையில் ஒரு சேலையை கொண்டு செல்வார்.. தன் மீது வீசி அசிங்கத்தை பள்ளியில் சென்றவுடன் அந்த சேலையை மாற்றி விட்டு கையில் கொண்டு சென்ற சேலையை மாற்றி அணிந்து மாணவர்களுக்கு பாடம் நடத்தும் தன்னுடைய பணியை செய்வார். ஒரு பெண் எத்தனை எத்தனை போராட்டங்களை எத்தனை எத்தனை துன்பங்களை தாங்க முடியுமோ அத்தனையும் தாங்கி பெண் கல்விக்காக முதல் பள்ளியை தொடங்கி முதல் பெண் ஆசிரியராக விளங்கியவர் தான் சாவித்திரிபாய் .


கணவனை இழந்த கைம்பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது எந்த சூழலிலும் அவர்கள் இன்பத்தையும் மகிழ்ச்சியும் அனுபவிக்க கூடாது என்று விதவைப் பெண்களுக்கு மொட்டை அடிக்கும் பழக்கத்தை வைத்திருந்த காலத்தில் சாவித்திரிபாய் நாவிதர்களை ஒன்று திரட்டி 1863 ஆம் ஆண்டு விதவைப் பெண்களுக்கு மொட்டை அடிக்க கூடாது என்று  மிகப்பெரிய போராட்டத்தை சாவித்திரிபாய் நடத்தினார் ஒரு மனிதனுக்கு தலையில் உள்ள கேசமே அவர்களுடைய ஆரோக்கியத்தையும் அவனுடைய அழகையும் நிர்ணயிப்பது அத்தகைய சிகையை பெண்ணின் தலையில் இருந்து நீக்கி விட்டால் பெண் அழகற்றவளாகவும் தன்னம்பிக்கை இல்லாதவளாகவும் மாறிவிடுவாள் அவளால் வெளி உலகத்தில் எந்த செயலும் செய்ய முடியாது என்ற குறுகிய மனப்பான்மையை வைத்திருந்த காலத்தில் இதை எதிர்த்த மாபெரும் சக்தி படைத்த பெண்ணாக சாவித்திரிபாய் நமக்கு தெரிகிறார் .


1870 ஆம் ஆண்டு நாட்டில் மிகப்பெரிய பஞ்சம் ஏற்பட்டது அந்த பஞ்சத்தினால் பெற்றோர்கள் இழந்த 52 குழந்தைகளுக்கு உண்டு உறைவிட பள்ளி நடத்தி அந்த குழந்தைகளை தாய் போல் காத்த தாய்மை உள்ளம் கொண்டவர் தான் சாவித்திரிபாய் 

1897 இல் ஏற்பட்ட பிளேக் நோய்.. தொற்று நோயாக எங்கும் பரவி இருந்த காலத்தில் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காகவே தன்னுடைய வளர்ப்பு மகனுடன் ஒரு மருத்துவமனையை அமைத்தார் அங்கு வரும் நோயாளிகளுக்கு தாய் உள்ளத்துடன் மருத்துவம் செய்தார் காலத்தின் கட்டாயம் அந்த நோய் அவருக்கும் தொற்று ஏற்பட்டு 1897 ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் பெண் கல்விக்காக முதல் பள்ளியை தொடங்கியவர் தன்னம்பிக்கை தைரியத்துடன் என்றும் பெண்களுக்கு முன் உதாரணமாக இந்தியாவின் பெண் நட்சத்திரங்களில் ஒரு நட்சத்திரமாக விளங்கும் சாவித்திரிபாய் இந்த மண்ணிலிருந்து தன் உடலால் மட்டும் மறைந்தார் இன்னும் அவர் வழிகாட்டிய பெண் கல்வியும் மருத்துவமனையும் அவருடைய பெயரைச் சொல்லிக் கொண்டே இருக்கிறது


சமூகத்தில் பெண் நலனுக்காக பாடுபட்ட சாவித்திரிபாய் புலே பெண் கல்வியின் தேவை ,ஜாதி எதிர்ப்பு ஆகிய கருத்துக்களை வலியுறுத்தி கவிதை மலர்கள் என்ற நூலை 1892 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்டார். பெண் சமூக சீர்திருத்தவாதிகளை சிறப்பிக்கும் வகையில் அவர் பிறந்த மாநிலமான மகாராஷ்டிரா அரசு சாவித்திரிபாய் புலேயின் பெயரில்  விருது விருது வழங்கும் நிகழ்வை நடத்தி சாதனையாளர்களுக்கு அவர் பெயரில் விருது கொடுத்துக் கொண்டிருக்கிறது. புனே பல்கலைக்கழகத்தின் பெயரை சாவித்திரிபாய் புலே பல்கலைக்கழகம் என 2015 ஆம் ஆண்டு மாற்றி சாவித்திரிபாய்புலேவுக்கு மேலும் பெருமை சேர்த்து மகுடம் சூட்டி உள்ளது மத்திய அரசு. 1998 ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி சாவித்திரிபாய்புலே நினைவாக இந்திய அஞ்சல் துறை இவருக்கு அஞ்சல் தலையும் வெளியிட்டு சிறப்பு செய்துள்ளது.


பெண் முன்னேற்றம் பெண் முன்னேற்றம் என்று பல தலைவர்களும் சமூக போராளிகளும் போராடிக் கொண்டே தான் இருக்கிறார்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் பெண்ணின் வளர்ச்சி என்பது போராட்டங்களை தாண்டி அவளுடைய தன்னம்பிக்கை தைரியத்தால் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது இந்த போராட்டங்கள் எல்லாமே பெண் வெற்றி பெறுவதற்கு உந்து சக்தியாகவும் அவளுக்கு நம்பிக்கையை கொடுக்கும் உயிரோட்டமாகவும் இருக்கும் என்பதுதான் நிதர்சன உண்மை.


இன்றைய காலகட்டத்தில் பெண்கள் எல்லா துறையிலும் தடம் பதித்து தன்னுடைய செயல்பாடுகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள் ஆனாலும் பெண் வெற்றி பெற்று விட்டால் என்று முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாத சூழல் இருக்கிறது 

பெண்ணின் பாதுகாப்பும், பெண்ணின் சுதந்திரமும் இன்னும் முழுமை பெறவில்லை என்பதுதான் நிதர்சன உண்மை .

பெண்ணென்னும் பெரும் சக்தியை காக்க மறந்தால்  இந்த உலகத்தின் வாழ்வாதார சக்தி என்பது மறைந்து விடும் என்பதை உணர வேண்டும் பெண்மையை போற்ற தேவையில்லை பெண்மையை மென்மையானவள் என்று புகழத் தேவையில்லை அவளுடைய திறமையை தடம் பதிக்க எல்லோரும் வழி காண்பித்தாள் அவள் தடம் பதித்த பெண்ணாக தடம் பதித்த தாரகையாக உயர்வாள் என்பது நிதர்சன உண்மை 


தடம் பதிக்கும் தளிர்களாக பெண் குழந்தைகளை வளர்ப்போம் தன்னம்பிக்கை தைரியம் கொடுப்போம் அவள் தடம் பதித்த தாரகையாக இந்த சமூகத்தில் மட்டுமல்ல உலகத்திலேயே வெற்றி பெற்ற பெண்ணாக வாழ்வாள் என்பது நிதர்சன உண்மை.