பெண் கலெக்டருக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பிய விவகாரம்: அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு!

Su.tha Arivalagan
Nov 23, 2026,02:01 PM IST

சென்னை:தமிழகத்தில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பெண் மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியது தொடர்பான விவகாரத்தில், உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடமிருந்து இதுவரை எந்தவொரு புகாரும் வரவில்லை என அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.   


வழக்கின் பின்னணி:


கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் கலெக்டருக்கு, தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியதாக வாட்ஸ்ஆப்பில் சமீபத்தில் தகவல் பரவியது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்திருந்தனர். சம்பந்தப்பட்ட எம்எல்ஏ மீது உடனடியாக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. இந்த விவகாரம் முதல்வரின் கவனத்தில் இருப்பதாகவும், விசாரணை நடத்தி குற்றம் நடந்தது உண்மை என தெரிய வந்தால் முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என அமைச்சர் அருண்ராஜூம் கூறி இருந்தார்.




இந்நிலையில் இது குறித்து முறையான மற்றும் உரிய விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் ஆர்.த்ரிசூலி என்பவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. பொது வெளியில் பேசப்படும் இந்த விவகாரத்தின் உண்மைத் தன்மையை வெளிக் கொணர வேண்டும் என்ற நோக்கில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.   


நீதிமன்ற விசாரணை:


இந்த மனு இன்று (23.11.2026) சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் பெண் ஆட்சியர் விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது. இதற்குப் பதிலளித்த தமிழக அரசின் தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், "இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடமிருந்து இதுவரை எந்தவொரு புகாரும் அரசுக்கு வரவில்லை" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். புகார் ஏதும் வராத நிலையில், இது தொடர்பாக மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பது குறித்த அரசுத் தரப்பு நிலைப்பாட்டை அவர் நீதிமன்றத்தில் எடுத்துரைத்தார்.   


நீதிபதியின் அதிரடி உத்தரவு:


இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உயர் நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமிநாராயணன், இந்த விவகாரத்தில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் உண்மையா அல்லது இல்லையா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டியது அவசியம் எனக் குறிப்பிட்டார். அதன்படி, இந்தக் குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மை குறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஆகியோரிடம் உரிய விளக்கம் மற்றும் அறிக்கையைப் பெற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என அரசுத் தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 


உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவால், பெண் ஆட்சியர் விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் தலைமைச் செயலாளர் அளிக்கப்போகும் அறிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் மற்றும் அதிகாரிகள் வட்டாரத்தில் எழுந்துள்ளது.