பணிச்சுமை (கவிதை)

Su.tha Arivalagan
Oct 21, 2025,01:13 PM IST

- கவிதா உடையப்பன், சேலம்


பணியினால் பிறந்தது  மனஅழுத்தம்..

பணியினை மதிக்காததால்.. வந்தது வருத்தம்.

 

பொறுப்பேர்த்து நான் செய்த வேலையை

பார்வையிடாமல் புறம் தள்ளினர்.




ஆர்வமுடன் பணியாற்றிய என் உள்ளுணர்வை அங்கீகரிக்க மறுத்தனர்.


என்ன தெரியும் என்று கேட்டே வேலைக்கு அழைத்தனர் -

பிறகு  தெரியாததையும் தோளில்  சுமத்தினர்.


முயன்று கற்று முன்னேற துடித்தேன். 

முடிவில்லா தடைகள் விதித்தனர்.


பாராட்டுகளைப் பதுக்கினர்,

பணிஉயர்வை முடக்கினர்.


கால நேரம் இன்றி உழைத்தேன், 

ஆயினும்

இளையவளுக்கு கௌரவம்  அளித்தனர்.


"ஏன்? " என வினவும் முன்னரே 

"செயற்பாட்டு கணக்காய்வு" என பதிலளித்தனர்.


அறிந்தும் சதி செய்தனர்,

தெரிந்தும் அதையே செயலாக்கினர்.


"கடிகாரத்தின் கட்டுப்பாட்டில்  நுழைய வேண்டும்" என்றனர். 

ஆனால் கடிகாரத்தையும் கடந்து உழைக்க வைத்தனர்.


உடல் ஓய்வை நாட,

மனம் இன்னும் ஓடிக்கொண்டே இருந்தது.


இலக்கை நோக்கி பாய்ந்தேன்,

வழக்கத்தை மீறி உழைத்தேன் - 

ஆனால், கலக்கத்தின் கரையில் நின்றேன்.


ஊதியம் கிடைத்தது.. 

ஊக்கம்  தொலைந்தது. 


சிரிக்க மறந்தேன், 

சிந்தனையில் கரைந்தேன். 


வெற்றியை தேடினேன் - வெறுமையே மிஞ்சியது.


(சேலத்தைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர் கவிதா உடையப்பன் ரத்தினா செந்தில்குமார் தலைமையிலான திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றவர். தன்னம்பிக்கை பேச்சாளரும் கூட)