லன்ச் டைம் வந்துருச்சா.. அதுக்கு முன்னாடி.. இன்னிக்கு என்ன நாள் தெரியுமா.. உலக உணவு தினம்!
- ஸ்வர்ணலட்சுமி
இன்று உலக உணவு தினம்.. அதாவது World Food Day.. அதைப் பற்றிப் பார்த்துட்டு லன்ச் சாப்பிடப் போகலாம் வாங்க.
"உலக உணவு தினம்" அக்டோபர் மாதம் 16ஆம் தேதி வியாழக்கிழமை ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு(FAO) 1945 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட நாளை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது.
"தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் " என்று மகாகவி பாரதியார் பசியின் கொடுமையை கண்டித்து அனைவரும் உணவு பெற வேண்டும் எனும் கருத்தை புரட்சிகரமாக வலியுறுத்தினார். இன்றைய நாளில் நாம் அவரது கூற்றை நினைவு கொள்வோமாக. மேலும் "ஊண் மிக விரும்பு" எனும் புதிய ஆத்திச்சூடி வரி மூலம் அளவுக்கு அதிகமாக உண்ணுவது நோய்களுக்கு வழி வழங்கும் என்பதையும் எச்சரித்துள்ளார்.
திருக்குறள்:
"மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின் "
பொருள்: முன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து அதன் பிறகு தகுந்த அளவில் உணவு உட்கொண்டால் உடலுக்கு வேறு மருந்து தேவை இல்லை என்பதை திருவள்ளுவரும் சரியான நேரத்தில் சரியான அளவில் உண்பதன் முக்கியத்துவத்தையும், உடல் நலத்தை பேணுவதையும் வலியுறுத்தியுள்ளார்.
உணவு,உடை,இருப்பிடம் எனும் ஒவ்வொரு மனிதனின் அத்தியாவசியமான தேவைகளில் முதன்மையாக இருப்பது உணவே..
கருப்பொருள் :
2025 ஆம் ஆண்டுக்கான உலக உணவு தினத்தின் கருப்பொருள் யாதெனில் "சிறந்த உணவு மற்றும் சிறந்த எதிர்காலத்திற்காக கைகோர்த்து" (Hand - in -hand for better foods and a better future ) என்பதாகும். இந்தக் கருப்பொருளின் நோக்கம் அனைவரும் ஆரோக்கியமான உணவை பெறுவதை உறுதி செய்யும் வகையிலும்,விவசாய உணவு முறைகளை பின்பற்றுவதிலும், ஆரோக்கியமான உணவு கிடைப்பது உறுதி செய்வதற்காக உலகளாவிய ஒத்துழைப்பை வலியுறுத்துகிறது.
80 - வது ஆண்டு : ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) 1945 இல் நிறுவப்பட்டதின் இந்த ஆண்டு 80 வயதை எட்டுகிறது. உலகளாவிய பசியை சமாளிப்பதும்,உலகம் முழுவதும் பசியை ஒழிக்க பாடுபடுவதும் இதன் முதன்மையான நோக்கமாகும்.
1981 ஆம் ஆண்டு முதல் உலக உணவு தினம் ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு கருப்பொருளை ஏற்றுக்கொண்டு அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்துரைத்து பொதுவான கவனத்தை ஈர்த்து வருகிறது.FAO ஒவ்வொரு ஆண்டும் உலக உணவு தின பதக்கங்களை வெளியிட்டு வருகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகள் 'உலக உணவு தினம்'- பற்றிய 'கருப்பொருள் 'நினைவு கொள்வோமாக :
2020: "வளருங்கள், போஷிங்கள், நிலைநிறுத்துங்கள். ஒன்றாக.
20 21 : "ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு இப்போதே பாதுகாப்பான உணவு ".
20 22 : "யாரையும் விட்டு வைக்காதீர்கள் ".
20 23 : " தண்ணீர் என்பது உயிர்,தண்ணீர் என்பது உணவு யாரையும் விட்டு வைக்காதீர்கள் ".
20 24 : "சிறந்த வாழ்க்கை மற்றும் சிறந்த எதிர்காலத்திற்கான உணவுகளுக்கான உரிமைகள்".
உலக உணவு தினம் பற்றிய விழிப்புணர்வை வளரும் குழந்தைகளுக்கு எடுத்துரைப்பது, பள்ளி பருவத்திலிருந்து அவர்களை ஊக்குவிப்பதும், அவர்களுக்கு நல்ல ஆரோக்கியமான உணவு அளிப்பது நம் கடமை. இந்த நாள் பசியை ஒழித்து அனைவருக்கும் உணவு கிடைக்க செய்வதை உறுதி செய்வதற்கான முயற்சிகளை ஊக்குவிக்கிறது. இது அரசாங்கங்கள், வணிகங்கள்,தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் இணைந்து செயல்படும் ஒரு நாள் ஆகும்.
பசியின்றி அனைவரும் நல்ல உணவும்,ஆரோக்கியமான உணவும் கிடைக்கப்பெற்று நல்வாழ்வு வாழ, தென் தமிழில் சில நல்ல தகவல்களை பகிர்ந்து உள்ளோம். மேலும் இன்று பிறந்தநாள் மற்றும் திருமண நாள் கொண்டாடும் அனைவருக்கும் தென் தமிழ் சார்பாக நல்வாழ்த்துக்கள். வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.