ஆசிரியப் பணி அறப்பணி!
- தமிழ்மாமணி எழுத்தாளர் இரா. கலைச்செல்வி
அறியா இருளை அடியோடு அகற்றி,
நெறியின் வழியினை நேர்த்தியாய் காட்டி,
சிந்தனைச் சுடரைச் சிறப்பாக ஏற்றி,
விந்தைகள் செய்யும் மாபெரும் பணி!
பிஞ்சு மனங்களில் அன்பினை விதைத்து,
கெஞ்சும் கேள்விகளுக்குப் பதிலினைத் தந்து,
வண்ணக் கனவுகளுக்கு சிறகுகள் முளைக்க,
எண்ணமும் எழுத்தும் கற்றுத் தரும்!
சாதி மதங்களைச் சாராப் பார்வை,
நீதி நெறியை உணர்த்தும் சீர்மை,
நாட்டின் எதிர்காலம் செதுக்கும் உளி,
நல்லது காட்டும் பாதையில் ஒளிரும் ஒளி!
மாதா பிதாவுக்கு அடுத்த நிலையில்,
நாதா வழிகாட்டும் குருவின் வடிவில்,
ஏணிப்படியாக அனைவரையும் ஏற்றிவிட்டு,
பொறாமை ஏதுமின்றி பார்க்கும் ஒரே ஜீவன் .
அறமே வடிவான ஆசிரியப் பணி,
தரணியில் என்றும் தலைசிறந்த பணி!
(சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அரசு அதிகாரி ஆவார் . அவரின் கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும் , வாசிப்பின் மீதும், தீராக் காதல் கொண்ட அவர், நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒளிபரப்பாகி உள்ளன. கதைகளைத் தவிர, கவிதைகளும், ஆய்வு கட்டுரைகளையும் அதிகம் எழுதி வரும் இவர் உளவியலில் முதுகலை பட்டமும் பெற்றவர். சாதனைச் செல்வி, சாதனைப் பெண், தமிழ் மாமணி, தங்கத்தாரகை, சேவா ரத்னா , கவிஞாயிறு, கவியருவி, கவிச்செம்மல், உழைப்பாளர் திலகம், மகாகவி, செம்மொழி கலைஞர் விருது, கலைரத்னா போன்ற 30 க்கும் மேற்பட்ட விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்)