மொறு மொறு உருளைக்கிழங்கு வறுவல்.. சூப்பரான சைட் டிஷ்.. சாப்பிடுங்க!
- மயிலாடுதுறை வீ.யோகாஸ்ரீ
உருளைக்கிழங்கு கூட்டு ,உருளைக்கிழங்கு வறுவல் என்று சாப்பிட்டு அலுத்து போய் விட்டதா? உருளைக்கிழங்கை மொறு மொறுப்பாக வறுத்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
நொறுக்கு தீனிக்கு பதிலாகவும் இதை சாப்பிடலாம். சாயந்திரம் பள்ளி விட்டு வரும் பிள்ளைகளுக்கு இதை செஞ்சு கொடுங்க.. அப்புறம் உங்களை விட மாட்டாங்க.
வாங்க எப்படி செய்வது என்று பார்ப்போம் .
தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு-1/4kg
மஞ்சள் தூள்-1/4தேக்கரண்டி
மிளகாய் தூள்-1 தேக்கரண்டி
கர மசாலா தூள் அல்லது மிளகுத்தூள் -1/2தேக்கரண்டி
பெருங்காயத்தூள் -1/4தேக்கரண்டி
உப்பு -தேவையான அளவு
செய்முறை:
உருளைக்கிழங்கை ஒரே அளவிலான துண்டுகளாக நறுக்கி, அதிகப்படியான மாவுச்சத்தை நீக்க தண்ணீரில் கழுவி எடுத்துக் கொள்ளவும்.
கொதிக்கும் நீரில் நறுக்கிய உருளைக்கிழங்கு துண்டு மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து 2-3 நிமிடங்கள் மட்டும் வேக வைத்து, தண்ணீரை முற்றிலும் வடித்துவிடவும்.
வடித்து எடுத்த உருளைக்கிழங்குடன் , மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா அல்லது மிளகுத்தூள்,பெருங்காயத்தூள் சேர்த்து கிளறி ஐந்து நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
எண்ணெய் சட்டியில் எண்ணெய் ஊற்றி நன்றாக கொதித்த பிறகு,மிதமான தீயில், 5 நிமிடங்கள் கிளறிக்கொண்டே வதக்கினால், வெளிப்புறம் மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு வறுவல் தயார்.
குறிப்பு: உருளைக்கிழங்கை தண்ணீரில் வடித்த பின், சிறிது நேரம் காற்றில் உலர்த்தினால் வறுவல் இன்னும் மொறுமொறுப்பாக இருக்கும்.