யூடியூப் பார்த்து வெண்காரம் வாங்கி சாப்பிட்ட இளம்பெண் உயிரிழப்பு
மதுரை: உடல் பருமனை குறைப்பதற்காக யூடியூப் பார்த்து வெண்காரம் வாங்கி சாப்பிட்ட கல்லூரி மாணவி கலையரசி உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம், செல்லூர், மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்தவர் கலையரசி. 18 வயதுடைய இவர் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இவர் சருமப் பாதுகாப்பு மற்றும் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக தவறான ஆலோசனையின் பேரில் வெண்காரம் (Borax) உட்கொண்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட இளம்பெண், சமூக வலைதளங்களில் பரவிய தவறான தகவல்கள் அல்லது முறையற்ற ஆலோசனையின் அடிப்படையில், வெண்காரத்தை மருந்து என நினைத்து உட்கொண்டதாகத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து அவருக்கு கடுமையான வாந்தி, வயிற்று வலி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். வெண்காரத்தில் உள்ள நச்சுத்தன்மை இரத்தத்தில் கலந்து, சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலை கடுமையாக பாதித்ததால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெண்காரம் என்பது சோப்புத் தூள் தயாரிப்பு, பூச்சிக்கொல்லி மற்றும் வெல்டிங் போன்ற தொழில்துறை பணிகளுக்கோ பயன்படுத்தக் கூடியவை. இதை உட்கொள்வது உடலில் கடுமையான நச்சுத்தன்மையை (Toxicity) உண்டாக்கும். வாந்தி, வயிற்றுப்போக்கு, தோலில் அலர்ஜி மற்றும் உறுப்பு செயலிழப்புக்கு இது வழிவகுக்கும். இயற்கை மருத்துவம் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் பரவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்பி எதையும் உட்கொள்ள வேண்டாம் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.