2 Kutti கதைகள்.. காலம் கடந்த பிறகு.. சமயோசித புத்தி!

Su.tha Arivalagan
Oct 10, 2026,05:04 PM IST

- வே. மிதுன்ராஜ்


நாம் அனைவரும் காலம் கடந்த பிறகு தான் எல்லாவற்றையும்  நினைத்து பார்க்கிறோம். இவற்றில் நமக்கு நிகழ்ந்த இன்பங்கள் மட்டுமே நினைவுகளாக நம் எண்ணத்தில் நிலைத்து நிற்பது சிறப்பான ஒன்று.


பள்ளி சென்ற பின்பு கவலையின்றி மகிழ்ச்சியாக இருந்த குழந்தை பருவத்திற்கு ஏங்குகிறது நம் மனம், கல்லூரி சென்ற பின்பு பள்ளியில் நண்பர்களோடு இருந்த நாட்களையும் ஆசிரியர் பிரம்பில் கொடுத்த முத்தமும் மீண்டும் வேண்டுமென எண்ணுகிறது.


வேலைக்கு சென்ற பின்பு கல்லூரி காதல்களும் நண்பர்களின்  மோதல்களும் நினைத்து கன்னம் சிவக்கிறது ஆனந்த கண்ணீர் வழிகிறது. குடும்பம் என்ற நிலை வந்த பின்பு இளம் பருவத்தை நினைத்து பார்த்து மனம் இலகுவாகிறது.


காலை நேர வழிபாட்டு கூட்டமும் , நண்பர்களின் கூச்சல் சத்தமும், ஆசிரியர்களின் தாலாட்டும் , சத்துணவு சாதமும் , பாட்டி கடை மிட்டாயும்,  புதிய புத்தகத்தின் வாசனையும், மெழுகு வண்ணக் கோலின் மனமும், புது சீருடையின் நறுமணமும், ஆண்டு தேர்விற்கு பின்பு சட்டையில் அடித்த பேனா மையின் கரையும் காலம் கடந்த பின்னும் நம் நினைவில் இனிக்கும் ஒன்றாகும்.


சமயோசித புத்தி




அது ஓர் தீபாவளி பண்டிகை சமயம்.. மித்ரனும் மித்வினும் தன் தாயுடன் புத்தாடை எடுக்க கடைக்கு செல்கின்றனர் , மூவரும் பேருந்தில் செல்லும் பொழுது வழியில் உள்ள கடைகளையெல்லம் வேடிக்கை பார்த்துக் கொண்டே சென்று கொண்டிருக்கையில் மித்ரனும் மித்வினும் தங்களுக்கு ஒரே மாதிரி ஆடைகள் எடுக்க வேண்டும் என விரும்பினர். 


அதன்படி தாய் சந்திரலேகாவும் அவர்களுக்கு ஒரே மாதிரியான ஆடை எடுக்க முடிவு செய்தார். மூவரும் பேருந்து நிலையத்தில் இருந்து கடைத் தெருவிற்கு நடந்து சென்றனர். வழியில் உள்ள கரும்புப்பால் கடையை கண்ட மித்ரன் அம்மா எனக்கு கரும்புப்பால் வேண்டும் என்றான் உடனே மித்வின் எனக்கு பாதம்பால் வேண்டும் என்று கேட்க இருவருக்கும் அவற்றை வாங்கி கொடுத்து அழைத்துச் சென்றார்.


மூவரும் கடையை அடைந்தனர். பிள்ளைகளின்  விருப்பப்படியே சந்திரலேகாவும் ஆடைகளை எடுத்துக் கொடுக்க... இருவரும் கடையில் துள்ளி குதித்தனர். கடையில் இருந்து வெளியில் வந்த பின்னர் மீதமுள்ள பணத்தை ஒருமுறை எண்ணிப்பார்த்தார் சந்திரலேகா. மூவரும் பேருந்து நிலையம் சென்று பேருந்து ஏறிய பின்னர் பயணச்சீட்டு பெற தன் பையை எடுத்தார், பணத்தை காணவில்லை... 


சந்திரலேகா பதறினார். மித்ரனோ சட்டென்று முடிவெடுத்து தன் தாயை அமைதிபடுத்தினான். அம்மா பொறுமையாக இருங்கள். நானும் மித்வினும் வந்த பாதையிலேயே சென்று பணம் எங்காவது இருக்கிறதா என பார்த்து வருகிறோம் என்று கூறி இடத்தை விட்டு சென்றனர். சந்திரலேகாவோ பதற்றத்துடன் அமர்ந்திருந்தாள், இருவரும் வழியெல்லாம் தேடி ஆடைகள் வாங்கிய கடையையே அடைந்தனர் பணம் கிடைக்கவில்லை.


திடீரென ஒரு எண்ணம் மித்ரனுக்கு ஏற்பட்டது... அம்மா மீதமுள்ள பணத்தை இங்கு தானே எண்ணிப் பார்த்தார் ஒருவேளை இங்கு விழுந்திருக்கும் என நினைத்த கனமே அவர்கள் ஆடை வாங்கிய கடையின் முன்பு கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்டிருப்பதை பார்த்தான். உடனே  கடையின் உரிமையாளரிடம் தகவலை தெரிவித்தான். 

பண்டிகை சமயத்தில் காணொளி காட்சிகளை கண்டு பணத்தை பெறுவது சிரமமான ஒன்று என கடைக்காரர் 

கூறினார். இருப்பினும் தனது சூழ்நிலையை எடுத்துக்கூறி காணொளிகளைப் பார்த்தனர். அதில் சாலையில் செல்லும் ஒருவர் அப்பணத்தை எடுத்து துணி கடையின் முன்பு சிறு பழக்கடை வைத்திருந்த  முதியவரிடம் கொடுத்ததைத் தெரிந்து கொண்டனர். இதையடுத்து அங்கு அமர்ந்து இருந்த முதியவரிடம் மித்ரன் சென்று கேட்டான்.


முதியவர் அப்பணத்திற்கான அடையாளங்களை கேட்டார். மித்ரன் அவரிடம் அதில் மூன்றாயிறத்து இருநூற்று முப்பது ரூபாய் பணம் இருக்கும் .பத்து ரூபாய் நோட்டு சற்று அழுக்கு படிந்தும் கிழியும் நிலையிலும் இருக்கும் என கூறினான். சோதித்து பார்த்த முதியவர் இனி கவனமுடன் செயல்படுங்கள் என்ற அறிவுரையோடு பணத்தை வழங்கினார். 


பதற்றத்தில் அமர்ந்து இருந்த தன் தாயிடம் இன்பமான இச்செய்தியை கூற இருவரும் பேருந்து நிலையம் விரைந்தனர். கண்ணீரோடு அமர்ந்து இருந்த தாயை கட்டியணைத்து பணத்தை அளித்தான் மித்ரன். தன் குழந்தைகளின் துணிச்சல், விடாமுயற்சி மற்றும் சமயோசித புத்தியை நினைத்து பெருமிதத்துடன் முத்தமிட்டாள்.... மூவரும் நிம்மதியுடன் வீடு திரும்பினர்.


நாமும் இதைப்போன்றே ஒருவர் செய்வதறியாது திகைக்கும் பொழுது சமயோசிதமாக யோசித்து உடனடியாக தீர்வு வழங்கி மற்றவர்க்கும் பயனளித்து நாமும் பயன் பெறுவோம்.