தஞ்சையில் கொடுமை.. 13 வருடமாக காதலித்த.. ஆசிரியையை தீர்த்துக் கட்டிய காதலன்!
Nov 27, 2025,05:21 PM IST
- க. சுமதி
தஞ்சாவூர்: தஞ்சாவூரில், 13 வருடமாக காதலித்து வந்த ஆசிரியையை, அவருக்கு வேறு இடத்தில் கல்யாணம் நிச்சயம் செய்த காரணத்தால் பள்ளிக்கூடம் அருகே வைத்து வெட்டிக் கொன்றுள்ளார் அவரது காதலர்.
தஞ்சை ஆலங்குடியில் அரசு தொடக்கப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்தவர் ஆசிரியை காவியா. ஆசிரியை காவியாவும் அஜித்குமார் என்பவரும் கடந்த 13 வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், காவியாவின் பெற்றோர்கள் வேறு இடத்தில் அவருக்கு நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். இதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் அஜீத் குமார். காவியாவை சந்தித்துப் பேச முயன்றுள்ளார். ஆனால் காவியா பிடி கொடுத்துப் பேசவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் வழக்கம்போல் இன்று காலை பள்ளிக்குச் சென்றுள்ளார் காவியா. அப்போது அவரைப் பின் தொடர்ந்து வந்துள்ளார் அஜீத் குமார். வழிமறித்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அஜீத் குமார், மறைத்து வைத்திருந்த கத்தியால் காவியாவை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த காவியா பரிதாபமாக உயிரிழந்தார்.
செய்தி அறிந்த ஆலங்குடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்
(க.சுமதி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் எழுதி வருகிறார்)