அஞ்சாப்பு அட்டகாசங்கள்!

Su.tha Arivalagan
May 27, 2026,02:17 PM IST

- பன்முகக் கவிஞர் க.முருகேஸ்வரி


2024-2025 ஆம் கல்வி ஆண்டில்‌ என்னிடம் படித்த ஐந்தாம் வகுப்பு மாணவச் செல்வங்களுடன் எனக்கு ஏற்பட்ட பல்சுவை அனுபவங்களைப் பற்றித் தான் இந்தத் தொடர்.., அட்டகாசங்கள் என்பது ஒரு அழகிற்காகத் தான்...மற்றபடி அவர்களுடனான என் உறவு அற்புதமானது... ஒவ்வொரு வாரமும் ஒரு அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்...


குருதேவனின் குறும்பு 


என் பள்ளியில் அந்த வருடம்  ஐந்தாம் வகுப்பில் 32 மாணவர்கள்....


எண்ணும் எழுத்தும் திட்டம் என்ற அருமையான திட்டம் செயல்பாட்டில் இருந்தது. அதில் ஒவ்வொரு பாடத்திற்கும் பாடக் கருத்தைப் புரிந்து கொள்ளும் வகையில் செயல்பாடுகள் அமைக்கப்பட்டிருக்கும்...


அப்படியான ஒரு செயல்பாடு ஆங்கிலப் பாடத்திற்கு கற்றுக் கொடுக்கப் போகிறேன்....




மாணவர்கள் வட்டமாக அமர வேண்டும்.. ஒரு பந்தைக் கடத்த வேண்டும்..ஸ்டாப் சொல்லும் போது யாரிடம்‌ பந்து இருக்கிறதோ... அவர் எழுந்து... குட் மார்னிங்.. மை நேம் இஸ் முருகன்... என்று கூற வேண்டும்...


நிறைய முறை விஷயத்தைக் கூறி விட்டு வீடியோ எடுக்க ஆரம்பித்தேன்..


நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது.. அப்போது குருதேவனிடம் பந்து வந்தது.


அனைவரும் குருதேவனையே ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தோம்...


குருதேவன் எழுந்து..

இரண்டு கைகளையும் கூப்பி வணக்கம் 

வைத்துக் கொண்டே...


எல்லாருக்கும் வணக்கம்.

என்‌ பெயர் குருதேவன். என் சொந்த ஊரு வயலாநல்லூர் என்றானே பார்க்கலாம்...


சொல்லவா வேண்டும் மற்ற மாணவர்களுக்கு...


குபீர் என்று ஒரு சிரிப்பு... விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்.இதில் சிலருக்கு என்ன நடந்தது என்றே தெரியாமல் சிரிப்பார்கள்.. சிரிப்பை அடக்க நான் பட்டபாடு இருக்கே..


ஆங்கிலச் செயல்பாட்டை தமிழுக்கு மாற்றினான் பாருங்கள்.. அங்க நிக்கிறான் குருதேவன்...


அட்டகாசம் தொடரும்..


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார். சிங்கப்பூர் பொழில் பண்பலையில் கவிதைகள் எழுதுகிறார்.. சிங்கப்பெண், அருந்தமிழ் தாரகை விருதுகள் பெற்றுள்ளார்).