தில்லைவாழ் அந்தணர்கள் வரலாறு.. 63 நாயன்மார்கள் வரலாறு (பகுதி 2)
- கலைவாணி கோபால்
சிவபெருமானால் சுந்தரருக்கு அடி எடுத்துக் கொடுக்கப்பட்ட சிறப்புக்குரியவர்கள் 63 நாயன்மார்களில் அடுத்து பாடப் பெறுபவர்கள் தில்லைவாழ் அந்தணர்கள். உண்மையில் இவர்கள்தான் முதலாவதாக பாடப்பட்பட்டவர்கள் ஆவர்.
தில்லையிலே பிறந்து தில்லையிலேயே வளர்ந்து சிவபெருமான் நாமம் மட்டுமே மனதில் நிறுத்தி சரியை, கிரியை, யோகம், ஞானம்,... நான்கு நெறிகளையும் பற்றி, வேதங்களையும் முறையாக கற்று, மாசில்லாத ஒழுக்கங்களை உடைய பெருமைக்குரியவர்கள் தில்லைவாழ் அந்தணர்கள்
தில்லைவாழ் அந்தணர்கள் என்பவர்கள் ஒருவர் இருவர் அல்லர் கிட்டத்தட்ட 3000 அந்தணர்கள் மற்றும் அவர்கள் குடும்பங்களும் சேர்ந்து சிவபெருமானின் பூஜைகளை மட்டுமே செய்து அவர் நாமங்களை மட்டுமே உச்சரித்து மாசு இல்லாத, ஒழுக்கத்திலும் தானத்திலும் சிறந்து விளங்கியவர்கள்.
சிவபெருமானுக்கு பூஜை செய்வது அன்றி ,...மற்றொரு தொழிலை மற்றொரு சிந்தனையும் மனதில் கொள்ளாது , இறைவன் திருவடிகளை சிந்தையில் வைத்து அகத்திலும், புறத்தினாலும் பூஜை செய்த புகழுக்குரியவர்கள் தில்லைவாழ் அந்தணர்கள்.
"செம்மை வேதியர்கள்" எனும் சிறப்பு பெயர் பெற்ற இவர்கள் தில்லையில் உள்ள நடராஜப் பெருமானுக்கு சைவ அடையாளங்களை உடலில் தாங்கி அதாவது நெற்றியில் திருநீறு பூசி, ருத்ராட்சம் அணிந்து, முறையான வேதப் பாராயணங்களை கற்று தில்லை நடராஜப் பெருமானுக்கு அகப்படி தொழில்களை (பூஜைகள்) மட்டுமே செய்துவந்த தீட்சிதர்கள் தான் இந்த தில்லைவாழ் அந்தணர்கள்
"இவ் இருடிகளில் தாம் ஒருவர்" என்று இறைவனால் கூறப்பட்டவர்கள், அதாவது இவர்கள் மூவாயிரம் பேரில் தாமும் ஒருவர் என்று சிவபெருமானால் கூறப்பட்டவர்கள். மேலும்.... ஓதுதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல்,... என்னும் அரு தொழில்களிலும் கலியின் தீமை கண்டு அறநெறியில் வாழ்ந்த அந்தணர்கள்.
அதனாலேயே நம்பி ஆரூராரின் திருத்தொண்டர் புராணம் அதாவது பெரிய புராணத்தில் "தில்லைவாழ் அந்தணர்க்கு தம் அடியார்க்கும் அடியேன்" என்று முதலாவதாக வைத்து போற்றப்படுபவர்கள் சிதம்பரத்தில் பிறந்து தில்லை சிற்றம்பலம் கூத்தனுக்கு பூஜை புரியும் இந்த தில்லைவாழ் அந்தணர்கள்.
(தொடரும்)