நாணலையே நாணச்செய்யும் இளந்தென்றல் வீசயிலே...!

Su.tha Arivalagan
Dec 01, 2025,09:53 AM IST

- அ.வென்சிராஜ்


அந்தி சாயும் ஒரு அழகிய மாலையிலே....

சில்லென காற்று வீசும் ஒரு ஆற்றங்கரை ஓரத்திலே ....

நாணலையே நாணச்செய்யும் இளந்தென்றல் வீசயிலே... 

பேருந்தின் சன்னல் ஓரம் அமைதியாய் ஒரு பயணம்... 


ஆளில்லா சாலையிலே...

அலுங்காமல் குலுங்காமல் அமைதியாய்  ஒரு பயணம்.... 

நிற்க முடியாத வேலை பளுவின் மத்தியில் நிம்மதியாய் ஒரு பயணம்... 

ஓடி ஓடி உழைத்த நேரத்தில் ஓய்வாய் ஒரு பயணம். ..


சலனமில்லா ஏரியிலே அமைதியாய் மிதக்கும் ஓடம் போல....

அலையில்லா குளத்தினிலே நகராமல் மிதக்கும் இலை போல... 

அத்தனை பணிக்கும் மத்தியிலே....

பதட்டம் இல்லா ஒரு பயணம்.... 




பேருந்தில் கதறிய குத்து பாடல்கள் என் அமைதியை கலைக்கவில்லை. ...

குழந்தைகளின் குதூகல நடனம் கூட என் அமைதியின் ஆழத்தை தொடவில்லை. ..

மனதில் அத்துணை ஆழமான அமைதி. ...


சிலு சிலுவென  காற்று என் முகத்தில் பட்டதும்.... 

கற்கண்டாய் இனித்தது கண் முன் மனது... 

தித்திக்கும் மாலை எனக்கு மட்டும்  திகட்டவே இல்லை. ..

அத்துணை அமைதியாய் ஒரு பயணம்... 


வான் மகளின் நெற்றியில் வைத்திருந்த 

இளஞ்சிவப்பு பொட்டென தோன்றிய ஆதவனும். .. 

பூமித்தாயின் தலையில் வகுடெடுத்தது  போல் தோன்றிய நேரான  சாலைகளும்... 

என் மனதின் ஆழத்தில் மௌனமாய் பதிந்தன. .. 

அத்தனை ஆழமான அமைதி என் மனதில்... 


கிடைத்தது போதுமென கூடு  திரும்பும் புள்ளினங்களும்... 

மேய்ந்தது போதும் என்று மென்று கொண்டே வரும் கால்நடைகளும்... 

என் அமைதியினை  கலைக்க முடியாமல் அப்படியே அகன்று போயின... 

அத்தனை அமைதியாய் ஒரு பயணம். . . 


எதிரே ஓடுகின்ற மரங்கள் எல்லாம். ...

என்னை விட்டு தூரமாய் போயின....

கூடு தேடும் பறவைகள் எல்லாம் கூட்டமாய் பறந்தன...

ஆனால் என் மனதில் ஒரு ஆழமான அமைதி...

அத்துனை அமைதியாய் ஒரு பயணம்... 


நெடு நேரமானதும் ஏதோ நினைவு வந்தது....

நிமிர்ந்து பார்த்தேன்...

தேநீர் அருந்துவதற்கு ஒரு கடையின் வாசலில் பேருந்து...

ஓடிய கால்களுக்கு ஓய்வு கொடுத்து அமைதியாய் நின்றது பேருந்து.... 

உறுமிய இயந்திரம் அமைதியாக இருந்தது....

அமைதியான என் மனது பணிகளுக்குள் நுழைந்தது.... 


அடுத்த அமைதியான பயணத்திற்காய். ..

காத்திருந்த மனதுடனே....

அடுத்த பணிகளுக்குள் நுழைந்து விட்டேன்...!


(அ. வென்சி ராஜ்...  திருவாரூர் பகுதியைச் சேர்ந்தவர். பண்ணைவிளாகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவர் பட்டிமன்ற பேச்சாளராகவும், தன்னம்பிக்கை பேச்சாளராகவும், சமூக செயல்பாட்டாளராகவும் அறியப்படுகிறார். திருவாரூர் தமிழ்ச்சங்கம், தமிழ்நாடு புலவர் பேரவை, இந்தியன் ரெட் கிராஸ் ஆகியவற்றில் வாழ்நாள் உறுப்பினராக உள்ளார். செஞ்சிலுவை சங்கத்தில் கொரடாச்சேரி இணை கன்வீனியராகவும், திருவாரூர் இன்னர்வீல் சங்கத்தில் உறுப்பினராகவும், ஹெல்ப் லைன் டிரஸ்ட் என்னும் ரத்ததான அமைப்பில் தலைமை ஆலோசகராகவும் பயணம் செய்கிறார்)