தெய்வீக ராத்திரி மஹா சிவராத்திரி!

Su.tha Arivalagan
Feb 14, 2026,03:55 PM IST

- "பக்தித் தென்றல்" பாவை.பு


துர்வாசர் முனிவரின் சாபத்தினால் இந்திரனின் தேவலேக செல்வமும் சக்தியும் பறிபோனது மட்டுமின்றி தேவர்களின் சக்தியும்  சேர்த்தே பறிபோனது. இதனால் தேவர்கள் தங்கள் சக்தியை இழந்த நிலையில் அசுரர்களின் இன்னல்களுக்கு ஆளானார்கள். 


இதன் காரணமாக தேவர்கள் மஹா விஷ்ணுவிடம் முறையிட பகவானோ பார்க்கடலை கடைந்து இழந்த செல்வத்தையும் சக்தியையும் மீண்டும் பெறுவீர்களாக என்று ஆலோசனை கூற ,மந்தாரை மலையை மத்தாகவும், வாசுகி பாம்பை கயிறாகவும் கொண்டு தேவர்கள் ஒரு புறமும், அசுரர்கள் ஒரு புறமும் இழுத்து கடய தொடங்கிய போது அமிர்தம் வரும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஆலகால(உலகையே அழிக்கக்கூடிய கொடிய தன்மையுள்ள) விஷம் வந்தது. 


அந்த விஷத்தின் வெப்பம் தாளாமல் தேவர்களும், அசுரர்களும் ஓடிவிட, இதை கண்ட சிவபெருமான் அதனை அருந்தும் போது அருகினில் இருந்த உமையாள் விஷம் தொண்டைக்கு கீழ் இறங்காமல் தனது திருக்கரங்களால் பிடிக்க விஷம் அமிர்தமாகி உலக மக்களை அம்மையும் அப்பனும் காத்தருளிய நாள் தான் சிவராத்திரி.  


அன்றிலிருந்து பரமேஸ்வரன் நீலகண்டன் (விஷம் நின்ற இடம் நீலநிறமானது) ஆனார். 




சிவபெருமான் உண்ட நஞ்சின் தாக்கம் நீக்குவதற்காக, பிரம்மன், மஹாவிஷ்ணு, பார்வதி தேவி, தேவர்கள் முனிவர்கள், மனிதர்கள் முதல் உலக ஜீவராசிகள் அனைத்தும் அன்றிரவு நான்கு ஜாமங்கள் முழுவதும் தூங்காமல் கண்விழித்து ஆகம முறைப்படி பூஜைகள் செய்த ஒரு உன்னதமான நாள். 


மாதம் தோறும் சிவராத்திரி வந்தாலும் மாசி மாதம் தேய்பிறை 14 ஆவது திதியான கடைசி திதியில் சதுர்த்தசி அன்று வரும் சிவராத்திரியே இத்தகைய சிறப்புகளைப்பெற்று மஹா சிவராத்திரியானது. 


இந்த வழிப்பாட்டின் முதல் ஜாம பூஜையை (மாலை 7.30) பிரம்மன் வழிப்பாடு செய்தார், அப்போது அபிஷேகப் பிரியரான சிவபெருமானுக்கு பால் மற்றும் பஞ்சகவ்யா அபிஷேகமும்,தாமரை அர்ச்சனையும், பாசி பருப்பு சர்க்கரை பொங்களும் நெய்வேத்தியமாக செய்து வழிபட, கருமன வினை அகலும், ஆயுள் விருத்தி ஆகும். 


இரண்டாம் ஜாம பூஜையை (இரவு 10.30) மஹாவிஷ்ணு வழிபாடு செய்த காலத்தில், பஞ்சாமிர்த அபிஷேகமும், வில்வ அர்ச்சனையும், கற்கண்டு சாதமும் நெய்வேத்தியமாக செய்து வழிப்பட, பெரும் செல்வ செழிப்பான வாழ்வை தரும். 


மூன்றாம் ஜாம பூஜையை (இரவு 12) சக்தி தேவி வழிபட்ட காலத்தில் தேன் அபிஷேகமும்,வில்வ அர்ச்சனையும், எள் சாதமும் நெய்வேத்தியமாக செய்து வழிபட துன்பம் நீங்கி செல்வம் பெருகும். 


நான்காம் ஜாம பூஜையை (விடியற்காலை 4.30)  தேவர்கள், முனிவர்கள், ரிஷிகள் மனிதர்கள் என அனைத்து ஜீவராசிகளும் வழிபட்ட காலத்தில், கரும்புச்சாறு அபிஷேகமும்,அல்லிபூ அர்ச்சனையும், சுத்த நெய் அன்னமும் நெய்வேத்தியமாக செய்து வழிப்பட சகல வித நன்மைகளும் கிடைக்கும். 


இந்த வருடம் மஹா சிவராத்திரி பிப்ரவரி மாதம் ஞாயிற்றுக்கிழமை 15.2.26 (மாசி 3) வருகிறது. 


விரதம் இருப்பவர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மறுநாள் திங்கட்கிழமை காலை வரை உண்ணா விரதமும் , ஞாயிற்றுக்கிழமை காலை, இரவு மற்றும் திங்கட்கிழமை பகல் முழுவதும் தூங்காமலும் இருந்து வழிபட வேண்டும். இந்நாளில் மெளன விரதம் இருந்து வழிபடுவது மிகவும் விசேஷம். 


கோவில் இரவு தங்கி பூஜை அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து, அபிஷேகம் நடக்கும் போது கண்குளிர காண்பதும் தேவாரம் ,சிவப்புராணம், சிவபெருமானின் போற்றிகள் சொல்லி வழிபடுதலும், முக்கியமாக திருவாசகம் அன்றைய தினம் முற்றோதல் செய்வது சிறப்பிலும் சிறப்பு. கோவிலுக்கு போக முடியாதவர்கள் வீட்டிலேயே இவற்றை செய்யலாம். 


இரவு முழுவதும் கண்விழிக்க முடியாதவர்கள் நிஷித காலத்தில் அதாவது சிவபெருமானை அம்பிகை வழிப்பட்ட நேரமான (இரவு 12 முதல் 1மணி வரை) மூன்றாம் ஜாம பூஜை வரையாவது கண்விழித்து நீலகண்டணை வழிப்பட்ட வேண்டும் இது மிகவும் சக்திவாய்ந்த நேரம் என்பதால் பாக்கியத்தை பெற்று தரும். 


வேதங்கள் முறையில் -முதல் ஜாமத்தில் ரிக் வேதமும், இரண்டாம் ஜாமத்தில் யஜுர் வேதமும், மூன்றாம் ஜாமத்தில் சாம வேதமும், நான்காம் ஜாமத்தில் அதர்வண வேதமும் பாராயணம் செய்யப்படுகிறது. இந்த முறைகளை பின்பற்றியே கோவில்களில் அபிஷேகம்  நடைபெறுகிறது. 

 

சிவராத்திரியின் மேலும் சில சிறப்புகள்




சிவபெருமான் காலனை காலால் உதைத்த நாள், லிங்கோத்பவராக சிவபெருமான் தோன்றிய நாள்,  உமையவள் சிவனிடம் ஆகம உபதேசம் பெற்ற நாள், பரமனின் பாதியாக பார்வதி இடம் பிடித்த நாள், கண்ணப்பர் நாயனார் தனது கண்களை சிவலிங்கத்தின் மீது அப்பிய நாள், பகீரதன் கங்கையை பூமிக்கு கொண்டு வந்த நாள், மார்க்கண்டேயன் எமனிடம் இருந்து விடுபட்ட நாள்,இவ்வளவு சிறப்புகளை கொண்ட சிவராத்திரி சிவபெருமான் நஞ்சு உண்ட நாள்.


மஹா விஷ்ணு சிவராத்திரி விரதத்தை கடைப்பிடித்து தான் மஹாலக்ஷ்மியையும், சக்ராயுதத்தையும் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. பிரம்மனும் இவ்விரதத்தை மேற்கொண்டு தான் சரஸ்வதி தேவியை மணந்தார். 

தொடர்ந்து எவரொருவர் 24 வருடங்கள் சிவராத்திரி விரதத்தை முறையாக மேற்க்கொள்கிறாறோ அவர் சிவ சக்தியின் திருவடியை அடைவதும், அவரின் 21தலைமுறைகள் நற்கதி பெற்று முக்தி அடைவர். 


ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு திதி உள்ளது, சிவனுக்கானது கடைசி திதியான சதுர்த்தசி ஆகும். 

இதற்கு உயிர்கள் அனைத்தும் வாழ்வின் கடைசியில் அவரையே அடைகின்றன என்பதை  கூறவே கடைசி திதி. 


நாமும் மஹா சிவராத்திரி விரதத்தை    விதி முறைகளுடன்  முறையாக மேற்கொண்டு நற்கதி பெற்று சிவலோக வாழ்வைப் பெறுவோம். 


ஹர ஹர நம பார்வதி பதயே 

ஹர ஹர மஹாதேவா 

தென்னாடுடைய சிவனே போற்றி 

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி...