கண்நிறைந்த கணவா... கணவனுக்கு ஓர் கடிதம்!
- பா.பானுமதி
கைப்பிடித்த நாள் முதல் கரிசனம் காட்ட தவறவில்லை நான்
கள்ளமில்லா உன் நெஞ்சம்
ஆனால் கனிவு காட்ட தெரியவில்லை
வஞ்சமில்லா உன் நெஞ்சம் வசீகரிக்க தெரியவில்லை என புரிந்து கொண்டேன்
தந்தை சொன்னதால் உன்னை தலைவணங்கி ஏற்றுக் கொண்டேன்
மணம் செய்த நாள் முதல் உன் மனம் அறிந்து நடந்து கொண்டேன்
உன் வீடு வெறுப்பு காட்டினாலும் பொறுப்புடனே கொண்டேன்
உன் உறவுகள் உதாசீனப்படுத்தினாலும் பரிவுடன் நடந்தேன்
புரிதல் இன்றி நீ புண்படுத்திய போதெல்லாம் பொறுமையுடனே இருந்தேன்
நல்மனைவியாய் சிறந்த மருமகளாய் சரியாக நடந்து கொண்டேன்
தாயாக மாறியதும் தலைவனோடு சேர்த்து பிள்ளைகளையும் தாங்கினேன்
எப்போதும் தூங்க முடியாமல் தூங்கினேன்
எண்ணற்ற வேலைகள் தாங்கி மூச்சு வாங்கினேன்
பிள்ளைகளை பேணிவளர்த்து பெரியவரான பின் வாழ்க்கைக்கு வழிகாட்டி கடமை முடிந்தது
ஆரம்பத்தில் காதல் எதிர்பார்த்தேன்
கட்டானது
ஆனால் மோதல் மட்டும் தினமும் ஹிட்டானது
பூ வாங்கி தரவில்லை பொறுத்துக் கொண்டேன்
பொன் வாங்கி தரவில்லை என் வருமானத்தில் சேமித்துக் கொண்டேன்
புன்னகை கூட தரவில்லையே
அதில் தான் நொறுங்கி விட்டேன்
அதிகாரம் காட்டி அடிமையாக்க முனைந்தாய்
உன் மீது கொண்ட அன்பினால் அடி பணிந்திருந்தேன்
சினம் கொண்ட சிடுசிடுத்து சீறி விழுந்தாய்
மனம் நொந்தே காலம் கழித்தேன்
மென்மையாக பேச தெரியாவிட்டாலும் நன்மைகள் நாளும் செய்தாய்
வன்மையாக இருந்தாலும் உண்மையாக நடந்து கொண்டாய்
சேவைகள் செய்யாவிட்டாலும் தேவைகள் தெரிந்து செய்தாய்
கலைநயம் தெரியாவிட்டாலும் கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறினாய்
சரியான கணவனாய் நடந்து கொள்ளாவிட்டாலும் சிறப்பான தந்தையாக நடந்து கொண்டாய்
உன்னை நான் அறிவேன் உன் உயிரிலே நான் ஒளிருவேன்
அழகாக பேச தெரியாத அறிவன் நீ
பொழுதுபோக்கிலே நாட்டமின்றி உழைத்த புனிதன் நீ
என் கடைசி காலம் என் கண்களுக்கு தெரிகிறது
என் காலத்திற்கு பின்னே உனக்கு கை கொடுப்பவர் யார்
கடவுளிடம் வேண்டிக் கொண்டேன்
என் பொறுமையும் புண்ணியத்தையும் எடுத்துக்கொண்டு கணக்கு பார்
அது என்னவனின் ஆயுளை விட அதிகமாகவே இருக்கும்
அதை வைத்துக்கொண்டு அவருக்கு கடைசிவரை கருணை காட்டு அவர் வாழ்வில் அமைதி கூட்டு...
என்னை இனிதாய் அனுப்பி வையுங்கள் இறைவன் துணை கொண்டு வாழுங்கள்
இப்படிக்கு
உங்கள் சரிபாதி மனைவி
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)