வெள்ளனையே எந்திருச்சு.. வாசக் கூட்டி சாணி தெளிச்சு.. மாமன் மகளே!
- க.முருகேஸ்வரி
வெள்ளனையே எந்திரிச்சு,
பனிவிலகும் முன்னமே வாசக் கூட்டி,
பச்சத் தண்ணி தெளிச்சு
பக்கத்து வீட்டுப் பொண்ணுங்களோடு போட்டி போட்டு
வாசல் முழுக்க மாட்டுக் கோலம்...
அழகாத்தான் வரஞ்சுபுட்டு, புள்ளி வச்ச அத்த மகளே!
"இம்புட்டு அழகா ஆட்டுக்குட்டி வரையுறயே,
உனக்கு அறிவு எங்க போச்சு?"ன்னு மொறப்பையன் வம்புக்கு இழுக்க...
நாணத்தில் சிவந்த முகத்தை மறைச்சுக்கிட்டு
கேலி செஞ்ச மாமன் மேல மஞ்சத்தண்ணி வெரட்டி வெரட்டி ஊத்தி
ஊரே சிரிச்ச சிரிப்பொலி இன்னும் காதுல கேக்குதே!
குலதெய்வம் கோவிலுக்கு குடும்பத்தோடு போயிவந்து
வெல்லம் போட்ட சர்க்கரைப் பொங்கல் வாயில் இனிக்க
ஆத்துல தான் குளிக்க வச்சு, கொம்பு சீவி, வர்ணம் பூசி அலங்கரிச்ச காளையெல்லாம் -
கம்பீரமா பெருமாள் கோவிலில் இருந்து கெளம்பி
"அங்கனுக்குள்ள வருதுன்னு" அப்பத்தா சொல்லக் கேட்டு
பயந்து போய் தூணுக்குப் பின்னாடி மறஞ்சு நின்னு...
வாடிவாசல் ஜல்லிக்கட்டுப் பார்க்கப் போயி
புழுதிப் பறக்க காளைகளும், காளையரும் மோத
வெற்றிப் பேச்சும், கரும்பு தின்னப் போட்டியும் ஆத்தா ஆக்கி வச்ச கறி சோற -
கமகமக்க வாழை இலையில் ஆளுக்கொரு பிடிபிடிச்சு
ஆட்டம் போட்ட மாட்டுப் பொங்கல்!
ஆனால் இன்று...
அதே பொங்கல் தான்,
ஆனா கொண்டாட்டம் தான் காணோம்!
அடுக்ககச் சிறைக்குள்,
சென்னை மாநகரிலே நான்கு செவத்துக்குள்ளே...
வாசல் கோலம் வாடிப் போச்சு,
மஞ்சத் தண்ணி விளையாட்டு மறைஞ்சு போச்சு,
கறிச் சோறு மணம் 'ஆப்'-களில் முடிஞ்சு போச்சு!
உணர்வுகள் இருந்தும் பகிர்வு இல்லை,
கொண்டாட்டமெல்லாம் கையில் இருக்கும்
சின்னஞ்சிறு செல்போனில் தொலஞ்சிடுச்சே!
(க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வயலாநல்லூர், பூவிருந்தவல்லி)