அடுப்பங்கரை வாசம்!

Su.tha Arivalagan
Nov 23, 2026,01:07 PM IST

- கவிதை மழை அ.நவஜோதி அருண்


வானம்

பார்த்தபடி

வாசலில்

விளையாடி

வீடுபோக... 


சாணம்

மெழுகிய

அம்மாவின்

அடுப்படி

மேடை...


மொட்டைக்

குண்டா

நெற்றியும்

அடுப்படியும்

குங்குமமிட்டு..




கோவில்

பூசாரி

கணக்காய், 

பக்தியில்

பரவசமூட்டும்.. 


அம்மா முகம்

தேவதையாய்

மின்னிமின்னி

மறையும்.. 


மரவிறகு

மனசார

எரியும்போதே... 

மசாலாவும்

அரையும்.. 


இடையிடையே, 

ஊதாங்குழலும்

கூடசேரக்

கச்சேரி பாடும்...


உலை வைத்த

அரிசியோ? 

ஊரே மணக்கும்... 


அரைத்துவிட்ட

மீன்குழம்பு, 

மனதை

சுண்டி

இழுக்கும்..


சிவப்பும், 

மஞ்சளும், 

கலந்து.. 

நெருப்பெனவே

நடனமிடும்..


ஒற்றையடுப்பு

இருதலை

எரிய.... 

ஒருவழியாய்ச்

சோறாகும்...

 

வட்டமிட்டு

அமர்ந்திடவே.. 

சிம்னி விளக்கில்

பரிமாறப்படும்..


குடும்பமாய்

கூடி

உண்ண... 

குதூகலத்திற்கு

பஞ்சமேது?


கூட்டுக் குடும்பம். 

அடுப்பு

சமையலைப்போல்

அருமையேது? 


அந்தக்காலச்

சமையல்

நெஞ்சில்

நிழலாய்

அடுக்கும்...


மங்களகர

பெண்போல, 

மனசுக்குள்...

விறகடுப்பு

கிடக்கும்


(கவிதை மழை அ. நவஜோதி அருண்குமார், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர். கவிதைகள் எழுதி வருபவர். இசையில் நாட்டம் கொண்டவர்.  சமூக அக்கறையுடன் கூடிய படைப்புகளைக் கொடுத்து வருகிறார்)