பேசும் கிளி!

Nov 23, 2026,01:02 PM IST

- ராஜஸ்ரீ


வேலையா ஒரு கிளியை வளர்த்து வந்தான்.  அதற்கு மீனாட்சி என்ற பெயரை வைத்தான். பிறகு பேசுவதற்கு பயிற்சியளிக்க விரும்பினான். அதை என்ன சொல்ல பயிற்சியளிக்கலாம்? என யோசித்தான்.


முதலில்  மீனாட்சி என்று சொல்ல வைக்கலாமா? என்று நினைத்தான். அது அவனுக்கு சரியாகத் தோன்றவில்லை.


பிறகு வேறு ஒன்றை நினைத்தான். அதுவும் சரிப்படவில்லை. இறுதியில் இதிலென்ன சந்தேகம் என்று சொல்ல பயிற்சியளிக்கலாம் என முடிவு செய்தான்.


ஒரு வாரம் பயிற்சியளித்தான். அந்த பயிற்சியின் பயனாக அது இதிலென்ன சந்தேகம் என்று சொல்ல நன்கு பழகிவிட்டது.


இந்த நிலையில், இவனுக்கு திடீரென கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டு விட்டது. ஆஸ்பத்திரியில் காண்பித்தான். மருத்துவர்கள் சில மருந்து மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார்கள். அவையெல்லாம் வாங்க ஆயிரம் ரூபாய் தேவைப்பட்டது. 


இவனோ மிகவும் வறுமையில் வாடுபவன். பணத்திற்கு என்ன செய்வது? என யோசித்த பொழுது வேறு வழியின்றி மனதை கல்லாக்கிக் கொண்டு கிளியை விற்றுவிட முடிவு செய்தான். பிறகு அழுது கொண்டே கிளியிடம் மீனா கண்ணு, உன்னை விற்கவில்லை. உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன் என்றான்.




பிறகு அதை சந்தைக்கு எடுத்துச் சென்று இவ்வாறு அறிவிப்பு எழுதி வைத்தான்.


அற்புதமான  கிளி. இரண்டாயிரம் ரூபாய். ஒரு செல்வந்தர்  வந்தார். அவனிடம் கிளி இரண்டாயிரம் ரூபாயா? என்று கேட்டார். 


வேலையா ஆமாம் சாமி, வேணும்னா கிளியையே கேளுங்க என்றான். 


அவரும் என்ன கிளியே, உன் விலை இரண்டாயிரம் ரூபாயா? என்று கேட்க கிளியும் இதிலென சந்தேகம்? என்றது.


உடனே அவர் மகிழ்ந்து இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து கிளியை வாங்கிச் சென்றார். வேலையா அழுதுகொண்டே அதற்கு விடை கொடுத்தான்.


செல்வந்தர் தன் வீட்டிற்கு அந்த கிளியை எடுத்து வந்தார். சில கேள்விகளைக் கேட்டார். எல்லாவற்றிற்கும் இதிலென்ன சந்தேகம் என்ற பதிலையே சொன்னது.


அதைக் கேட்ட செல்வந்தர் இந்த கிளி நிறைய பேசும் என நினைத்து வாங்கின நான் ஒரு முட்டாள்தான் என்றார். உடனே கிளி இதிலென்ன சந்தேகம் என்றது.


உடனே செல்வந்தர் கோபத்துடன் இனி நீ இங்க இருக்க வேண்டாம் என்று கூண்டை திறந்து விட்டார்.


கிளி பறந்து நேராக வேலையா வீட்டிற்கு வந்து அவன் மடியில் விழுந்தது. உடனே வேலையா, மீனா கண்ணு, வந்துட்டியாடி என ஆனந்தக் கண்ணீர் மல்க அதை அணைத்துக் கொண்டான். கிளியும் திரும்ப  வந்து விட்டது; இரண்டாயிரம் ரூபாயும் கிடைத்து விட்டது.


வேலையா இரட்டை லாபம் அடைந்தான்.


(ராஜஸ்ரீ என்கிற வி.பி.ஸ்ரீநிவாசன். சென்னை அம்பத்தூரில் வசிக்கிறார். ஓய்வு பெற்ற மத்திய அரசு அலுவலர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்