திருப்பரங்குன்றம் தீப சர்ச்சை விவகாரம்: அரசு தலைமை வழக்கறிஞருடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

Nov 23, 2026,12:49 PM IST

சென்னை: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை விவகாரம் குறித்து, தமிழக முதல்வர் விஜய், அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணனுடன் தலைமைச் செயலகத்தில் இன்று (நவம்பர் 23, 2026) முக்கிய ஆலோசனை நடத்தினார்.


முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இத்திருவிழாவின் போது, மலை உச்சியில் அமைந்துள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் மண்டபத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. ஆனால், மலையின் உச்சியில் உள்ள மற்றொரு பகுதியில் தீபம் ஏற்ற வேண்டும் என சில அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. 


இது தொடர்பாக ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இப்பிரச்சனை மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருப்பரங்குன்றம் மலை மீது இருக்கும் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில், இந்த ஆண்டு மட்டும் தீபம் ஏற்ற சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் அனுமதி அளித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சில அரசியல் கட்சிகளும், மத அமைப்புக்களும் போராட்டங்கள் மற்றும் அமைதி பேரணி அறிவித்திருந்தன. ஆனால் பொது அமைதியை மனதில் கொண்டு மதுரை போலீசார் பேரணி மற்றும் போராட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ளது. 




இதற்கிடையில் சுப்ரீம் கோர்ட் வழங்கிய உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு சார்பில் சமீபத்தில் ஆன்லைன் மூலமாக மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மறுசீராய் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கார்த்திகை தீபம் ஏற்ற இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், ஒருவேளை இன்று தமிழக அரசின் மறுசீராய்வு மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டால் கோர்ட் எந்த மாதிரியான உத்தரவை பிறப்பிக்கும் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.


தற்போது கார்த்திகை தீபத் திருவிழா நெருங்கி வரும் சூழலில், சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுப்பதற்கும், நீதிமன்ற உத்தரவுகளை முறையாகப் பின்பற்றுவதற்கும் தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை, அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்தச் சந்திப்பின் போது, திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பான முந்தைய நீதிமன்றத் தீர்ப்புகள், தற்போது நிலுவையில் உள்ள வழக்குகளின் நிலை மற்றும் அரசின் சார்பில் எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. 


மேலும், மத நல்லிணக்கத்தைப் பேணும் வகையிலும், எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாத வகையிலும் சட்டரீதியாக இப்பிரச்சனையை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து அரசு தலைமை வழக்கறிஞரிடம் முதல்வர் விஜய் கேட்டறிந்துள்ளார். கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வரும் நிலையில், முதல்வர் தலைமையில் நடைபெற்ற இந்த உயர்மட்ட சட்ட ஆலோசனை அரசியல் மற்றும் ஆன்மீக வட்டாரத்தில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. அரசு தலைமை வழக்கறிஞரின் ஆலோசனையின் அடிப்படையில், இது குறித்து தமிழக அரசு விரைவில் முக்கிய அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்